சுறாக்களின் தோழி

By ஆதி வள்ளியப்பன்

சுறா மீன்களைப் பற்றிய மோசமான அச்ச உணர்வு மக்கள் மனதில் விதைக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த ஹாலிவுட் படம் 'ஜாஸ்'(Jaws). இதன் காரணமாக 70-களுக்குப் பிறகு கடல் மீன்களில் பயங்கரமான ஆட்கொல்லிகள், சுறாக்கள் என்ற மூடநம்பிக்கை பரவலானது.

அது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதையும், சுறாக்கள் எப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டவை என்பதையும் பற்றி 'சுறாக்கள்: சிறப்புகளும் தவறான புரிதல்களும்' (Sharks: Magnificent and Misunderstood) என்ற கட்டுரையை நேஷனல் ஜியாகிரஃபிக் இதழில் எழுதினார் யூஜினி கிளார்க். கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தன் 92-வது வயதில் காலமான இவர் சர்வதேசச் சுறா, மீன்கள் ஆராய்ச்சி அறிஞர் (ichthyologist).

கடலில் குதித்துவிட்டால், ஒரு மீனாகவே மாறிப் பாய்ந்து நீந்திச் செல்லும் உற்சாகம் மிகுந்தவர். உலகின் மிகப் பெரிய மீன் இனமான பெட்டிச்சுறா முதற்கொண்டு பல வகை சுறாக்களுடன் எத்தனையோ முறை நீந்திச் சென்றிருக்கிறார். ஆனால், ஒரு முறைகூடச் சுறாவால் யூஜினி கடிபட்டதே இல்லை.

ஆழ்கடலில் ஒரு மீன்

புதியதை அறியவேண்டும் என்ற உந்துதல், சாகசம் மனோபாவத்துடன் துணிச்சலும் நிரம்பிய யூஜினியின் பிரபல அடையாளம் 'சுறா பெண்' என்ற பட்டம். சுறாக்களைப் பற்றிய ஆராய்வதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.

கடல் ஆராய்ச்சியில் பெண்கள் களம் இறங்குவதற்கு முன்னோடியாக இருந்தவர் யூஜினி. ஸ்கூபா டைவிங் எனப்படும் கடலில் மூழ்கி ஆராயும் ஆழ்கடல் ஆராய்ச்சியில் 72 முறை பங்கேற்றுள்ளார். 12,000 அடி ஆழம்வரை நீந்தி இருக்கிறார். 92-வது பிறந்த நாளின்போதுகூடச் செங்கடலில் நீந்தினார். இத்தனைக்கும் நுரையீரல் புற்றுநோய், அவரைத் தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுறாவும் கடலும் யூஜினி கிளார்க்கினுடைய வாழ்க்கையின் ஒரு பாகமாக மாறுவதற்குக் காரணம் என்ன?

காட்சியகக் கற்பனை

நியூயார்க் நகரில் பிறந்த யூஜினி கிளார்க்குக்கு, ஆங்கிலத்தில் ஜீனி என்றொரு செல்லப் பெயர் உண்டு. அதற்குத் தேவதை என்று அர்த்தம். ஜப்பானியரான அம்மா யுமிகோ, நல்ல நீச்சல்காரர். அமெரிக்கரான அப்பா சார்லஸ் கிளார்க், நீச்சல் பள்ளியின் மேலாளர். யூஜினி சிறு குழந்தையாக இருந்தபோதே சார்லஸ் இறந்துவிட்டார்.

கடலை மையமாகக் கொண்ட அம்மாவின் ஜப்பானியப் பண்பாடே, கடல் மீது தனக்குத் தீராத காதல் பிறப்பதற்குக் காரணம் என்று யூஜினியே குறிப்பிட்டிருக்கிறார்.

இரண்டு வயதுக்கு முன்னரே நீந்தக் கற்ற அவர், 9 வயதில் மான்ஹாட்டனில் உள்ள நியூயார்க் மீன் காட்சியகத்துக்குச் சனிக்கிழமைகளில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். நேரக் கணக்கின்றி மீன்களைப் பார்த்துக்கொண்டிருப்பது யூஜினிக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. சுறா மீன்கள் இருக்கும் கண்ணாடித் தொட்டிக்குள் தானும் நீந்தினால் எப்படியிருக்கும் என்று அவர் கற்பனை பல நாள் கிளைவிட்டிருக்கிறது. கடலியல் ஆராய்ச்சியாளராக மாற வேண்டும் என்ற கனவாக அது உருக்கொண்டது.

நினைத்ததும் நடந்ததும்

இளங்கலை விலங்கியல் பட்டம், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் முடித்த பிறகு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் பட்டத்தில் சேர்வது என்று தன் கனவைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டிருந்த யூஜினி.

அப்போது யூஜினியைச் சந்தித்த ஒரு பேராசிரியர் "முதுமுனைவர் பட்டம் முடித்த பிறகு உங்களுக்குக் கல்யாணம் நடக்கும், குழந்தைகள் பிறப்பார்கள். எங்கள் நேரத்தையும் பணத்தையும் மொத்தமாகச் செலவழித்து முடித்த பின்னர், அறிவியல் கள ஆராய்ச்சி எதையும் செய்யாமல் வீடுகளுக்குள் அடைந்துவிடுவீர்கள் " என்று சுட்டிக்காட்டினார்.

ஆனால், அந்தப் பேராசிரியரின் கருத்தைப் பொய்யாக்கினார் யூஜினி. பல முறை திருமணம், 4 குழந்தைகளுக்குப் பிறகும் உலகம் புகழும் சுறா ஆராய்ச்சியாளராக மாறினார்.

கடல் ரகசியங்கள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆண்களே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த கடல் உயிரியலில் யூஜினியும் சில்வியா இயர்லும் பெண் கடல் உயிரியலாளர்களுக்கு முன்மாதிரிகளாக உருவானார்கள். 1953-ல் தன் முதல் கட்ட ஆராய்ச்சி அனுபவங்களின் அடிப்படையில் யூஜினி எழுதிய 'லேடி வி எ ஸ்பியர்' புத்தகம் சர்வதேச அளவில் விற்பனையில் சாதனை படைத்தது. பின்னர் எழுதிய 'தி லேடி அண்ட் தி ஷார்க்ஸ்' (1969) புத்தகத்தில் சுறாவின் பழக்கவழக்கங்களையும், கடல் வாழ்க்கையின் ரகசியங்களையும் அற்புதமாக விவரித்திருக்கிறார்.

இன்றைக்கு மதிப்புமிக்க கடல் ஆராய்ச்சி நிறுவனமாக மதிக்கப்படும் மோட் (MOTE) என்ற கடலியல் ஆய்வகத்தை ஃபுளோரிடாவில் நிறுவினார். அன்றைக்கு, தனியார் நிதியுதவியுடன் ஒற்றை ஆராய்ச்சியாளராக அவரை மட்டும் கொண்டிருந்தது இந் நிறுவனம். இன்றைக்கு, 24 பன்முக ஆராய்ச்சித் திட்டங்களுடனான முழு நேர ஆய்வு மையமாகவும், கல்விப் புலம், பொதுமக்களுக்கான மோட் மீன் காட்சியகத்துடன் அது இயங்கிவருகிறது.

ஆராய்ச்சிக்குத் தடை

ஸ்கிரிப்ஸ் கடலியல் நிறுவனத்தில் அவர் வேலை பார்த்தபோது, கடலடியில் நீந்தும் ஸ்கூபா டைவிங்கை கற்றுக்கொண்டார். ஆனால், பாலினச் சமத்துவம் பேணப்படாத மோசமான சூழ்நிலையும் அங்கிருந்தது. கலாபகாஸ் தீவுகளுக்குச் செல்லும் பெண்கள் இரவு தங்கல் ஆராய்ச்சியில் பங்கேற்க, அந்நிறுவனம் தடை விதித்திருந்தது.

பின்னர் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் 1968-ல் சேர்ந்து ஓய்வு பெறும் வரை பேராசிரியராகப் பல மாணவர்களுக்குக் கடல் உயிரியலைக் கற்பித்தார். கடைசி காலம் வரை மோட் ஆராய்ச்சி மையத்தின் அறங்காவலராக இருந்தார்.

மூடநம்பிக்கைகளுக்கு விடை

சுறாக்களைப் பற்றி 1950-களில் யூஜினி ஆராய்ச்சி செய்வதற்கு முன் சுறாக்கள் சத்தம் எழுப்ப முடியாதவை, பயங்கரமானவை என்று நம்பப்பட்டன.

மற்றக் கடல் மீன்களைப் பற்றி ஆராய்ந்து, பல புதிய மீன் இனங்களை அவர் கண்டுபிடித்திருந்தாலும், அவருடைய முதன்மை ஆராய்ச்சி சுறாக்களைப் பற்றியதே. மக்களின் மூடநம்பிக்கைகளைக் களையும் வகையில் அது அமைந்திருந்தது.

1975-ல் சுறாக்களின் மீதான மூடநம்பிக்கைகளைப் பரவலாக்கிய ‘ஜாஸ்' என்ற ஹாலிவுட் படம் வெளியான பிறகு, நேஷனல் ஜியாகிரபிஃக் இதழில் சுறாக்களைப் பற்றி அறிவியல்பூர்வமான விரிவான கட்டுரையைப் பதிலுரை போல எழுதினார். நேஷனல் ஜியாகிரஃபிக் இதழில் 12க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேஷனல் ஜியாகிரஃபிக் நிறுவனத்துக்காக டிவி நிகழ்ச்சிகளையும் தயாரித்திருக்கிறார்.

ஒரு பகுதியில் இருந்து சுறாவை உத்தரவாதமாக விரட்டும் பொருளை யூஜினி முதன்முதலில் கண்டறிந்தார். அது செங்கடலில் உள்ள மோசஸ் சோல் எனப்படும் தட்டையான மீனின் சுரப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. சோதனைக் குழாய் மீன் குஞ்சுகளை உருவாக்கியதிலும் யூஜினி, ஒரு முன்னோடிதான்.

சுறாக்களின் இழப்பு

அவருடைய பணிகளைப் பாராட்டி நேஷனல் ஜியாகிரஃபிக் சொசைட்டி, எக்ஸ்புளோரர்ஸ் கிளப், அமெரிக்கக் கடலடி சங்கம், அமெரிக்க லிட்டோரல் சொசைட்டி, பெண் புவியியலாளர் சங்கம் ஆகியவற்றின் தங்கப் பதக்க விருதுகளை வழங்கியுள்ளன.

அவருடைய மீன் ஆராய்ச்சிகள் மிகப் பெரிய திருப்புமுனைகளாக அமைந்துள்ளன. இருந்தபோதும் பொது மக்களிடம் கடல், கடல் உயிரினங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததிலும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுமே யூஜினியின் முக்கியப் பங்களிப்பு. யூஜினியின் இழப்பு நமக்குப் பெரிதோ, இல்லையோ சுறாக்களுக்கு மிகப் பெரிய இழப்புதான்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்