உலகின் பாதுகாப்பான அணுஉலை!

By சாளை பஷீர்

“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே...

... ஆமென்..." எனக் கண்களை மூடி இதயங்களின் வழியாக உருக்கமாகப் பிரார்த்திக்கும் விசுவாசிகளின் விழிகள், தேவாலயத்தின் முகடுகள் வழியாக விண்ணை நோக்குகின்றன.

- தேவாலயத்துக்குப் பக்கத்தில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர்கள் அந்த ஊர் பாரம்பரிய உணவைச் சுவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

- கொஞ்சம் தொலைவில் குழந்தைகளின் குதூகலக் கூச்சலுடன் மழலையர் பள்ளிக்கூடம்.

எந்த ஒரு ஊரிலும் அன்றாடம் விரியும் வாழ்க்கை சித்திரங்களின் வழக்கமான காட்சிதானே இது என எளிதாகக் கடந்து போய்விட முடியாது.

காரணம் கருவறைக்குள்ளேயே, தன் கல்லறையைக் கண்டுவிட்ட ஒரு அணுஉலை வளாகத்தின் தினசரி நிகழ்வுகள் இவை. அணு ஆற்றல் ஒடுங்கும் இடத்தில் வாழ்க்கை துளிர் விடும் என்பதை மேற்கண்ட காட்சிகள் வழியே ஆவணப்படுத்தியுள்ளார் படத்தின் இயக்குநர்.

புதிய அணுஉலை

1960-ம் ஆண்டு மின்சாரத் தேவைக்காக அணுஉலை ஒன்றை நிறுவ முடிவெடுத்தது ஆஸ்திரிய அரசு. அதன்படி 1972-ம் ஆண்டு தலைநகர் வியன்னாவிலிருந்து நாற்பது கி.மீ. தொலைவில் அமைந்துள்ள Zwentendorf நகரத்தில் 700 மெகாவாட் திறனுள்ள கொதிநீர் அணுஉலையை நிறுவத் தொடங்கியது. ஆனால், அணுஉலைகள் ஏற்படுத்தும் நிரந்தர ஆபத்தை ஆஸ்திரிய மக்கள் உடனே அடையாளம் கண்டுகொண்டனர்.

அணுஉலையின் வரவால் கதிரியக்கக் கசிவு, ஈனுலையின் தீராத தொழில்நுட்பச் சிக்கல்கள், தீர்க்கவே முடியாத அணுக்கழிவைக் கழித்துக்கட்டலும் அதன் மேலாண்மையும், உள்நாட்டு அணுத் தொழில்நுட்பத்துக்கும் அணுகுண்டுத் தொழில்நுட்பத்துக்கும் இடையேயான தொடர்பு, அணுப் பேரழிவு ஒன்று நடக்கும் பட்சத்தில் அவசரக் காலத்தில் மக்களை இடம்பெயர வைக்க முடியாத நிலை போன்ற ஆபத்துகளை ஆஸ்திரிய மக்கள் உணர்ந்திருந்தனர்.

நியாயத்தின் வலிமை

அரசும், தொழில் துறையினரும் அணுஉலைக்கு ஆதரவான வலுவான கருத்துருவாக்கக் குழுவும் சேர்ந்து மக்களின் அச்சத்தைப் போக்கக் கோடி கணக்கில் செலவழித்து அனைத்து வகை பரப்புரைகளையும் மேற்கொண்டனர்.

அணுஉலை எதிர்ப்பு அணியினரும் தளர்ந்து விடவில்லை. தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தின் வலிமையை மட்டுமே நம்பிக் கடினமாக உழைத்தனர். அணுஉலையின் பிரச்சினைகளைப் பற்றி குடிமக்கள் ஒவ்வொருவரிடமும் எடுத்துரைத்தனர். கைக்காசைச் செலவழித்துப் பரப்புரை நடத்தினர்.

இதன் விளைவாக அரசு இறங்கி வந்தது. நாடெங்கும் கருத்துக்கணிப்பு நடந்தது. மக்கள்தொகையில் 49.5 % பேர் அணுஉலைக்கு ஆதரவாகவும் 50.50 % பேர் எதிராகவும் வாக்களித்தனர். மக்கள் தீர்ப்பின் முன் அரசு பணிந்தது. டிசம்பர் 15 ,1978 அன்று ஆஸ்திரியாவின் முதல் அணுஉலை தொடங்குவதற்கு முன்னரே மூடப்பட்டுவிட்டது.

ஒற்றை ஆளின் முனகல்

வீழ்த்தப்பட்ட பூதத்தின் தீத் தடங்கள் போல இன்றைக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினித் திரைகள். அங்குள்ள மின் விளக்குகளைத் தவிர வேறு எதுவும் இயங்குவதில்லை.

பரந்த நிலப்பரப்பில் மவுனம் பொங்க நிற்கிறது அந்தப் பெருங் கட்டிடம். மாபெரும் தொட்டிகளும் கொள்கலன்களும் நிரம்பிய மொத்தக் கட்டிடத்தையும் இன்றைக்குப் பராமரிக்க ஒரே ஒருவர் மட்டும்தான் உள்ளார். அங்கு முன்பு அமைக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சிற்றுண்டிச் சாலையின் பணியாளர்தான் அவர். "திட்டமிட்டபடி இந்த உலை இயங்கியிருந்தால் நன்றாக இருக்குமே" என்று விசனப்படுகிறார் அந்தப் பராமரிப்புப் பணியாளர். இப்படி ஒற்றை ஆளின் முனகலாக முடிந்துவிட்டது ஆஸ்திரியா நாட்டின் முதலும் முடிவுமான அணுஉலை.

மவுனச் சாட்சி

முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னால் ஆஸ்திரிய மக்களின் உரிமைகள் பெற்ற வெற்றியின் சாட்சியாக அவை மவுனமாக நிற்கின்றன. பிறக்காத அணுஉலையின் உயரமான வெளிப்புறத் தூண்களில் 'உலகெங்கும் அணுஉலைகளை மூட வேண்டும்' என்ற முழக்கங்கள் தாங்கிய பதாகைகளுடன் கிரீன் பீஸ் தொண்டர்கள் அவ்வப்போது வந்து பிரச்சாரம் செய்கின்றனர்.

நிகழ்கால உலகின் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கும் அணு ஆற்றல், ஆஸ்திரியாவில் இறந்த காலமாகிவிட்டது. அணு ஆற்றல் மூலம் மின்சார உற்பத்தி இல்லையென்று ஆன பின்னர், ஆஸ்திரியா ஒன்றும் கற்காலத்துக்குத் திரும்பிவிட வில்லை. தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேற்றத்தையே கண்டு வருகிறது.

பளிச் செய்தி

கருவிலேயே கலைந்த இந்த அணுஉலையின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது வன்முறைக்கும் அவதூறு பரப்புரைக்கும் பொய் வழக்குகளுக்கும் காவல்துறை அடக்குமுறைக்கும் எந்த இடமும் இல்லை என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஆஸ்திரிய அரசும் அணுஉலை எதிர்ப்பாளர்களும் ஜனநாயகத் தளத்தின் முதிர்ச்சியுடன் இதை எதிர்கொண்டு சிக்கலைத் தீர்த்துக் கொண்டார்கள். இந்திய மாநிலங்களில் ஒன்றின் அளவே இருக்கும் சின்னஞ்சிறு நாடான ஆஸ்திரியாவிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது.

இப்படி ஆஸ்திரியாவில் இயங்காத அணுஉலை குறித்த தனது ஆவணப் படத்துக்கு "உலகின் மிகவும் பாதுகாப்பான அணுஉலை" என்று பெயரிட்டதன் வழியாக, அதன் இயக்குநர் அழுத்தமான ஒரு செய்தியைப் பளிச்சென உலகுக்குச் சொல்லியிருக்கிறார்.

The safest nuclear plant in the world; 2012;
இயக்குநர்: Helena Hufnagel,
28 நிமிடங்கள், ஜெர்மானிய ஆவணப் படம்.



கட்டுரையாளர்,
சுற்றுச்சூழல் ஆர்வலர்
தொடர்புக்கு: shalai_basheer@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்