வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்!

By ந.வினோத் குமார்

"பறவையின்றிப் பறக்கச் சிறகுகளுக்கும்
சிறகுகளின்றிப் பறக்கப் பறவைக்கும்
கூடி வந்த சூட்சுமம்
என் அகத்தில் விரிந்தபோது
துவண்டு கிடந்த என் மனத்தில்
ஒரு பூ மலர்ந்தது..."

சுந்தர ராமசாமியின் கவிதை வரிகள் இவை. ‘பறவை நோக்குதல்' எனும் நிகழ்வில் நமக்கு நேர்வதும் இதே அனுபவம்தான்!

மரக்கிளையில், இலைகளின் மறைவில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை 'பட்'டென்று சிறகுகளை விரித்து 'படபட'வெனப் பறக்கும்போது, அது எந்த வகைப் பறவை என்று நாம் அறிந்துகொள்ளும் ஒற்றை நொடியில் இயற்கையுடன் நாமும், நமக்குள் இயற்கையுமாக ஒன்றறக் கலந்துவிடுகிறோம்.

பறவை பந்தயம்

'பறவை நோக்குதலின்' அடுத்தபடி, பறவை பந்தயம். புறாக்களைப் பறக்கவிட்டு, முதலில் இலக்கைத் தொடும் புறாவுக்குப் பரிசு தரும் போட்டியல்ல இது.

'பறவை நோக்கு'தலில் விருப்பமுள்ளவர்கள் நான்கு நான்கு பேர் கொண்ட குழுவாகப் பிரிந்துகொள்கிறார்கள். இயற்கை செழித்துள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, எந்தெந்தப் பறவை வகைகள் அங்கே இருக்கின்றன என்று பட்டியலிடுவார்கள். இயற்கையின் செழிப்பு, உயிரினங்கள்-பறவைகள் அங்கே வாழ்வதற்கு உகந்த தன்மை, இயற்கை நமக்குக் கணந்தோறும் தந்துகொண்டிருக்கும் இலவசச் சேவைகள் எனப் பல விஷயங்களை இதன் மூலம் நேரடியாக உணர்ந்துகொள்ள முடியும்.

இதனை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட்டு, பறவைகளையும் அவை வாழும் சூழல்மண்டலத்தையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க முடியும். இது போன்ற பறவைப் பந்தயங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகின்றன. சென்னையில் ஜனவரி 25-ம் தேதி பறவை பந்தயம் நடைபெற்றது.

ஆச்சரிய அனுபவம்

இந்தப் பறவை பந்தயத்திலும் பொதுப் போக்குவரத்து முறையை மட்டுமே பயன்படுத்தும் பசுமை பறவை ஆர்வலர்கள் குழுவினருடன் அடையாறு தியசாபிகல் சொசைட்டிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பைச் சிறப்பித்தது வேட்டைக்கார ஆந்தையின் (Brown hawk owl - Ninox Scutulata) தரிசனம்.

நீண்ட காலத்துக்குப் பிறகு வேட்டைக்கார ஆந்தை சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார், அதை அடையாளம் கண்ட பேராசிரியர் முருகவேள். "பட்டம் விடப் பயன்படும் 'மாஞ்சா' நூலில் இது போன்ற ஆந்தைகள் மாட்டிக்கொண்டு பெரும் துயரத்துக்கு ஆளாகின்றன. காடு அதிகமுள்ள பகுதிகளில் மட்டுமே காணப்படக் கூடிய இந்த வகை ஆந்தை, சென்னையில் காணப்படுவது அதிசயம்தான்" என்றார்.

அரிய வகை ஆந்தை

கூச்சச் சுபாவம் மிகுந்த இந்தப் பறவையின் குரல் விசித்திரமானது. ஒவ்வொரு முறையும் வேறு வேறு குரல்களில் ஒலி எழுப்பக்கூடியது. அதனால் இதை அடையாளம் காண்பதிலும் சில சிக்கல்கள் உள்ளன.

ஆந்திராவில் ரிஷிவேலியில் உள்ள பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று நிறுவனத்தைச் சேர்ந்த வி.சாந்தாராம் இந்தப் பறவை குறித்து மேலும் சில ஆச்சரியத் தகவல்களைத் தருகிறார்:

"இதே தியசாபிகல் சொசைட்டியில் 80-களில் இந்தப் பறவையை முதன்முதலாக அடையாளம் கண்டு பதிவு செய்திருக்கிறேன். அதன் பிறகு கிண்டி தேசியப் பூங்காவிலும் ஒருமுறை பதிவு செய்திருக்கிறேன். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இப்போதுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிய வகைப் பறவை என்று சொல்ல முடியாவிட்டாலும், சென்னை போன்ற நகர்ப் பகுதிகளில் இதைப் பார்க்க முடிவது உண்மையிலேயே ஆச்சரியம்தான்" என்கிறார்.

தியசாபிகல் சொசைட்டி போன்று இயற்கைச் செழிப்பை நிர்மூலமாக்காத பகுதி இருப்பதால்தான் இதுபோன்ற அரிய பறவைகள் சென்னையில் உயிர்த்திருக்கின்றன.

காப்பாற்றுவோமா?

ஒரு காலத்தில் பட்டைக் கழுத்து ஆந்தை, கொம்பன் ஆந்தை, பொரிப்புள்ளி ஆந்தை, புள்ளி ஆந்தை, கூகை போன்ற ஆந்தை வகைகளுக்கு சென்னை வாழிடமாக இருந்திருக்கிறது.

அந்த ஆந்தைகளின் வரிசையில், ' வேட்டைக்கார ஆந்தையும் ஒரு காலத்தில் சென்னையில் இருந்தது' என்று வெறும் பதிவாக மட்டும் மாறிவிடுவதைத் தவிர்க்க, இது போன்ற அரிய பறவைகள் வாழ்வதற்கு உகந்த இயற்கை செழிப்பிடங்களை இனிமேலாவது முழுமையாகப் பாதுகாக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்