பல ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைகளுக்கு ஊருக்குப் போவது முடியாத காரியம். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை எங்கள் வீட்டில் சிறப்பாக நடந்தது. பல ஆண்டுகள் கழித்துப் பொங்கலுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன்.
அதில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி. ஆனால் மகிழ்ச்சிக்கு முக்கியக் காரணம்: எனது அப்பாவுடன் சேர்ந்து உள்ளூர் பறவைகளைப் பார்க்கச் சென்றதுதான்.
தமிழகத்தில் இந்த ஆண்டு (2015) பொங்கல் நாள் பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) முதன் முதலாகத் தொடங்கப்பட்டது. திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் தமிழகப் பறவை ஆர்வலர்கள் குழுவின் சந்திப்பு சென்ற நவம்பர் மாதம் நடைபெற்றது.
அதில், பொங்கல் நாள் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. அண்மையில் கேரளத்தில் ஓணம் பண்டிகையின்போது பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை ஒட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சமுத்திரம் தெரியுமா?
தஞ்சை, கரந்தையிலிருந்து வயல்வெளிகள் சூழ்ந்த சுற்றுச்சாலை வழியாக மாரியம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் சமுத்திரம் ஏரிக்கு நானும் அப்பாவும் சென்றோம். அப்பா வண்டியை ஓட்ட, நான் பின்னே உட்கார்ந்து வேண்டிய இடங்களில் எல்லாம் நிறுத்தச் சொல்லிப் பறவைகளைப் பார்த்துவந்தேன்.
சமுத்திரம் ஏரி மிகப் பழமையானது. அதைப் பற்றிய சுவாரசியமான செவிவழி கதை ஒன்றை அப்பா சொன்னார். மராட்டியர் காலத்தில் வெட்டப்பட்டது இந்த ஏரி. அப்போதிருந்த அரசி கடலையே பார்த்தது கிடையாதாம்.
அதனால் அரண்மனையில் கிழக்கு நோக்கி இருக்கும் ஷார்ஜா மாடி அல்லது தொள்ளக்காது மண்டபத்தில் மேலேறிப் பார்த்தால் தெரியும்படி, இந்தப் பரந்த ஏரியை வெட்டினார்களாம். சமுத்திரம் என்றால், இது போலத்தான் இருக்கும் என அரசிக்குக் காண்பிப்பதற்காக வெட்டப்பட்ட ஏரியாம் இது.
ஆனால், இப்போது அந்தப் பழைய மாளிகைகளின் மேலே ஏற முடியுமா எனத் தெரியவில்லை. அப்படியே ஏறிப் பார்த்தாலும், கான்கிரீட் கட்டிடங்களின் வழியாகச் சமுத்திரம் ஏரி தெரியுமா என்பது சந்தேகம்தான்.
பண்டிகைப் பறவைகள்
சமுத்திரம் ஏரியில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்திருந்தன. அதனால் பறவைகள் அதிகமாக இல்லை. என்றாலும் சுமார் 20 வகைப் பறவைகளைப் பார்த்துப் பட்டியலிட்டோம். வெயில் ஏற ஆரம்பித்ததும் வீடு திரும்பிச் சர்க்கரை பொங்கலைச் சுவைத்தேன். ஊருக்குப் போயிருந்தது, பறவைகளைப் பார்த்தது, பொங்கல் தினப் பறவைகள் கணக்கெடுப்பில் பங்களித்தது என இனிமையாகக் கழிந்தது பொங்கல்.
பண்டிகை நாட்களில் பறவைகள் நோக்குவது இந்தியாவில் பெருகி வருகிறது. மேலை நாடுகளில் கிறிஸ்துமஸ் நாளன்று பொதுமக்கள் தங்களது வீட்டுக்கு அருகிலோ, வீட்டை அடுத்த சுற்றுப்புறங்களிலோ தென்படும் பறவைகளைப் பார்த்துப் பட்டியல் தயார் செய்து eBird எனும் இணையத்தில் பதிவேற்ற வேண்டும். Christmas Bird Count எனும் இக்கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து நடந்துவருகிறது.
சூழல் ஆரோக்கியம்
இதன் மூலம் பல பொதுப் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்துகொள்ள முடியும். இது போலவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC - Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது.
பறவைகள் சூழலியல் சுட்டிக்காட்டிகள் (Ecological Indicators). நாம் வசிக்கும் பகுதியில் அல்லது ஓர் இயற்கையான வாழிடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றை, தொடர்ந்து கண்காணித்து வருவதன் மூலம், அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என அறியலாம்.
அதாவது, அங்கு வாழும் உயிரினங்களுக்கு (ஊர்ப்புறமோ, நகரமோ அங்கு வசிக்கும் மனிதர்களான நம்மையும் சேர்த்து) அந்த இடம் வாழத் தகுந்ததாக இருக்கிறதா? அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா என்பதைப் பறவைகளின் எண்ணிக்கையையும், வகையையும் வைத்து அறிவியலாளர்கள் கணக்கிடுவார்கள்.
அதுபோலவே வலசை வரும் பறவைகளின் நாளையும், நேரத்தையும் தொடர்ந்து பல ஆண்டுகள் பதிவு செய்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை (Climate Change) கணிக்க முடியும்.
பறவை அவதானிப்பு
பறவைகளின் மீதும், புறவுலகின் மீதும் ஆர்வம் தூண்டப்படவும், அவற்றின் மேல் கரிசனம் அதிகரிக்கவும் பொது மக்கள், இளைய தலைமுறையினர் இடையேயும் பறவை அவதானித்தல் (Birdwatching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
இதை ஒரு பொழுதுபோக்காக அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும். பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்த பொங்கல் நாள் பறவை கணக்கெடுப்பு, ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு போன்றவற்றை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பறவைகளைக் கணக்கெடுப்பதும், அவற்றைக் குறித்துக் கொள்வதும், பின்பு eBird தளத்தில் உள்ளிடுவதும் முக்கியம்தான் என்றாலும், முதலில் பறவைகளைப் பார்த்து ரசிக்கும் எண்ணம் அனைவரிடமும் வளர்க்கப்பட வேண்டும்.
இது போன்ற செயல்பாடுகள்தான், புறவுலகின் மீதான நாட்டத்தை ஏற்படுத்தவும், இயற்கையை ரசிக்கவும், நாம் வாழும் சூழலைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையையும் ஏற்படுத்தும்.
நாம் நம் குழந்தைகளிடம் காட்டும் அன்பைப் போல், நமது சுற்றுச்சூழலின் மீதும், அதில் வாழும் உயிரினங்களின் மீதும் அன்பு காட்ட வேண்டும். பறவைகளும் இன்னும் எண்ணிலடங்கா உயிரினங்களும் நம்முடன் இந்த உலகை வீடாகக் கொண்டுள்ளன. விருந்தாளியை மதித்துப் போற்றுவதுதானே நம் வழக்கம்.
கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org
உங்கள் ஊரை அழகாக்கும் பறவை
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC-2015) பிப்ரவரி 13-16-ம் தேதிகளில் உலகெங்கும் நடக்கிறது. இந்த மக்கள் அறிவியல் திட்டத்தில் (Citizen Science Project) தங்களைச் சுற்றியுள்ள பறவைகளைக் குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்குப் பார்த்து, அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து eBird (wwww.ebird.org) எனும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
வீடு, பள்ளி, கல்லூரி வளாகத்திலோ, பூங்கா, ஏரி, குளம் போன்ற பொது இடங்களிலோ பறவைகளைக் கவனித்து eBird-ல் பட்டியலிடலாம். இந்தியாவில் இந்த பறவைகள் கணக்கெடுப்பை இந்தியப் பறவைகள் கணக்கெடுப்பு கூட்டமைப்பு (The Bird Count India Partnership) ஒருங்கிணைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: >http://www.birdcount.in
தொடர்புக்கு: birdcountindia@gmail.com / 09884366446, 09487020110
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago