ஏரின்றி அமையாது உலகு: ஊருக்கு உழைத்த விவசாயியும் விவசாயிக்கு உழைத்த ஊரும்

By பாமயன்

ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழகத்தின் கிராமப்புற வாழ்க்கை முறை இன்றைய நிலையில் இருந்து முற்றிலும் மாறியிருந்தது. ஊர்ப்புறங்கள் பெரிதும் தமது தேவைகளைத் தாங்களே நிறைவு செய்துகொண்டன. நகரங்கள், கிராமங்களைச் சார்ந்துதான் இருக்க வேண்டி இருந்தது.

குறிப்பாக உணவுக்கும், வேறு பல சேவைகளுக்கும் கிராமங்கள்தான் பேருதவி செய்துவந்தன. இன்றைக்கோ நிலைமை தலைகீழ். நகரங்களை நம்பியே கிராமங்கள் உள்ளன. நகரத்தில் கூலி வேலை செய்தால் மட்டுமே, பல கிராமங்களில் அடுப்பெரியும் நிலை உள்ளது.

இயற்கை மீது இன்றைக்குத் தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான தாக்குதல், சிற்றூர்களில் அன்றைக்கு இல்லாமல் இருந்தது. நீரின் ஆழம் எட்டத்தக்கதாக இருந்தது. வேளாண்மை நீராதாரங்களான கண்மாய், குளங்கள், கிணறுகள் போன்றவற்றில் இருந்து நீர் கிடைத்தது. பணப் புழக்கம் குறைவாக இருந்தது. உழைப்புப் பரிமாற்றம் பெருமளவு இருந்தது.

உழைப்புப் பகிர்வு

நெல் அடிக்கும் களத்தில் உழவர்கள் நெல்லை அறுத்துக் குவித்த பின்னர், அதைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வு குறிப்பிடத்தக்கது. களத்தில் குவிந்த நெல் நீர்பாய்ச்சுவோருக்கும், சலவைத் தொழிலாளிக்கும், முடிதிருத்தும் தொழிலாளிக்கும், நிலத்தைக் காவல் செய்யும் தொழிலாளிக்கும் என்று அனைத்துச் சேவைப் பிரிவினருக்கும் வழக்கப்படி முறையாகப் பகிர்ந்து தரப்படும்.

பல நேரம் உழவருடைய பங்கு குறைவாகக்கூட இருக்கும். ஆனால், அடுத்த ஆண்டுக்கான அவருடைய வேலைகளில் பலவும் உறுதி செய்யப்படும். தேங்காய்ச் சிரட்டையைக் கொண்டு போய்க் கொடுத்தவுடன், வீட்டுக்குத் தேவைப்படும் அகப்பையைப் பணம் வாங்காமல் தச்சர் செய்து கொடுப்பார். பணம் வாங்காமல் சலவைத் தொழிலாளி சலவை செய்து கொடுப்பார். முடி திருத்தும் பணியும் அவ்வாறே நடந்தது.

சார்பும் பிரிவும்

நீண்ட நெடிய வரலாற்றில் தமிழக ஊர்ப்புறங்களில் (மன்னர்களின் நகரங்கள் அல்ல) சமூகம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் ஒரு கண்ணியாகவே நகர்ந்தது. தொழில் பிரிவின் அடிப்படையில் குழுமங்கள் (guild) இயங்கின. பின்னர் இந்தத் தற்சார்பு சமூகத்தின் சாபக் கேடாகச் சாதி முறை இறுக்கம் பெற்றது. வருணாசிரம பிறப்பின் அடிப்படையில் தொழில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சாதி (Caste) என்ற ஆதிக்க அழுக்கு, அதை இறுக்கமான அமைப்பாக்கி அடுத்த கட்ட நகர்வுக்கு இட்டுச் செல்லாமல் ஆக்கியது. விளைவு சமூகத்தில் பல படைப்பாக்கங்கள் உருவாகத் தடை ஏற்பட்டது. இதற்குப் படையெடுப்புகள், ஆதிக்க நலன்கள், பண்பாட்டு படையெடுப்புகள் என்று பற்பல காரணங்கள் இருந்தன.

வேளாண்மையே மையம்

ஆனால், இதன் உட்கூறாக வேளாண்மை என்பது ஒரு சமூகத்தையே ஒட்டுமொத்தமாகத் தாங்கி கொண்டுவந்தது. இதை 'வேளாண்மை தாங்கும் சமூகம்' என்று கூறலாம். இந்த அமைப்பில் வேளாண்மையை மையமாகக் கொண்டே அனைத்தும் இயங்கும். ஏன், ஒரு அரசும்கூட இயங்கும். எனவே, வேளாண்மையைக் காக்கிற செயல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. நீராதாரங்களை உருவாக்கி வேளாண்மையைக் காப்பவனே வரலாற்று நாயகனாக வர முடியும் என்று இலக்கியங்கள் எழுதப்பட்டன.

'நிலன்நெளி மருங்கில் நீர் நிலை பெருகத் தட்டோரம்ம இவண் தட்டோரே' என்று புறநானூற்றில் குடப்புலவியனார் கூறுகிறார்.

இன்றைக்கும் அந்த நிலையை 'வளர்ந்த' நாடுகள் பின்பற்றுகின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் எத்தனை எத்தனையோ மானியங்களைக் கொடுத்து வேளாண்மையைக் காபந்து செய்துகொள்கின்றனர். ஆனால் 'வளரும்' நாடுகள் என்று சொல்லக்கூடிய நம்மைப் போன்ற நாடுகள், வேளாண்மையைக் கைதூக்கி விடாமல் புறக்கணித்துவருவதுதான் அவலம்.

கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்