எந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது?

By பாமயன்

தமிழகம் மட்டுமல்லாது இந்திய வேளாண்மையில் கிணற்றுப் பாசனம் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கிறது. கமலை, இறைப்பெட்டி போன்ற நீரிறைக்கும் கருவிகளைக் கொண்டு ஒரு காலத்தில் வேளாண்மை நடந்துவந்தது.

கிணற்றுப் பாசனம் தன்னகத்தே ஒரு பண்பாட்டுக் கூறையும் கொண்டிருந்தது. கமலைத் தோட்டம், முன்னும் பின்னும் போய்வரும் காளைகள், கிணற்றடியில் பூவரச மரம், அதில் தூங்கும் குழந்தை, அதற்குத் தாலாட்டு பாடும் தாய், கமலைக் கயிற்றைப் பிடித்துத் தொங்கும் சிறார்கள் என்று ஓர் இனிய ஓவியம் நம்முன் தோன்றும்.

இன்று கமலைக் கிணறு என்பது காண முடியாத காட்சியாகிவிட்டது. கமலை வைத்து நீரிறைக்கும்போது குறிப்பிட்ட அளவு நீர் மட்டும் எடுக்கப்படும்.

கமலையின் மகத்துவம்

நீரில் மூன்று அடுக்குகள் உள்ளன. முதலாவது மேல்மட்ட நீர் (surface water), இரண்டாவது தந்துகிக் குழாய் நீர் (capillary water), மூன்றாவது நிலத்தடி நீர் (ground water).

பொதுவாக மேல்மட்ட நீரானது குளங்களிலும் ஆறுகளிலும் காணப்படும். நிலத்தடி நீர் என்பது 100 அடிக்கும் கீழே தண்ணீர் தாவளங்களாக (aquifers) காணப்படும். இதற்கிடையில் உள்ள நீர், நுண்துளை நீர் என்று அழைக்கப்படும். இது ஆண்டுதோறும் பெய்யும் மழை, குளங்களில் சேமிக்கப்படும் நீரின் அளவு, காணப்படும் மரங்களின் அடர்த்தி ஆகியவற்றைக்கொண்டு உருவாகும்.

பொதுவாகக் கமலைக் கிணறுகள் யாவும் இந்த நுண்துளை நீரை மட்டுமே பயன்படுத்துபவை. கமலையின் இறைப்பு அளவும், கிணற்றின் நீர் ஊறும் திறனும் பெரும்பாலும் சமமாக இருக்கும். ஒரு சால் நீரை வாய்க்காலில் ஊற்றிவிட்டு, அடுத்த சால் இறைக்கப் போகும்முன் நீர் ஊறிவிடும். இதைத்தான் நீடித்ததன்மை (sustainability) என்று இப்போது பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

வந்தது மோட்டார்

ஆனால், வேதி உரங்கள் அறிமுகம் ஆனவுடன் இந்த நீரின் அளவு போதுமானதாக இல்லை. ஏனெனில், வீரிய விதைகளுக்கு உரமும், அதனால் அதிக நீரும் தேவைப்பட்டது. ஆனால், நாட்டு விதைகளுக்கு அப்படி ஒரு நெருக்கடி இல்லை. இதனால் கமலைகளை மாற்ற வேண்டிய நிலைக்கு உழவர்கள் ஆளானார்கள்.

அப்போது வங்கிகள் மின்எக்கிகளை (electric motor) அமைத்துக்கொள்ளக் கடன் வழங்கின. கடன் பெறத் 'தகுதி' பெற்றோர் கடன் வாங்கி 'மோட்டார்களை' அமைத்துக்கொண்டனர். ஒரு சிற்றூரில் 100-க்கு 80 பேர் கமலை வைத்திருந்தார்கள் என்றால், அதில் 20 பேருக்கு மட்டும் கடன் கிடைத்தது. அதாவது, 80 உழவர்களில் 20 பேர் மின்எக்கிகளுக்கு மாறினர்.

மின்சார எக்கிகள் நீரை மிக வேகமாக உறிஞ்சின. கிணற்றின் ஊறும் வேகம் மின்சார எக்கிகளுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, கிணறுகளில் நீர் மட்டம் அதி வேகமாகக் கீழிறங்கியது. இதனால் மீதமுள்ளவர்களும் மின்சார எக்கிகளுக்கு மாற வேண்டும் அல்லது சாகுபடியைக் கைவிட வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகினர்.

வற்றிய கிணறுகள்

நீர் மட்டம் கீழிறங்கியதால் பலர் கிணறுகளை ஆழப்படுத்தினர். இதுவும் வசதி படைத்த ஒரு சிலராலேயே முடிந்தது. விளைவு பாதிக்கு மேற்பட்டோர் சாகுபடியைவிட்டு வெளியேறினர். நகர்ப்புறங்களுக்குச் சென்று குடியேறினர். வேதிஉரம் இட்ட நிலத்தில் தழை ஊட்டத்தைப் பிடித்துத் தரும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்தது. எனவே, மேலும் உரம் போட வேண்டியதாயிற்று, இதனால் கூடுதல் நீர் பாய்ச்ச வேண்டியதாயிற்று. திறந்தவெளிக் கிணறுகளால் பயனில்லாத நிலை ஏற்பட்டதால், ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டன. இன்று கோவை பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமான ஆழ்துளைக் கிணறுகள் நூற்றுக்கும் மேலாகக் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதை இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்.

ஏன் காக்க வேண்டும்?

இந்தச் சூழலில்தான் விதைகளைக் காக்க வேண்டிய கடமை உழவர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளது. தமிழகத்தில் கிச்சிலி, மொழிக்கறுப்பு, மாப்பிள்ளைச் சம்பா முதலிய 75-க்கும் மேற்பட்ட நெல் வகைகள் மீட்கப்பட்டுள்ளன. சடைத் தினை, செந் தினை, வரகு, பனி வரகு, குதிரைவாலி, சடைக் குதிரைவாலி என்று பல நாட்டு விதைகள் உள்ளன. இவற்றைக் காப்பதன் மூலமே, நமது நாட்டின் வேளாண் இறையாண்மையைக் காக்க முடியும், காக்க வேண்டும்.

கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்