2014: தமிழகம் கண்ட சுற்றுச்சூழல் சர்ச்சைகள்

By ஆதி வள்ளியப்பன்

வளர்ச்சி நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு நேரெதிராக சுற்றுச் சூழல் பிரச்சினைகள் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகின்றன. 2014-ம் ஆண்டில் தமிழகம் சந்தித்த முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் சில முந்தைய ஆண்டின் தொடர்ச்சியாகவும், சில மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற்றதாகவும் அமைந்தன. பல புதிய பிரச்சினைகளும் தோன்றின. அவற்றைப் பற்றி, ஒரு பார்வை:

1. வெளியேறிய மீத்தேன் நிறுவனம்

காவிரிப் படுகையில் 667 சதுர கிலோமீட்டர் பரப்பில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்காக தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனத்தின் அலுவலகம் டிசம்பர் மாதம் காலி செய்யப்பட்டது.காவிரி பாசனப் பகுதி விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த அலுவலகம் காலி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

2010-ம் ஆண்டில் மீத்தேன் எடுப்பதற்கான மத்திய அரசின் அனுமதி கிடைத்து, 2012-ல் தஞ்சாவூரில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. தான் அனுமதிக்கும்வரை காத்திருக்கும்படி ஜூலை 2013-ல் மாநில அரசு அந்நிறுவனத்திடம் தெரிவித்திருந்தது. இந்தத் திட்டம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட விவசாயம், நீர்நிலைகள், வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று திட்ட எதிர்ப்பாளர்கள், எதிர்ப்பை முன்வைத்தனர்.

2. பின்வாங்கிய எரிவாயுக் குழாய் திட்டம்

கொச்சியிலிருந்து மங்களூருக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை அனுப்பும் கெயில் நிறுவனத்தின் திட்டம், ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. தமிழக விவசாய நிலப் பகுதிகள் வழியாக 300 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்பட இருந்த இந்தத் திட்டத்துக்கு ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இத்திட்டத்துக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. வயல்களுக்கு பதிலாக, நெடுஞ்சாலை அருகே திட்டத்தைச் செயல்படுத்துமாறு தமிழக அரசு தெரிவித்தது. அதை ஏற்றுக்கொள்ளாத கெயில் நிறுவனம் இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்கியது.

3. கிரானைட் கொள்ளைக்குக் குட்டு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்பொருள் -வரலாற்று ரீதியில் முக்கியமான பகுதிகள், நீர்நிலைகள், தலித்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் உள்ளிட்டவை ஆக்கிரமிக்கப் பட்டும் அழித்தும் கிரானைட் குவாரி களாக மாற்றப்பட்டுள்ளன. இப்படி சட்ட விரோதமாக வெட்டப்பட்ட கிரானைட் கற்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, சிலர் பெரும் லாபம் பார்த்துள்ளனர்.

இப்படி மதுரை பகுதியில் கிரானைட் கற்பாறைகள் வெட்டியெடுப்பதில் நடைபெற்ற சட்டமீறல்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவை சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 11-ம் தேதி நியமித்தது. இப்போதைக்கு இந்த ஆய்வு மதுரை மாவட்டத்துக்கு மட்டுமானது. பல முனைகளில் இருந்து வந்த தடைகளைக் கடந்து அக்குழு செயல்பட ஆரம்பித்தது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், மக்கள் ஆதரவு இந்தக் குழுவுக்கு இருந்தது.

அதேபோல தமிழக ஆற்றுப்படுகைகள் முழுக்க மணல் கொள்ளையும், தென்மாவட்ட கடற்கரையோரங்களில் அரிய மணல், கார்னெட் மணல் கொள்ளையும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இவற்றுக்கு எதிராகவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

4. முற்றுப்புள்ளி இல்லாத போராட்டம்

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம் மூன்றே கால் ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

கூடங்குளம் அணுஉலையில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், அமைப்பு எதிர்காலத்தில் மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என்று கொச்சின் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்ட முதல் அணுஉலை டிசம்பர் முதல் வாரம்வரை 81 நாட்களுக்குச் செயல்படவில்லை. இதற் கிடையில் செயல்படாத கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டர்பைன்களை இயக்க டீசல் வாங்கப்பட்டதாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன் புதிதாக கட்டப்பட உள்ள அணுஉலை எண் 3, 4-யை நிர்மாணிப்பதற்கான உத்தேசச் செலவு ரூ. 39,747 கோடி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது அணுஉலை எண் 1, 2-ஐ விட இரண்டு மடங்கு. இழப்பீடு சார்ந்த பிரச்சினைகளே இதற்குக் காரணம்.

இதற்கிடையில் பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தபோது, மேலும் 12 அணுஉலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதில் 6 அணுஉலைகள் கூடங்குளத்தில் அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

5. வேண்டாம் அனல் மின் நிலையம்!

கிழக்குக் கடற்கரை சாலையில் விவசாயமும் நீர்வளமும் செழித்திருக்கும் செய்யூரில் 4,000 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டத்துக்கான முதலீடு ரூ. 24,200 கோடி. இதற்கான திட்டப் பகுதியில் 10 கி.மீ. சுற்றளவுக்குள் பறவை, இயற்கை வாழிடங்கள் உள்ளன. வரலாற்று, தொல்பொருள், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் 19 உள்ளதாக கம்யூனிட்டி என்விரான்மென்ட் மானிட்டரிங் அமைப்பு தெரிவிக்கிறது.

இத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது. அதேநேரம், அனல் மின் நிலையத்துக்கான ஏலத்தில் ஜி.எம்.ஆர். தனியார் நிறுவனம் பின்வாங்கிவிட்டது.

இந்தத் திட்டத்துக்கு எதிராகவும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமையவுள்ள 12 அனல் மின் நிலையங்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள அனல் மின் நிலையம் ஆகியவற்றுக்கு எதிராக உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

6. விலங்குக் காட்சியக கிலி

புதுடெல்லியில் உள்ள விலங்குக் காட்சிச் சாலையில் செப்டம்பர் மாதம் மசூத் என்ற இளைஞர் புலியின் வசிப்பிடத்துக்குள் விழுந்து, வெள்ளைப் புலி இழுத்துச் சென்று இறந்து போனார். அதன் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி நிறைய பேரின் அனுதாபத்தைப் பெற்றது.

இந்நிலையில், வண்டலூர் விலங்கு காட்சி சாலையில் நவம்பர் மாதம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விலங்கு காட்சி சாலை வளாகத்துக்குள் ஒரு புலி சுற்றியது. வித்யா என்ற அந்த 2 வயதுப் பெண் புலி, வழக்கமாகவே அடைப்பிடத்துக்குள் இல்லாமல் வேலியால் அடைக்கப்பட்ட பகுதிக்குள் சுற்றும் தன்மை கொண்டது. பின்னர், கூண்டு வைத்து இந்தப் புலி பிடிக்கப்பட்டது. அதேநேரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுத்தை, புலிகள் - மனிதர்கள் இடையிலான எதிர்கொள்ளலில் சில உயிரினங்கள் கொல்லப்பட்டன.

7. வெளுத்துப் போன ஊதா சாயம்

ஒன்றே முக்கால் ஆண்டுகளுக்கு முன் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது போன்ற எந்தத் தடையும் தற்போது இல்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நாடாளுமன்றத்தில் நவம்பர் மாதம் தெரிவித்தார்.

அதற்கு முன்னதாகவே, மரபணு மாற்றப்பட்ட 13 பயிர்களுக்கான களப் பரிசோதனைகளுக்கு அனுமதி அளிக்கலாம் என்று மரபணுப் பொறியியல் அங்கீகாரக் குழு ஜூலை மாதம் பரிந்துரைத்தது. டெல்லி பல்கலைக் கழகத்தில் பி.டி. கடுகு, மகாராஷ்டிரா பெஜோ சீட்ஸ் நிறுவனத்தில் பி.டி. கத்திரிக்காய் வயல்வெளி பரிசோதனை நடைபெற்றும் வருகிறது.

மரபணு மாற்ற பி.டி. பயிர் வயல்வெளி பரிசோதனைக்கு முன்னைப் போலவே இந்த முறையும் தமிழகத்தில் பரவலான எதிர்ப்பு எழுந்தது. மரபணு மாற்ற பி.டி. பயிர்கள் மகரந்தச் சேர்க்கை மூலமாக சுற்றுச்சூழலையும், நச்சுப் பொருட்கள் மூலம் மனித உடல்நலனையும் பாதிக்கும் என்று எதிர்ப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.

8. அது அப்போ, இது இப்போ!

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்த முயற்சித்தபோது எதிர்த்த பாரதிய ஜனதா கட்சி, தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் மாற்று வழியில் அதை செயல்படுத்துவது பற்றி யோசித்து வருவதாகக் கூறியுள்ளது. போக்குவரத்து, கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதைத் தெரிவித்துள்ளார்.

தமிழகக் கடற்கரையோரம் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்களை இத்திட்டம் பாதிக்கும் என்று, இந்தத் திட்டம் முன்பு தொடங்கப்பட்டபோதே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. 'கடலோர செயல்பாட்டு அமைப்பு' உள்பட பல அமைப்புகள் இப்போதும் அந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றன. தமிழக அரசும் இத்திட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தத் திட்டத்துக்கு 2007-ல் உச்ச நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்து, மறுஆய்வு செய்ய வலியுறுத்தி இருந்தது.

9. கடற்கரையில் காத்திருக்கும் ஆபத்து

கடலோர ஒழுங்காற்று மண்டல விதிமுறைகளை மீறி சென்னை மெரினா கடற்கரையில் இருந்து நீலாங்கரை வரையிலான 12 கி.மீ. கடற்கரைப் பகுதியில் 14 ஏக்கர் அளவுக்கு அழிந்து போயிருக்கிறது. இதற்கு சென்னை மாநகராட்சியின் விதிமீறல்களே காரணம் என்று கோஸ்டல் ரிசோர்ஸ் சென்டர் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் குற்றஞ்சாட்டியிருக்கிறது. தனியார் நிறுவனங்கள், தனிநபர்களுக்கும் இந்த விதிமீறலில் பங்கு இருக்கிறது.

கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்குள் ஏற்படுத்தப்படும் வளர்ச்சி நடவடிக்கைகள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப் பட்ட கடலோர ஒழுங்காற்று மண்டல விதிமுறை களை மீறியவர்களைக் கண்டறிந்து, தமிழக அரசு இன்னமும் அறிவிக்கவில்லை.

கடற்கரை பகுதியில் குப்பை கொட்டுதல், சாலை அமைத்தல், நிரந்தர கட்டுமானங்களை ஏற்படுத்துவதால், மண் அரிப்பு, பங்குனி ஆமைகள் அழிவு, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன.இது போன்ற விதிமீறல்கள் தொடரும்பட்சத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆழிப்பேரலை போல மீண்டும் வந்தால், மிகக் கடுமையான அழிவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

10.தொழில் மாசு: சீரழியும் கடலூர்

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம், அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள நிலத்தடி நீர், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கொண்டிருப்பதாகவும், மனிதர்கள் குடிப்பதற்கு லாயக்கற்றது என்றும் சிப்காட் பகுதி கம்யூனிட்டி என்விரான் மென்டல் மானிட்டர்ஸ் நடத்திய ஆய்வு எச்சரிக்கிறது. இதற்காக சிப்காட் வளாகம், சுற்றுவட்டாரத்தில் உள்ள 11 பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பரிசோதிக்கப்பட்டன. அதில் மக்னீசியம், கால்சியம், சல்பேட், குளோரைடு உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்