தமிழ்நாட்டில் கொசுக்களுக்குச் சீசனே கிடையாது. மழைக்காலத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. கொசு கடித்தால் மலேரியா, டெங்கு வந்துவிடுமே என்று கொசுவர்த்தியை வைத்துவிட்டுத் தூங்குபவர்களில் சிலருக்குக் காலையில் மூக்கு ஒழுகி, தொண்டை கட்டிக்கொண்டு, கண் எரிச்சலும்கூட வந்துவிடுகிறது.
“ஒரு கொசுவர்த்தியை எரிக்கும்போது வெளிவரும் நுண்துகள் 75 முதல் 137 சிகரெட்களைப் புகைக்கும்போது வருகிற நுண்துகளுக்குச் சமம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். காற்றில் கலந்துள்ள எல்லா நுண்துகளுமே சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பவைதான். அதிலும் கொசு விரட்டியில் இருந்துவரும் நுண்துகள் மோசமானது. இது 2.5 மைக்ரோ மீட்டர் விட்டம் மட்டுமே கொண்டது. அதனால் எளிதாக நம் நுரையீரலுக்குச் சென்று பல நோய்களை ஏற்படுத்துகிறது" என்று எச்சரிக்கிறார் மதுரை அமெரிக்கன் கல்லூரி உதவிப் பேராசிரியர் எம். ராஜேஷ்.
வேறு என்ன வழி?
சரி, அப்படியானால் தூக்கத்தைத் தொந்தரவு செய்யும் கொசுக்களை எப்படி விரட்டுவது? இயற்கை வழியிலேயே கொசுவை விரட்டலாம் என்கிறார். கொசு விரட்டும் மேட், திரவம், ஸ்பிரே போன்றவையும் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பவைதான். இவற்றுக்குப் பதிலாகக் கொசுவுக்குப் பிடிக்காத நறுமணம் பரப்பும் செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் இயற்கை முறையில் கொசுக்களை விரட்டலாம்.அவர் அறிமுகப்படுத்திய செடிகள்:
இயற்கை கொசுவிரட்டிகள்
சாமந்திப்பூ (Calendula Officinalis):
இச்செடியில் இருந்துவரும் தனித்தன்மை கொண்ட வாசனையைப் பூச்சிகளும், உயிரினங் களும் விரும்புவதில்லை. இச்செடிகளைக் கடந்து வீட்டுக்குள் செல்லக் கொசுக்கள் தயங்குகின்றன. இச்செடியை நிழலில் வைத்தால் வளர்ச்சி தாமதமடையும் என்பதால், வெயிலில் வளர்ப்பது நல்லது. அசுவினி உள்ளிட்ட பூச்சிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது என்பதால், விவசாயத் தோட்டத்திலும் இதை வளர்க்கலாம்.
சிட்ரோநெல்லா புல் (Citronella):
இலைகளைக் கசக்கினால் எலுமிச்சை மணம் தூக்கலாக வீசுவதுதான், இந்தப் புல்லின் தனிச்சிறப்பு. இதில் இருந்து எடுக்கப்படும் சிட்ரோ நெல்லா எண்ணெய் வாசனைப் பொருளாக வும், மூலிகைத் திரவமாகவும் பயன்படுகிறது. இந்த எண்ணெயை மெழுகுவர்த்தி, விளக்குகளில் ஊற்றி எரித்தோ, சருமத்தில் தேய்த்துக்கொண்டோ கொசுக்களில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
ஹார்ஸ் மின்ட் (Horse mint):
ஒரு வகை புதினா செடியான இதன் மணம் சிட்ரோநல்லா புல்லைப் போலவே இருக்கும். வெப்பமான இடங்களிலும், மணற்பாங்கான பகுதி யிலும்கூட நன்றாக வளரும். பல்லாண்டுத் தாவரம் என்பதால், ஒரு முறை நட்டுவிட்டால் நான்கைந்து ஆண்டுகளுக்கு இது கொசுவிரட்டியாகச் செயல்படும்.
கேட்னிப் (Catnip):
சமீபத்தில் கண்டறியப் பட்ட, புதினா குடும்பத்தைச் சேர்ந்த கொசுவிரட்டி இது. டீட் என்ற ரசாயனப் பூச்சிக் கொல்லியைவிட, இது பல மடங்கு சிறப்பாகச் செயல் படக்கூடியது. ஒரேயொரு செடி இருந்தால்கூட வீட்டுப் பக்கமே கொசு வராது. இதன் இலைச் சாற்றை உடலில் தேய்த்துக் கொள்ளலாம். வெயில் மற்றும் லேசான நிழலில் நன்கு வளரும். இதன் வாசனை பூனைகளுக்குப் பிடிக்கும் என்பதுதான், இதன் பெயருக்குக் காரணம்.
எலுமிச்சை பாம் (Lemon Balm):
இதுவும் புதினா வகையைச் சேர்ந்ததுதான். ஆனால், எலுமிச்சை வாசனை வரும். வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படும் இந்தச் செடியை வீட்டில் வளர்த்தால், வீடும் நறுமணமாக இருக்கும் கொசுக்களுக்கும் குட்பை சொல்லலாம்.
அப்பக்கொடி (Ageratum):
இந்தச் செடியில் பூக்கிற வெளிர் ஊதா மற்றும் வெண்ணிறப் பூக்களில் கௌமாரின் என்ற வாசனைப் பொருள் உருவாகிறது. இந்தக் கடுமையான வாசனை கொசுக்களை விரட்டியடிக் கிறது. வணிக ரீதியாகக் கடைகளில் விற்கப்படும் கொசு விரட்டிகள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. ஆனால், மற்ற தாவரங்களைப் போல இதன் சாற்றை உடம்பில் தடவிக் கொள்ளக் கூடாது, சருமத்துக்குக் கேடு விளைவிக்கும்.
லாவண்டர் (Lavandula Angustifolia):
கொசுக்களை விரட்டும் அற்புதச் செடியான இதற்கு, அதிகத் தண்ணீர் தேவையில்லை. கவனிப்பும் அதிகம் தேவையில்லை என்பதால், வீட்டில் எளிதாக வளர்க்கலாம். லாவண்டர் எண்ணெயைத் தண்ணீரில் கலந்து, ரசாயனம் இல்லாத கொசுவிரட்டி லோஷனைத் தயாரிக்கலாம்.
ரோஸ்மேரி (Rosmarinus Officinalis):
ரோஸ்மேரி செடியை வீட்டில் வளர்த்தால், கொசுக்கள் மட்டுமின்றி மற்ற பூச்சிகளும் வீட்டை அண்டாது. இச்செடி அதிகக் குளிரைத் தாங்காது என்பதால் கார்த்திகை, மார்கழி மாதங்களில் வீட்டுக்குள் வைத்து வளர்க்கலாம்.
இவற்றைத் தவிர நமக்கு நன்கு அறிமுகமான வேப்பமரம், துளசி, கிராம்புச் செடி போன்றவற்றை யும் வீட்டில் வளர்த்து கொசுக்களை விரட்டலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago