ஜே.சி. குமரப்பாவின் ஆய்வுகளில் முத்தாய்ப்பானது ‘மன்னுமைப் பொருளியம்' (Economy of Permanance). இது இன்றைய உலகுக்கு அத்தியாவசியமான கருத்தியலாக உள்ளது. சூழலியல் சீர்கேடுகளும், இயற்கை வளங்களின் பற்றாக்குறையும், பெரும் அழிவையும் உருவாக்கியுள்ள இச்சூழலில் பசுமைச் சிந்தனையை முன்வைத்த மேதையாகக் குமரப்பா திகழ்கிறார். எந்த ஒரு பொருள் உற்பத்தி முறையும் இயற்கையின் சுழற்சியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மாறாகப் போகும்போது, பெரும் தொல்லைகள் உருவாகும்.
தீராத வளங்கள்
இன்றைய உலகம் நிலக்கரி, கன்னெய் (பெட்ரோல்), இரும்பு, செம்பு, தங்கம் ஆகியவற்றைப் பெரிதும் சார்ந்துள்ளது. இவை ஒரு குறிப்பிட்ட அளவே இருக்கக்கூடியவை, குறைந்த காலத்துக்கு மட்டுமே கிடைக்கக்கூடியவை. ஆனால் ஆற்றில் ஓடும் நீரும், காட்டில் வளர்ந்துகொண்டு இருக்கும் மரங்களும் தொடர்ச்சியாகக் கிடைக்கக் கூடியவை. இவை மன்னியமானவை அதாவது நிரந்தரமானவை, தொடர்ந்து மக்களுக்குக் கிடைக்கக்கூடியவை. அவர் இதைத் தேக்கப் பொருளியம் என்றும், ஓட்டப் பொருளியம் என்றும் பிரிக்கிறார்.
கன்னெய் வளம் பெருமளவு கிடைத்துக் கொண்டிருந்த காலத்திலேயே, அதன் போதாமையைப் பற்றி சிந்தித்தவர் குமரப்பா. புதுப்பிக்கக்கூடிய வளங்களைப் பற்றியும், புதுப்பிக்க இயலாத வளங்களைப் பற்றியும்(Renewable and Non-renewable Resources) தெளிவான பார்வை அவருக்கு இருந்தது. அது மட்டுமல்ல, சூழலைக் கெடுக்காத வளர்ச்சியே அமைதியைத் தரும். அப்படி இல்லாமல் வரைமுறையற்று இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தால் முடிவற்ற போட்டி, குழப்பம் மற்றும் உலகப் போர்களுக்கே வழிவகுக்கும் என்றார்.
மறைக்கப்பட்டார்
சூமேக்கர் எழுதிய 'சிறியதே அழகு' (Small is beautiful) என்ற உலகப் புகழ்பெற்ற நூலில் குமரப்பாவின் சிந்தனைகள் விளக்கப்பட்டுள்ளன. ஆனால், 'புத்தப் பொருளியல்' என்ற தலைப்பின் கீழ் குமரப்பாவின் கருத்துகளை அவர் பேசியுள்ளார். குமரப்பாவைப் பொறுத்தளவில், அவர் கிறித்தவராக இருந்தபோதிலும் தனது பொருளியல் கொள்கைகளில் எந்த மதத்தையும் முன்னிறுத்தவில்லை.
உடலுக்குள் சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்படும் உணவு எவ்வாறு உடலை வளர்த்தெடுக்கிறதோ, அதேபோல வேலையின் தன்மையும் மதிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டால், உயரிய பயனைக் கொடுக்கும் என்று குமரப்பா விளக்குகிறார். மனிதனிடம் இருக்கும் விலங்குத்தன்மை அகன்று, உயரிய பண்புகளும் அதிகபட்ச உழைப்பின் பயன்களும் கிடைக்கும். பெரும்பாலான கருத்துகளைக் குமரப்பாவிடம் இருந்து எடுத்து, தன் நூல் முழுவதும் கையாளும் சூமேக்கர், அவரை தனது நூலின் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பல மேலை அறிஞர்கள் குமரப்பாவைப் பொருளியல் மெய்யியலாளர் என்றே குறிக்கின்றனர். அவருடைய பொருளியல் சிந்தனைகள் வன்முறையற்ற, நீடித்த வாழ்வுக்கு வழிகாட்டும் இயங்கியல் தன்மை கொண்டவை.
எது சரி?
குமரப்பாவின் காலத்தில் இரண்டு பெரும் பொருளியல் சிந்தனைப் பள்ளிகள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. கட்டற்ற பொருளியலை முன்வைத்த ‘முதலாளியம்' ஒருபுறம். முதலாளித்துவத்தை அரசு கட்டுப்படுத்தி, ஓரிடத்தில் குவியும் முதலீட்டைப் பகிர்ந்து கொடுத்துச் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பேசிய பொதுவுடமை மற்றொருபுறம். ஆனால், இந்த இரண்டு கோட்பாடுகளும் பொருள் உற்பத்தி முறை பற்றி பெரிதும் கவலை கொள்ளவில்லை. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் பெருகும் பொருள் உற்பத்தி, அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வை தந்துவிடும் என்று கருதப்பட்டது. அது மட்டுமல்லாமல் பொருள் உற்பத்தியில் ‘முதலீடு + மூலப் பொருள் + உழைப்பு' ஆகிய மூன்று மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டது.
ஆனால், வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களைப் பற்றி இரு கோட்பாடுகளும் கவலைப்படவில்லை. அத்துடன் பொருள் உற்பத்தி முறை (Mode of production) பற்றியும் இக்கோட்பாடுகள் கவலைப்படவில்லை. ஆனால், குமரப்பா அந்த இரண்டு கூறுகளையும் கணக்கில் கொண்டார். இயற்கை வளங்கள் தொடர்ந்து கிடைப்பது அரிது என்றும், பெருமளவு பொருள் உற்பத்தி செய்யும் முறை தவறு. நேர்மாறாகப் பெருமளவு மக்களால் பொருள் உற்பத்தி நடக்க வேண்டும் என்று கூறினார்.
ஜே.சி.குமரப்பா
உண்மைப் பொதுவுடைமை
முதலாளிய முறைப் பொருள் உற்பத்தியும் பொதுவுடமை முறைப் பொருள் உற்பத்தியும் ஒரு வகையாகவே உள்ளதாகக் குமரப்பா கருதினார். தனி முதலாளிகளின் கட்டுப்பாட்டில் பெருந்தொழில்கள் இயங்குவதைப்போலவே, பொதுவுடமை அரசிலும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டில் பெருந்தொழில்கள் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாகச் சோவியத் நாட்டின் பொருளியல் முறையைத் திறனாய்வுக்கு உள்ளாக்கினார். அங்குச் சில கட்சித் தலைவர்களிடம் மட்டும் அதிகாரம் குவிவதைச் சுட்டிக்காட்டினார். அதன் விளைவாகவே சோவியத் நாடு பின்னர் வீழ்ந்ததை அறிய முடிகிறது.
1950-களில் சீனாவுக்கும் சோவியத் ருசியாவுக்கும் குமரப்பா சென்று வந்தார். அது பற்றி தொடர் கட்டுரைகளை எழுதினார். அந்நாடுகளில் எழுந்து வரும் தற்சார்பு உணர்வுகளைப் பெருமையுடன் பதிவு செய்தார். சோவியத்தில் உள்ள பொதுவுடமையைத் தாண்டிய ‘உண்மையான பொதுவுடமை' வர வேண்டும் என்று எழுதினார். இதனால் அவர் ‘கம்யூனிஸ்ட்' என்றும் அழைக்கப்பட்டார்.
கட்டுரையாசிரியர்,
சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்|
தொடர்புக்கு: adisilmail@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago