பிளாஸ்டிக் பூதத்தை எதிர்க்கும் மஞ்சப்பை

By ஆதி வள்ளியப்பன்

சென்னையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த சுற்றுச்சூழல் நிகழ்ச்சி அது. வித்தியாசமான உடையுடன் வலம்வந்த ஒருவர், அனைவரையும் கவர்ந்தார். அவருடைய உடல் முழுக்க நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் கைப்பைகள் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்ப்பதற்கு, விநோதமாக இருந்தது. பெயரும் பயங்கரமாகத்தான் இருந்தது, பிளாஸ்டிக் பூதம்.

பிளாஸ்டிக் பைகளின் தீமைகளை விளக்குவதற்காக, இந்த விநோத வேஷத்தைப் போட்டிருந்தவர் கிருஷ்ணன். வேஷத்தைக் கலைத்துவிட்டால், உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு புத்தக விற்பனை நிறுவனமான அமேசான்.காமின் டிரெய்னிங் ஸ்பெஷலிஸ்டாக அவர் மாறிவிடுவார்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஏதாவது செய்யவேண்டும், குறிப்பாகப் பிளாஸ்டிக்கின் தீமைகளை எல்லோருக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்பது கிருஷ்ணனின் ஆர்வம். அதேநேரம், பிளாஸ்டிக்கின் தீமைகளை எடுத்துரைப்பதுடன் அவர் நின்றுவிடவில்லை. பிளாஸ்டிக்குக்கு மாற்றுத் தீர்வு என்ன என்பதைச் சுட்டிக்காட்டி, அது அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கவும் வழி ஏற்படுத்தியிருக்கிறார்.

'யெல்லோ பேக்' என்ற பெயரில் குறைந்த கட்டணத்தில் துணிப்பைகளை விற்பனை செய்யும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்கள் கிருஷ்ணனும், ஐ.பி.எம். நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக இருக்கும் அவரது மனைவி கௌரியும். மதுரையில் இருக்கும் கிருஷ்ணனின் மாமனாரும் இதற்குத் துணை நிற்கிறார்.

"நான் மதுரைக்காரன். அதனால் மஞ்சப்பை எனக்கு ரொம்ப நெருக்கமான ஒன்று. நான் சிறுவனாக இருந்தபோது மஞ்சப்பைகளையோ, கட்டைப் பை எனப்படும் மூங்கில் குழல்கள் பொருத்தப்பட்ட சாக்குப்பைகளையோ எடுத்துப்போய்த்தான் கடைகளில் பொருட்களை வாங்கி வருவோம். பள்ளிக்கும் அதையே எடுத்துச் சென்றேன். பல வருடங்கள் உழைக்கும், இயற்கைக்குத் தீங்கு விளைவிக்காத இந்த மஞ்சப்பை, இன்றைக்கு நாகரிகமற்றதாகக் கருதப்படுகிறது.

கடைகளுக்குப் பிளாஸ்டிக் பை எடுத்துப் போகக்கூடாது என்ற எண்ணத்துடன் 5 துணிப் பைகளை வாங்கி வைத்திருந்தேன். ஆனால் அப்படி வாங்கும்போதுகூட, எண்ணெய், மிளகாய், முட்டை போன்றவற்றைப் பிளாஸ்டிக் பைகளில் அடைத்தே விற்பது நெருடலாக இருந்தது.

மற்றொருபுறம் ஒவ்வொரு பொருளையும் வாங்கும்போது, பெரும்பாலோர் அது ஏன், எதற்கு, அவசியமா என்பதில் எல்லாம் இப்போது கவனமாக இருப்பதில்லை. ஐ.டி. துறை சார்ந்த வேலைகளில் இருந்ததாலும், அது சார்ந்த நண்பர்கள் அதிகம் என்பதாலும், பொருட்களை வாங்கிக் குவிக்கும் நுகர்வுப் பண்பாடு பற்றி தெரிந்திருந்தது.

எங்களது சுற்றுச்சூழல் அக்கறையை ஏதாவது செயல்பாடாக வெளிப்படுத்த வேண்டும் என்று எனக்கும் என் மனைவிக்கும் தோன்றிக்கொண்டே இருந்தது. கல்யாணங்களில் தரப்படும் மஞ்சப்பை பண்பாட்டைத் திரும்பக் கொண்டுவர வேண்டுமென்று நினைத்தேன். எனது மனைவிக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது.

துணிப்பையைத் தயாரிப்பது ஒரு செயல்பாடாகவும், பிளாஸ்டிக் பைகளின் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றொரு செயல்பாடாகவும் இருக்க வேண்டுமென தீர்மானித்துக்கொண்டோம்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நடத்திய ஐம்பூத விழாவில் பிளாஸ்டிக் பையின் தீமைகளைப் பற்றி பிரசாரம் செய்ய முடியும் என்று தோன்றியது. ஒரு குட்டி ஆராய்ச்சி செய்து, பிளாஸ்டிக் பூதத்தை உருவாக்கினோம். பிளாஸ்டிக் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய எங்களுடைய முதல் நிகழ்ச்சியாக அது அமைந்தது. சென்னை டிரெக்கிங் கிளப் நடத்திய கருத்தரங்கிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.

பிளாஸ்டிக் பை எப்படித் தயார் ஆகிறது, அதை வெளியேற்றுவது எவ்வளவு கடினம், ஏன் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வேண்டும், அதனால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதையெல்லாம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் விளக்குகிறோம்.

மஞ்சப்பை என்பதன் ஆங்கில வடிவம்தான் 'யெல்லோ பேக்' (www.theyellowbag.org). எங்கள் பைகளில் இடம்பெற்றுள்ள யெல்லோ பேக் முத்திரையை, என்னுடன் வேலை பார்க்கும் அனில் சோமன் வடிவமைத்தார். இந்தப் பைகள் பழுப்பு நிறத்திலேயே இருக்கும். ரசாயனத்தால் பிளீச் செய்யப்படாமல், நிறமேற்ற எந்தச் சாயமும் பயன்படுத்தப்படாததுதான் அதற்குக் காரணம். வில்லை. இந்தப் பைகளின் தயாரிப்பில் முடிந்தவரை ரசாயனம் பயன்படுத்தப்படவில்லை.

மதுரையில் உள்ள இல்லத்தரசிகள் இந்தப் பைகளைத் தைத்துத் தருகிறார் கள். இந்தப் பைகளில் பொருட்களை எடுத்துச் சென்று பரிசோதித்த பின்பே, விற்பனை செய்யத் தயார் ஆனேன். தயாரிக்க எங்களுக்கு 12 ரூபாய் ஆனா லும், 10 ரூபாய்க்குத்தான் விற்கிறோம்.

காய்கறிகளை எடுத்துச் செல்வதற்கான பெரிய பை, மதிய உணவுப் பை, சுப நிகழ்ச்சிகளுக்கான தாம்பூலப் பை எனப் பல்வேறு பை வகைகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுவருகிறோம்" என்று அடுத்த திட்டங்களை விவரிக்கிறார் கிருஷ்ணன்.

முதன்முதலாக, சென்னையிலுள்ள டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் நடந்த ஒரு பாட்-லக் (கூட்டாஞ்சோறு) நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு யெல்லோ பேக் நினைவு பரிசாகக் கொடுக்கப்பட்டது. குரோம்பேட்டையில் உள்ள பயோ ஆர்கானிக்ஸ் இயற்கை அங்காடி உட்படப் பல இடங்களில் யெல்லோ பேக் கிடைக்கிறது.

மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்துத் துணி பையைப் பயன்படுத்தக் குரல் கொடுக்க வேண்டும் என்பது கிருஷ்ணனின் ஆசை. இவர்களது ஃபேஸ்புக் குழுவில் (www.fb.com/ theyellowbag) நூற்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்திருக்கிறார்கள். தினசரி 5-10 பேர் புதிதாகச் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். சென்னை டிரெக்கிங் கிளப்பின் வினோத், லெட்ஸ் குரோ அவர் ஓன் ஆக்சிஜன் அமைப்பின் மாசானமுத்து ஆகியோர் நேரடியாக உதவ முன்வந்துள்ளனர்.

"என் குழந்தை பிறந்த பிறகு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய அக்கறை தீவிரமடைந்துவிட்டது. இந்த மோசமான சுற்றுச்சூழலில்தான் நம் குழந்தை வளர வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. அதனால்தான் சுற்றுச்சூழலையும், நம் உடல்நலனையும் பாதுகாக்கச் சூழல் பாதுகாப்புச் செயல்பாடுகளில் விரைந்து ஈடுபட வேண்டுமென்ற உந்துதல் எழுகிறது. அந்த முயற்சிகளில் ஒன்றுதான் இந்த யெல்லோ பேக். ஒரேயொரு துணிப்பை, ஆயிரம் பிளாஸ்டிக் பைகளில் இருந்து பூமியைக் காப்பாற்றும்" நம்பிக்கையுடன் முடிக்கிறார் கிருஷ்ணன்.

தொடர்புக்கு: krishconnected@gmail.com / 9840166905.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்