நவீன இயற்கை வேளாண்மையின் மறுமலர்ச்சிக் காலம் கடந்த 20 ஆண்டுகளில் தொடங்கியது. அதற்கு முந்தைய நிலைகளைப் பற்றியும் பார்த்திருந்தோம். ஆனால், அந்த முயற்சி உரிய பாதையில் செல்கிறதா என்ற ஆய்வு தேவைப்படுகிறது.
மரபைப் போற்றுதல் என்பதும், இயற்கைக்குத் திரும்புதல் என்ற ஃபுகோகா, நம்மாழ்வார் ஆகியோரின் கருத்துகள் ரசாயன வேளாண்மை ஆதரவாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. இவர்கள், மக்களைக் கி.மு. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னுக்கு இழுக் கிறார்கள் என்று குறை கூறப்படுகிறது. கிராமங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் சாதிகளைப் பாதுகாக்கத் துணைபோகின்றனர் என்றும், ரசாயனங்களை மறுக்கிறோம் என்று அறிவியலைப் புறந்தள்ளுகிறார்கள் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இயற்கையை நோக்கி...
உண்மையில் ‘இயற்கைக்குத் திரும்புதல்' என்ற ஃபுகோகாவின் கருத்தை வழிமொழிவதில் சில சிக்கல்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக இயற்கையை அழித்து வெற்றி கொள்வோம் என்பதை ஏற்பதற்கும் இல்லை. ‘இயற்கையை நோக்கி முன்னேறிச் செல்வோம்' என்பதே நமது கருத்து. மரபைக் காப்போம் என்ற பெயரில் சாதி ஏற்றத்தாழ்வு போன்ற கழிசடைக் கருத்துகளை ஏற்க இயலாது. நவீன இயற்கை வேளாண்மையில், அதற்குச் சற்றும் இடமில்லை.
சாணத்தை எல்லாரும் கையாள வேண்டும் என்பதே நவீன இயற்கை வேளாண்மையின் கருத்து, அதை எவ்வாறு நுட்பமாக, நோய்க்கு இடம் கொடுக்காமல் கையாள வேண்டும் என்பது இன்றியமையாதது. ஏற்றத் தாழ்வற்ற இயற்கை நேயமான சிற்றூர்கள் உருவாக வேண்டும். வேளாண்மையை இழிதொழிலாகப் பார்க்கும் நிலையை மாற்றி அது ஒரு கண்ணியமான, நீடித்த வருவாயைத் தரும் வாழ்வாதாரமாக உருவாக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.
வேளாண்மையை மையமாகக் கொண்டு சிற்றூர் பொருளாதாரம் இயங்க வேண்டும். அதற்குத் துணையாகப் பிற தொழில்கள் இருக்க வேண்டும். நீடித்த வேளாண்மை இருக்க வேண்டும் என்றால், அதற்கு இயற்கைவளங்கள் காக்கப்பட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.
எது இயற்கை வேளாண்மை?
ஆனால், ‘இயற்கைக்குத் திரும்புதல்' என்ற பெயரில் சில பழமைவாதிகள் அறிவியலுக்குப் புறம்பான பல கருத்து களை முன்வைப்பதும் நடக்கிறது. குறிப்பாக ஹோமம் வளர்ப்பது, பசுக்களை மட்டும் புனிதப்படுத்துவது, மற்ற கால்நடைகளைப் புறக்கணிப்பது, தொழில்நுட்பப் பெயர்களைக்கூடப் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் என்று சமஸ் கிருதமாக்கி அதற்கு ஒரு புனிதத்தைக் கற்பிப்பது, அதன் அறிவியல் செயல்பாடுகளை விளக்காமல் சடங்குகளாகக் கற்பிப்பது போன்ற செயல்பாடுகள் நடக்கின்றன. இதுதான் இயற்கை வேளாண்மை என்று கருதிக்கொண்டு பல இயக்கங்கள் இதை வெறுக்கின்றன. அல்லது பாராமுகமாக இருந்துவிடுகின்றன.
சாணமா? புளியா?
உண்மையில் நவீன இயற்கை வேளாண்மை என்பது, பன்னாட்டு நிறுவனப் படையெடுப்புக்கு மாற்றான அரசியல் செயல்பாடு. நீங்கள் சாணத்தைக் கரைக்கிறபோது, பன்னாட்டு கும்பணியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறீர்கள் என்று பொருள்.
நான் ஒரு ஊரில் இயற்கை வேளாண்மைப் பயிற்சி நடத்திக் கொண்டிருந்தேன். இடதுசாரித் தோழர்கள் நிறைந்த தஞ்சை மண் அது. என் மீது அன்பும் பற்றும் கொண்ட தோழர்கள் பலர் இருந்தனர். 'தோழர், சாணத்தைக் கரைப்பதை விட்டுவிட்டுப் புரட்சி நடத்த வாருங்கள், ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள்' என்று ஒரு தோழர் நகைச்சுவையாகச் சொன்னார். ஆனால், உண்மையில் சாணத்தைக் கரைப்பதன் உட்பொருளை விளக்கிய பின் அவர் மவுனமானார். சாணத்தைக் கரைப்பது என்பது தற்சார்பின் அடிப்படைச் செயல்பாடு. அது மக்களை மையப்படுத்திய செயல்பாடுகளின் ஆதாரம்.
தற்சார்பின் வேர்
ரசாயன உரங்களுக்கான மானியத்தை ஒருவர் ஆதரிப்பதும்கூடப் பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஆதரவுக் குரலாக இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இந்த நுண்ணரசியலை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.
நவீன இயற்கை வேளாண்மை ரசாயன மாசுபாட்டுக்கு எதிரானது, நோயற்ற வாழ்வுக்கு உதவுவது என்பதுடன் நீடித்த மேம்பாட்டுக்கு - வளங்குன்றாத வளர்ச்சிக்கு, இதைவிட்டால் வேறு வழியில்லை. இது பிறரை அண்டி வாழும் அடிமை வாழ்வுக்கு எதிராகத் தற்சார்புடன் வாழத் துணைச் செய்வது, விதை, எரு, தொழில்நுட்பம் என யாவற்றையும் உள்ளூரிலேயே உருவாக்கிக்கொண்டு வாழ வழி செய்வதாகும்.
ஆகவே, தற்சார்பை உறுதி செய்ய இயற்கைக்குத் திரும்புவோம் என்பதைவிட ‘இயற்கையை நோக்கி முன்னேறுவோம்' (Forward march to Nature) என்பதே பொருத்தமானதாக ல்இருக்கும்.
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago