உலகின் முதல் உயிர் தண்ணீரில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாறு சொல்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் தாயின் கருவில் வளரும் குழந்தைகள், பனிக்குடத்தில் சுவாசிக்கின்றன என்றும் சொல்கிறார்கள். தண்ணீருக்கும் நமக்குமான தொடர்பு வரையறுத்துச் சொல்லமுடியாதது. மனிதர்கள் மட்டுமல்லாமல் இந்தப் புவிப்பரப்பில் உயிருள்ளவையாக அறியப்படும் அஃறினைகள் உட்பட அனைத்துக்கும் தண்ணீரே, உயிர் வாழ்வதற்கான ஆதாரம்.
திரவ வடிவில் இருந்தாலும் திட மற்றும் வாயு நிலைகளுக்கு உருமாறும் குணமும் தண்ணீருக்கு உண்டு. தண்ணீருக்கு இன்னுமொரு சிறப்பும் இருக்கிறது. நாம் எவ்வளவுதான் பயன்படுத்தினாலும் எந்த வடிவத்துக்கு மாற்றினாலும் பூமிப் பந்தில் இருக்கும் தண்ணீர், பூமியைவிட்டு வெளியே போகாது. நதிகள், கடல்கள் போன்றவற்றில் உள்ள நீர் ஆவியாகி மேலே போகும். அப்படி ஆவியாகிச் செல்லும் தண்ணீர், மழையாக மாறி மீண்டும் பூமியை வந்தடையும்.
தண்ணீரும் சூரியனும் தோன்றிய நாளில் இருந்தே இந்த நீர்சுழற்சி நடைபெற்று வருகிறது. இப்போதும் பூமியில் தண்ணீர்தான் 71 சதவீதப் பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. பிறகு ஏன் தண்ணீர்ப் பஞ்சம் என்ற கேள்வி எழலாம். மனிதனின் பேராசையும் அசட்டையுமே இதற்குக் காரணம்.
அசோகமித்திரனின் தண்ணீர்
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாகவே தண்ணீர் என்பது தேடியலையும் ஒரு பொருளாக மாறிவிட்டதை அசோகமித்திரன் தன் எழுத்தில் பதிவுசெய்திருக்கிறார். அவர் எழுதிய ‘தண்ணீர்’ நாவல், எழுபதுகளில் சென்னையில் தீவிரமடைந்த தண்ணீர்ப் பஞ்சத்தைப் பேசுகிறது. பஞ்சம் நிலவிய காலத்திலும் எப்படியெல்லாம் தண்ணீர் வீணாக்கப்பட்டது என்பதும் அந்த நாவலில் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
‘அரைமணி நேரமாக வீட்டுக்காரர்கள் பம்பு அடிப்பதைப் படுத்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்த ஜமுனா, பம்பு சப்தத்தில் சிறு மாறுதல் ஒன்று கேட்டவுடன் தன்னை உதறிக்கொண்டு எழுந்தாள்’ - இப்படித்தான் நாவல் தொடங்குகிறது. நாவலின் ஆரம்பமே தண்ணீர்த் தேடல்தான். நாவலில் பல கதாபாத்திரங்கள் வந்து சென்றாலும் ஒவ்வொன்றுடனும் ஏதோ ஒரு வகையில் தண்ணீர் சம்பந்தப்பட்டிருக்கிறது.
வீணாகும் உயிர் நீர்
கிணற்றில் உறை இறக்குகிறவன், "பூமியிலே தண்ணியிருந்தா மேலே வந்துதான் தீரணும். பூமியிலேயே தண்ணியில்லாம என்ன பண்ண முடியும்? அவன் கண்ணைத் தொறக்கணும், மானம் பொழியணும்" என்று சொல்கிறான். மழைப்பொழிவு பொய்த்துப் போனதையும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததையும் அந்த வார்த்தைகள் புலப்படுத்துகின்றன.
தெருக் குழாய்கள் தண்ணீர் காணாமல் துருப்பிடித்து உதிர்ந்து கிடக்கின்றன. அந்தப் பகுதியின் தண்ணீர்த் தேவையைத் தீர்க்க அரசாங்கத்தால் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, டாங்குகளில் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. அங்கேயும் தண்ணீர் பிடிக்கத் தள்ளுமுள்ளு. பாத்திரங்களில் பிடித்ததைவிடக் கீழே விழுந்து சேறாகிய தண்ணீர்தான் அதிகமாக இருந்தது.
மழை வந்ததுமே மாடியில் இருந்து கொட்டும் தண்ணீரைப் பிடிக்கக் குடை பிடித்தபடி கணவனும் மனைவியும் அலைகிறார்கள். மழையில் நனைந்த படியே தண்ணீரைச் சுமந்துவருகிறார்கள். வெகு நாள் கழித்து கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீருடன் சாக்கடை நீரும் கலந்துவருகிறது. சிலருக்கு அதனால் மஞ்சள்காமாலையும் வருகிறது. கதையின் முடிவில் ஒரு காரின் இடது பக்கச் சக்கரங்கள் இரண்டும் சேற்றில் புதைந்து கிடக்கின்றன. தண்ணீர்ப் பஞ்சமும் அப்படித்தான் மீட்க முடியாமல் புதைந்துபோய் இருக்கிறது.
ஆதாரத்தின் அழிவு
கடல் தவிர்த்து ஆறு, குளம், ஏரி, கிணறு எனப் பல்வேறு நீர் ஆதாரங்களை நம்பியிருந்த நாம், இன்று ஆழ்துளை கிணறுகளை உற்பத்தி செய்தும் தோல்வியையே சந்திக்கிறோம். நீர் ஆதாரங்களை நம் தேவைக்காக அழித்துவிட்டோம். காடுகளைக் குறுக்கினோம், நீர்ப் பரப்பைச் சுருக்கினோம். எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே நீரைப் பாழாக்கினோம், மாசுபடுத் தினோம்.
ஒரு காலத்தில் மனிதன் கணக்கு வழக்கில்லாமல் தண்ணீரைச் செல வழித்ததைக் குறிக்கும் விதமாகத்தான் ‘பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தல்’ என்ற சொலவடை தோன்றி யிருக்க வேண்டும். தண்ணீர் மீது அன்று காட்டிய அசட்டைதான், இன்று விலை கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலையை உருவாக்கியிருக்கிறது.
எப்படி மீட்கலாம்?
நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை அழித்து, அவற்றின் மீதுதான் பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. எஞ்சியிருக்கும் நீர்நிலைகளையாவது சீர்ப்படுத்தி, பராமரிக்க வேண்டும். மழைநீர், நீர்நிலைகளைச் சென்றடையும் தடங்களையும் பராமரிக்க வேண்டும். ஊரின் பெரிய நீர்நிலைகளில் நீரின் மட்டம் உயர்ந்தாலே அந்தப் பகுதியில் இருக்கும் வீடுகளில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறு போன்றவற்றிலும் நீரின் மட்டம் உயரும்.
மழை நீர் நிலத்தினுள் சென்றால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தாலே தண்ணீர்ப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்கலாம். பெருகிவரும் கான்கிரீட் சாலைகளும் பிளாஸ்டிக் குப்பைகளும் மழை நீர், மண்ணுக்குள் ஊடுருவிச் செல்வதைத் தடுக்கின்றன. கூடுமானவரை பிளாஸ்டிக் கழிவுகளையும் மட்கும் தன்மையற்றக் கழிவுகளையும் மண் ணுடன் கலப்பதைத் தடுக்க வேண்டும்.
நீர் உயர வாழ்வு உயரும்
வீணாக ஓடி மறையும் தண்ணீரைச் சேகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் உண்மையிலேயே பயன் தரக்கூடியது. மழை நீரை நேரடியாகச் சேமிப்பது
ஒரு வகை என்றால், அந்த நீரை நிலத்தினுள் செலுத்துவது மற்றொரு வகை. மழை நீரை நிலத்தினுள் செலுத்துவதால் அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும். மழை நீர் சேகரிப்புக் கட்டுமானத்துக்காக அதிகளவில் பணம் செலவிடத் தேவையில்லை. நகர்ப்புற குடியிருப்புகளிலும், வணிக வளாகங் களிலும் இவற்றை நிர்மாணிக்கலாம். கிராமப்புறங்களில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதுடன் குடிசை வீடுகள், ஓட்டு வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கலாம். இப்படிச் சேகரிக்கப்படுகிற தண்ணீர், பிற்காலத்தில் நமது தினசரி பயன் பாட்டுக்குக் கைகொடுக்கும்.
அரசாங்க ஒப்புதல் பெறுவதற்காகப் பலர் பெயரளவுக்கு மழை நீர் சேகரிப்புக் கட்டுமானத்தைச் செய்வார்கள். இந்த அணுகுமுறை தவறு மட்டுமல்ல, நமக்கான நீர் ஆதாரத்தை நாமே வீணடிக்கும் செயல்.
சிக்கனமும் சேமிப்பே
தண்ணீரைச் சேமிப்பதற்கான மறைமுக வழிகளில் சிக்கனமும் ஒன்று. வீடுகளில் குளிக்க, துவைக்க, சமையலறை வேலைகள் போன்றவற்றுக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாம். குழாயைத் திறந்த நிலையில் வைத்துவிட்டு குளிப்பது, துணி துவைப்பது கூடாது. குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.
இருக்கும் தண்ணீரை முறைப்படுத்தி, பாதுகாப்பது மட்டுமே அடுத்துவரும் தலைமுறைக்கு நாம் சேர்த்துவைக்கும் மிகப் பெரிய சொத்து.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago