நவீன சிந்துபாத்தின் இயற்கையோடு சில பரிசோதனைகள்

By சாளை பஷீர்

மரத்திலிருந்து பல அடிகள் தள்ளி நின்று நீரூற்றிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். பெயர் அலீ மனிக்ஃபான் .

ஒடிசலான குச்சி போன்ற உடல்வாகு. புன்னகையுடன் சன்னமான குரலில் மென்தமிழில் உரையாடத் தொடங்கினார்.

பல அடி தள்ளி நின்று மரங்களுக்கு நீர் ஊற்றுவது ஏன் என்று கேட்டேன். மரங்களின் வேர்கள் இயல்பாகவே நீரைத் தேடிப் பயணிக்கக்கூடியவை. சற்றுத் தொலைவில் நீரூற்றும்போது, அதைத் தேடி அந்த வேர்கள் பரவும். அதனால் மரம் வலிமையாக நிலைகொள்ளும். ஆனால், மரத்தின் அடியிலேயே நீரை ஊற்றி அதன் தற்சார்புத் தன்மையை பலவீனப்படுத்துகிறோம் என்றார்.

வள்ளியூரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது கிழவனேரி கிராமம். வறண்டு பரந்த நிலத்தின் நடுவே நிற்கிறது அலீ மனிக்ஃபானின் குடில்.

அருகாமையில் கிடைக்கும் பொருட்களை வைத்து உள்ளூரின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறுதான் வீடு கட்ட வேண்டும் எனக் கூறும் அலீ மனிக்ஃபான், அதற்கேற்பக் குடிசையமைத்து வாழ்ந்துவந்தார்.

முராய்து கண்டவ்ரு அலீ மனிக்ஃபான் என்ற முழு பெயரைக் கொண்ட அலீ மனிக்ஃபான் பிறந்து வளர்ந்த இடம் மினிக்காய் தீவு. எட்டாம் வகுப்புடன் இவருடைய கல்வி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு கடல், மலை, ஆறு, குளம், குட்டைகள் இவருடைய ஆசான்களாக மாறிப் போதித்தன.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத் தில் உள்ள மத்திய அரசின் கடல்சார் மீன்வள ஆய்வு கழகத்தில் (CMFRI) 20 ஆண்டுகள் அருங்காட்சியக உதவியாளராகப் பணியாற்றியுள்ளார் அலீ மனிக்ஃபான்.

புதுமைக்கும் தேடலுக்கும் அந்தப் பணியில் இனிமேலும் வாய்ப்பில்லை என்றான பிறகு, விருப்ப ஓய்வு பெற்றார்.

இயற்கை வேளாண்மை

அப்போது இயற்கை வேளாண்மை குறித்த தனது கனவுகளை நனவாக்க நினைத்து, வள்ளியூர் அருகே 15 ஏக்கர் நிலத்தை வாங்கி ஜப்பானிய வேளாண் அறிஞர் மசனாபு ஃபுகோகாவின் DO NOTHING FARM என்ற இயற்கை வேளாண் பண்ணையை அமைத்தார். மனிதனின் இடையூறு இல்லாமல் மரங்களும் செடிகொடிகளும் எப்படி வளர்கின்றன என்பதைச் சோதித்து அறிவதற்காகவே, அதை அமைத்ததாக மனிக்ஃபான் கூறுகின்றார்.

அத்துடன் மொட்டைப் பனையில் காற்றாடிகளைப் பிணைத்துக் கார் பேட்டரி வாயிலாகத் தனது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வெட்ட வெளியிலிருந்து கறந்து கொண்டி ருந்தார்.

ஆடு தின்னும் அனைத்து இலை தழைகளையும் மனிதனும் சாப்பிடலாம் என்று கூறும் இவர், சமைப்பதே இல்லை. இலைதழைகள்தான் இவருடைய அன்றாட உணவு. நோய் வந்தால் மருந்து உட்கொள்வதில்லை. நோன்பு பிடிப்பதன் மூலமாக நோய் தீர்க்கும் உடலின் ஆற்றல் செயல்படத் தொடங்குவதாகக் கூறினார். கால் நடைகளுக்கு நோய் வந்தால் அவை உண்ண மறுக்கின்றன . நோய் சரியான பிறகே அவை மீண்டும் இரை எடுக்கத் தொடங்குகின்றன என விளக்கினார்.

நவீன சிந்துபாத்தின் இயற்கையோடு சில பரிசோதனைகள்

ஆடு தின்னும் அனைத்து இலை தழைகளையும் மனிதனும் சாப்பிடலாம் என்று கூறும் இவர், சமைப்பதே இல்லை. இலைதழைகள்தான் இவருடைய அன்றாட உணவு. நோய் வந்தால் மருந்து உட்கொள்வதில்லை. நோன்பு பிடிப்பதன் மூலமாக நோய் தீர்க்கும் உடலின் ஆற்றல் செயல்படத் தொடங்குவதாகக் கூறினார். கால் நடைகளுக்கு நோய் வந்தால் அவை உண்ண மறுக்கின்றன . நோய் சரியான பிறகே அவை மீண்டும் இரை எடுக்கத் தொடங்குகின்றன என விளக்கினார்.

இப்படிப் பணியிலி ருந்து விலகிய பிறகு, தற்சார்பு வாழ்வியலைத் தனது வாழ்நாள் பணி திட்டமாகக்கொண்டு இயங்கும் அலீ மனிக்ஃபானின் செயல் களமாக விளங்குவது அவரது சொந்த உடலும் குடும்பமும்தான்.

நவ சிந்துபாத்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துபாத் என்ற கடலோடி கதை மாந்தன் பயணித்த கற்பனைத் தடங்களுக்கு உயிர் கொடுக்க எண்ணினார் அயர்லாந்தைச் சார்ந்த கள ஆய்வாளரும் எழுத்தாளருமான டிம் செவரின் (TIM SEVERIN ).

சிந்துபாத் பயணித்த மஸ்கட்டிலிருந்து சீனத்தின் கேன்டன் (CANTON) துறைமுகம் வரையிலான 9,655 கிலோமீட்டர் கடல் பாதையில் தன் குழுவினருடன் டிம் செவரின் பயணித்துள்ளார். இந்தப் பயணப் பட்டறிவை The Sindbad Voyage என்ற பயணக் குறிப்பு நூலாகவும் வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடல் பயணத்துக்கான ‘சோஹர்’ (SOHAR) என்ற பெயருடைய 27 மீட்டர் நீளமுள்ள மரக்கலத்தை 11 மாதக் கால உழைப்பில் தென்னை மட்டை, கயிறு, அயினி மரம் என்ற இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி வடிவமைத்து உருவாக்கியது அலீ மனிக்ஃபான் தலைமையிலான குழுதான். கப்பல் கட்டுதல் அலீ மனிக்ஃபானின் குடும்பத்தில் வாழையடி வாழையாகப் பின்பற்றப்பட்டு வரும் தொழில்.

இந்த மரக்கலம் 16-ம் நூற்றாண்டின் போர்த்துகீசிய ஆவணத்தில் காணக் கிடைக்கும் வடிவமைப்பின் அடிப்படையில் பண்டைய திவேஹி தொழில்நுட்பத்தின்படி உருவாக்கப்பட்டது. இந்தச் சோஹர் மரக்கலம், தற்போது மஸ்கட்டில் உள்ள கடல்சார் அருங்காட்சியகத்தில் உள்ளது.

கௌரவம் பெற்ற பெயர்

கடலின் மகனான அலீ மனிக்ஃபான் பல அரிய வகை மீன் இனங்களைச் சேகரித்துள்ளார். அவற்றின் உள்ளூர்ப் பெயர்களை அடையாளம் காணும் பணியில் மண்டபத்தில் உள்ள CMFRIயின் முன்னாள் இயக்குநர் டாக்டர் எஸ்.ஜோன்ஸுக்கு உதவியுள்ளார்.

அப்போது இளைஞனாக இருந்த அலீ மனிக்ஃபானின் திறமையைக் கண்டு வியந்த ஜோன்ஸ், மனிக்ஃபான் கண்டுபிடித்த புதிய வகை மீன் ஒன்றுக்கு அவருடைய நினைவாக abu def def manikfani என்ற பெயரைச் சூட்டியுள்ளார்.

அத்துடன் மண்டபம் கடல் சார் ஆய்வு நிலையத்தில் அருங்காட்சியக உதவியாளராகவும் பணியில் சேர்த்துக்கொண்டார். அதன் பிறகு தனக்கு விருப்பமான கடலையும் மீனையும் போல, தனது தேடலைப் பரந்து விரிந்ததாக ஆக்கிக்கொண்டார் மனிக்ஃபான்.

இயற்கை தந்த கொடை

கப்பல் கட்டும் கலை, தற்சார்பு வாழ்வியல், கட்டடக்கலை, மொழியியல், கல்வி, பொறியியல் தொழில்நுட்பம், கடல் உயிரியல், கடல்சார் ஆய்வு, நிலப்பரப்பியல், வானியல், வேளாண்மை, சூழலியல் போன்றவற்றில் அறிமுகமும் ஆழமும் மனிக்ஃபானுக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அது இயற்கை அளித்த கொடை என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்லமுடியும்?

இயற்கையை உறவாடுபவர்களுக்கு அது பன்மடங்காகத் திரும்பக் கையளிக்கும் வள்ளல் தன்மை வாய்ந்தது என்பதற்கு அலீ மனிக்ஃபானின் வாழ்க்கை ஒரு சாட்சி.

அலீ மனிக்ஃபானின் வாழ்க்கையை The man in million என்ற பெயரில் கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் மஜித் அழிக்கோடு ஆவணப்படமாக இயக்கியுள்ளார்.

நானும் நண்பர்களும் வள்ளியூரில் உள்ள அவரது இயற்கை பண்ணையில் கண்ட காட்சிகள் எல்லாம் 1993-ம் ஆண்டு காலப்பகுதியைச் சேர்ந்தவை. இன்று அவர் கட்டிய வீடு இல்லை. அலீ மனிக்ஃபான் கேரளத்துக்குச் சென்றுவிட்டார்.

எல்லாமே பரிசோதனை

“நீங்கள் நடந்து வந்த பாதையில், ஏன் பிறரைப் பயிற்றுவிக்கவில்லை?” என்று கேட்டபோது, “நான் செய்துகொண்டிருக்கும் விஷயங்களை யாரையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்ய விரும்பவில்லை. இது ஒரு பரிசோதனை மட்டுமே” என்றார்.

அன்றாடம் விரியும் மலரைப்போல, காலைக் கதிரவனைப்போல வாழ்க்கையானது ஒவ்வொரு நாளும் நிறைந்த அழகுடனும் நம்பிக்கைகளுடனும் மலர்கிறது.

அனைத்தையும் ஒரே மூட்டையில் அள்ளி முடிந்திட வேண்டும் என்ற நுகர்வுவெறியும் அது சார்ந்த நமது வாழ்க்கை ஓட்டமும், அந்த நம்பிக்கைப் புலரியைக் காண முடியாமல் செய்யும் கருந்திரையாக மறைத்துக் கொண்டிருக்கின்றன.

அலீ மனிக்ஃபானின் பரிசோதனைகள் நடைமுறைப்படுத்தப்படும் இடத்தில், அந்தக் கருந்திரைகள் கிழித்து எறியப்பட்டுக் கிடக்கின்றன. இயற்கையையும் அதன் வளங்களையும் பணத்தாள்களில் அளவிடும் நமது மதிப்பீட்டு முறைக்குள் அடங்க மறுக்கின்றன.

- சாளை பஷீர், சுற்றுச்சூழல் ஆர்வலர், தொடர்புக்கு: shalai_basheer@yahoo.com மனிக்ஃபான்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்