மனிதர்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் நிலம் நிலையானது, நீடித்து இருப்பது, அதனால்தான் தொல்காப்பியர், நிலத்தை முதற்பொருளாக வைத்தார். வரலாறு என்பது நிலத்தைக் கைப்பற்றும் கதையைக் கூறுவதாகத்தான் பல நூற்றாண்டுகளாக இருந்துவருகிறது.
இந்தியா என்ற நாடு உருவாகாதபோதே, பல முடியாட்சி தேசங்களாக இருந்தபோதே, நிலத்தைப் பிடிப்பதற்கான படையெடுப்புகள் நடந்தேறின. இந்தப் போர்களும் பூசல்களும் இன்னும் முடிந்தபாடில்லை. பிரித்தானியர்கள் இந்தியாவின் மீது பாய்ந்ததற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று, செல்வம் கொழிக்கும் விளைச்சல் நிலங்களும் வளமான இயற்கை வளமும்.
வரலாறு என்ன சொல்கிறது?
வெறும் வணிகம் செய்ய வந்தவர்கள் இந்தியா முழுமையையும் தங்களது கைகளுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என்று அன்றைக்கு இருந்த அக்கறையற்ற அரச குடும்பங்கள் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். இங்கிலாந்தின் கிழக்கிந்திய கும்பணி, அடிமை இந்தியாவுக்கு அச்சாரம் போட்டது.
இன்றைக்குக் கொழித்துக்கொண்டிருக்கும் இங்கிலாந்தின் வேதாந்தா கும்பணியும் (இந்தியர் நடத்துவதுதான்) அப்படித்தானே செயல்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.
ஒரு சாதாரண வணிக நிறுவனம் ஒரு நாட்டையே எப்படி அபகரிக்க முடியும் என்று அப்பாவித்தனமாகக் கேட்டால், அதற்கு வரலாற்றுப் பக்கங்களைத்தான் பதிலாகக் கொடுக்க முடியும். நவீன இந்தியாவின் வரலாறுகூட நில உரிமைப் போராட்டத்தில் இருந்துதான் தொடங்குகிறது. நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அல்லது நிலத்தைப் பறித்துக் கும்பணிகளுக்குக் கொடுக்கும் சட்டம் ஏதோ நமது ஆட்சியாளர்களின் மூளையில் திடீரென உதித்தது என்று நினைக்க வேண்டாம். வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள்!
விடுதலைப் போரின் வேர்
பிஹார் மாநிலம் அதோ சம்ரான், விளைச்சல் கொழிக்கும் மண். இப்பகுதி கங்கையின் கிளை ஆறுகளில் ஒன்றான பூரி கந்தகி என்ற ஆறும், பாகுபதி என்ற ஆறும் பாயும் பகுதி. இங்கே வழக்கமான இன்னல்களுக்கு இடையே உழவர்கள் உணவுப் பயிர்களை விளைவித்து, ஓரளவாவது வாழ்ந்துவந்தனர். ஏனெனில், இவர்களது நிலங்கள் ஜமீன்தார் முறை மூலமாகக் கைவிட்டுப் போய்விட்டன.
உழவர்கள் ஜமீன்தார்களுக்கு வரி கொடுத்த காலம். மேலும் ஓர் இடி இறங்கியது உழவர்கள் மீது. உழவர்கள் பயிர் செய்த நிலங்களைப் பிடுங்கிய ஜமீன்தார்கள், சாய அவுரி சாகுபடி செய்யப் பிரித்தானியக் கும்பணிகளுக்குக் கொடுத்தனர். வெடித்தது போராட்டம். காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய முதல் போராட்டமும் அதுவே. இன்றைய இந்தியாவின் உருவாக்கத்தில் முதலிடம் பெற்றதும் அந்தப் போராட்டமே.
காலம் காலமாக இதேபோன்று ரேபரேலி பகுதியில் நடந்த மிகக் கடுமையான ஆவாத் உழவர் போராட்டத்தில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பண்ணையார்களின் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. தங்களது பண்ணைகளைக் கைவிட்டுப் பண்ணையாளர்கள் ஓடித் தலைமறைவாகினர்.
எனவே, நிலத்தைப் பிடுங்கிக் கும்பணிகளின் கையில் கொடுப்பது என்பது ஏதோ முந்தைய காங்கிரஸ், இன்றைய பா.ஜ.க. ஆட்சிகளின் கொள்கையன்று, அது ஆங்கிலேயர்கள் ஆக்கி தந்த அருமருந்து. அதை நமது 'அக்கறையுள்ள' ஆட்சியாளர்கள் பின்பற்றுகிறார்கள்.
புதிய இந்தியாவை உருவாக்க அரும்பாடுபட்ட அன்றைய காங்கிரஸ்காரர்கள், பொதுவுடமையாளர்கள், பார்வர்டு பிளாக் அமைப்பினர் என்று பலரும் உழவர்களின் நிலங்களைப் பாதுகாக்கவே போராடினார்கள். 1936-ம் ஆண்டு சகஜானந்த சரஸ்வதி தலைமையில் கூடிய 'அனைத்து இந்தியக் கிஸான் சபை' கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் பட்டியலைப் பாருங்கள்.
நில உச்சவரம்பு
இந்திய விடுதலை கனிந்து கொண்டிருந்த காலம். நிலத்தைப் பிரித்துக் கொடுத்தால்தான் மக்கள் அமைதியுடனும் வளத்தோடும் வாழ முடியும் என்ற உண்மை தலைவர்களுக்குப் புரிந்தது. அதன் விளைவாகப் பொருளியல் அறிஞரான குமரப்பா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு 1939-ம் ஆண்டிலேயே தனது அறிக்கையைக் கொடுத்தது. அது இன்றளவிலும் மிகவும் முற்போக்கான நிலச் சீர்திருத்த அறிக்கை.
அவர் நாடு முழுவதும் சுற்றியலைந்து பல தகவல்களைத் திரட்டி அறிவியல் முறைப்படி ஆராய்ந்து, 'சிறிய நிலவுடமையே அதிக விளைச்சலைத் தரும். நிலக் குவியல் விளைச்சலை அதிகரிக்காததோடு, மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்திச் சமூகக் கலகங்களுக்கு இட்டுச் செல்லும் என்று விளக்கினார். அதை அப்படியே நேருவும் ஏற்றுக்கொண்டார். பின்னர் ஐந்தாண்டுத் திட்டத்தில் அது எதிரொலித்தது. நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் குறிப்பாக நிலத்தில் உழுபவர்களுக்கு ஓரளவு நிலம் கிடைத்தது.
உழுபவருக்கே நிலம்
மேற்கு வங்கம், கேரளத்தில் குறிப்பிடத்தக்க அளவும் தமிழகத்தில் ஓரளவும் இது நடைபெற்றது. காங்கிரஸ் ஆண்ட மற்ற மாநிலங்களில்கூட இது நிறைவேற்றப்படவில்லை. இது நடக்காத பல இடங்களில் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. ஆந்திராவில் போராட்டம் வலுப்பட்டது.
பூமிதான இயக்கம் என்று விநோபா பாவே அமைதி முறையில் நாடு முழுவதும் நிலங்களைப் பெற்று நிலமற்றவர்களுக்கு வழங்க முயன்றார். அதுவும் துயரமான முறையில், போதிய அளவு பகிர்ந்தளிக்கப்படாமல் முடிந்துபோனது.
தமிழகத்தில் தஞ்சைப் பகுதியில் நிலவுடைமைப் போராட்டம் வலுவாகத் தோன்றியது. பொதுவுடமை இயக்கம் இதை முன்னின்று நடத்தியது. சர்வோதயத் தலைவர் ஜெகநாதன் 'உழுபவனுக்கே நிலம்' என்று கூறி உழுபவர்களுக்கு நிலம் பெறும் இயக்கத்தை நடத்தினார்.
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago