ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரம்பரிய அவுரி சாயக் கலைஞர் பரம்பரையின் கடைசிச் சாயக்காரரான எல்லப்பாவின் மரணத்துடன், அவுரி சாயக் கலை சார்ந்த ஒரு வாழ்க்கைமுறையும் சேர்ந்து மடிந்துவிட்டது.
ஆந்திரப் பிரதேசத்தின் மகத்தான அவுரி சாயக் கலைஞர் தலைமுறையின் கடைசிக் கொழுந்தான எல்லப்பா, தலைசிறந்த கைவினைக் கலைஞர். அவரது மறைவு என்பது ஓவிய மேதை பிகாசோ, இசை மேதை மொசார்ட் இறந்ததைப் போன்றது. நாம் அறியாமலேயே ஒரு மேதை இந்தியாவில் இருந்தும், இறந்தும் போய்விட்டார். இழப்பு மற்றும் அழிக்கப்படுவனவற்றின் வரலாற்றைத் தொடர்ந்து எழுதிவரும் மானுடவியலாளனான எனக்கு, இந்த இறப்பு ‘இஷி’யின் மரணத்தைப் போன்றது. அமெரிக்காவின் யாஹி பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த கடைசி மனிதர். 1916-ல் அவர் மரித்தபோது ஒரு மொழி இறந்தது, ஒரு வாழ்க்கைமுறையும் மறைந்தது. அத்துடன் கனவுக் கூட்டமும் காற்றில் கலந்தது. இன்றைக்கு வெவ்வேறு விதமான வாழ்க்கைமுறைகள் தொடர்ந்து மறைந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றை ஞாபகப்படுத்தவோ, மீட்டெடுக்கவோ, மறு ஆக்கம் செய்யவோ எந்த வழியும் இல்லாமல் இருக்கிறது.
இயற்கை சாயத்தின் மரணம்
அவுரிச் சாயம், இந்தியாவுக்கே உரிய தனிச்சிறப்பான இயற்கைச் சாயம். அதே நிறத்தில் செயற்கையான சாயத்தை வேதியியலாளர்கள் உருவாக்கியபோது, இந்த இயற்கை சாயத் தொழில் மங்கத் தொடங்கியது. ஆனால், இயற்கைச் சாயத்தின் நிறத்துடன் செயற்கைச் சாயத்தின் நிறத்தை ஒப்பிடவே முடியாது. ஃபிரான்சில் உள்ள பாரம்பரியமிக்க சார்ட்ரஸ் தேவாலயத்தின் கண்ணாடி ஜன்னல்களை, நம் வீட்டு ஜன்னல்களுடன் ஒப்பிடுவதைப் போன்றது அது.
இயற்கையான அவுரிச் சாயம் மறைந்ததும், ஒரு வாழ்க்கை முறையும் மங்கத் தொடங்கியது. அதேநேரம், இந்தியாவைப் பொறுத்தவரை எதையும் முழுமையாகத் துடைத்து அழிக்க முடிவதில்லை. எங்காவது மூலை முடுக்குகளில் அமைதியான போராட்டத்துடன் அந்த வாழ்க்கைமுறையை யாரோ சிலர் தொடர்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.
ஆர்வமில்லை
சமீபத்தில் பத்மினி பலராமின் ஆய்வு வழியாக எல்லப்பாவின் கதை ஒரு வதந்தி போலக் கசியத் தொடங்கியது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைனைச் சேர்ந்த அவர் எல்லப்பாவைத் தமது நிறுவனத்துக்கு அழைத்திருக்கிறார். பேராசிரியர் ஒருவருக்கான சம்பளத்துடன் சாயத் தொட்டி அமைப்பதற்காக எல்லப்பா அழைக்கப்பட்டார். ஆனாலும், எல்லப்பா சந்தோஷமாக இல்லை. அங்கிருந்த யாரும் சாயக் கலையைக் கற்றுக்கொள்வதற்கு உண்மையில் விரும்பவில்லை என்பதை உணர்ந்து மனம் புண்பட்டார். பின்னர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் நிறுவனத்திலிருந்து வெளியேறித் தனியார் வேதி சாயப்பட்டறையில் கூலியாக வேலைக்குச் சேர்ந்தார். எல்லப்பா தனது தொழில்நுட்பத்தைப் பிறருக்குச் சொல்லாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். தனது தொழிலின் சகல நுணுக்கங்களையும் அறிந்திருந்த அவர், இரண்டுங்கெட்டான்களுக்கு எதிரியாக இருந்தார்.
‘தஸ்தகர் ஆந்திரா’ அமைப்பின் தலைவியான உஸ்ரம்மா, கலம்காரி ஓவியக் கலைஞர் குருப்பா செட்டியின் உதவியுடன் எல்லப்பாவைத் தனது அமைப்புக்குள் வெற்றிகரமாகக் கொண்டுவந்தார். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் செய்ய முடியாத விஷயத்தை, உஸ்ரம்மா சாதித்தார். அவுரிச் சாயம் பாரம்பரியத்தை இழக்காமல் இருக்க வேண்டுமானால், நல்ல ஆன்மா, நல்ல மண், நல்ல தட்பவெப்ப நிலை போன்றவை ஒன்றுகூடி வரவேண்டும் என்பதை உஸ்ரம்மா உணர்ந்திருந்தார். “தன்னுடைய சாயம் மென்மையான குழந்தையைப் போன்றது. கடுமையாக நடத்தினால் அது நம்மை விட்டு விலகிப் போய்விடும்” என்பார் எல்லப்பா.
புதிய மலர்ச்சி
எந்த வண்ணமாக இருந்தாலும், அது அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தின் இழைகளால் ஆனது. அந்த நிலையில், ஒரு கைவினைக் கலை என்பது புரிதலை நோக்கிப் பயணிக்கும் சடங்கு. சின்னூர் நெசவாளர்களுக்கு அதைக் கற்றுக்கொடுக்க எல்லப்பாவைப் பணித்தார் உஸ்ரம்மா. சின்னூர், எல்லப்பாவுக்குப் பிடித்துப்போனது. பாரம்பரிய நெசவாளர்கள், நண்பர்கள் சேர்ந்த ஒரு சமூகம் அது. கூட்டுமுயற்சிக்கு இடமளிக்காத தொழில்முறைக் கல்விக்கூடம் அல்ல அந்த இடம். அங்குள்ள நெசவாளர்கள் தங்கள் கிராமத்தில் சாயத் தொட்டிகளை உருவாக்க அவரை அழைத்தனர்.
அவுரிச் சாயத்தை உருவாக்கும் ஆரம்பக்கட்ட சடங்குகளில் எல்லப்பா சமரசம் செய்துகொள்ள மாட்டார். ஒரு வண்ணத்துக்கு உயிர் அளிப்பது என்பது, நினைவுகள், பழைய நடைமுறைகள், உழைப்பு போன்ற அனைத்தையும் உயிர்ப்பிப்பதுதான்.
உயிர் பெற்றது
சாயத் தொட்டியை உருவாக்கும் போது பழைய நினைவுகள் பிறப்பெடுக்கும், பழைய சங்கதிகள் ரீங்கரிக்கத் தொடங்கும். சுருக்கமாக, பழமை உயிர்பெறத் தொடங்கும்.
ஒரு சாயத் தொட்டியைக் கட்டுவது என்பது நிச்சயமாக ஒரு கலைதான். பல்வேறு நொதித்தல் சுற்றுகளுக்கு ஆளாகும் நடைமுறை அது. ஒவ்வொரு சாயத் தொட்டியும் தயாராவதற்கு அதற்கே உண்டான கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளும். சரியான காத்திருப்பு, அவகாசம் மூலம் சின்னூரில் சாயத் தொட்டிகள் உருவாயின.
அங்கிருந்தபோது சொந்த வீட்டில் இருப்பதைப் போல எல்லப்பா பாதுகாப்பாக உணர்ந்தார். அவருக்கு மூன்றாயிரம் ரூபாய் சம்பளம் தரப்பட்டது. அதில் திருப்தி அடைந்த அவர், தனது இளைய மகனையும் சின்னூருக்கு அழைத்துக்கொண்டார்.
சாயம் உருவாக்கும் கலையைக் கற்றுக்கொடுப்பது, ஒரு குட்டி நாகரிகத்தையே உருவாக்குவதற்கு ஒப்பானது. அதில் இயங்குபவர் தனது விரல்நுனியில் அறிவைக் கொண்டவர். “கைக்கு எல்லாம் தெரியும். சாயக் கலவையின் வெப்பநிலையை அளக்க நினைத்தால், கையே எங்களுக்கு அதைச் சொல்லிவிடும்" என்கிறார் கைவினைஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சக்தி. சாயத்தில் உள்ள பி.எச். மதிப்பை எப்படிக் கண்டுபிடிப்பது என்று சக்தி ஒருமுறை எல்லப்பாவிடம் கேட்டுள்ளார். “முகர்ந்து பார்ப்பேன்” என்று அவருக்குப் பதில் சொல்லியிருக்கிறார் எல்லப்பா. பி.எச். அளவைத் தெரிவிக்கும் அளவீட்டுக் கருவியாக மணமே இருந்துள்ளது.
எல்லப்பா மீது உஸ்ரம்மா பெரும் நன்றியறிதலைக் கொண்டிருக்கிறார். தற்போது ஆந்திராவில் இயற்கையாக அவுரிச் சாயத் தைத் தயாரிக்கும் சாயக்காரர் குழுவை உரு வாக்கிய பெருமை எல்லப்பாவைச் சேரும்.
இயற்கையான மண்சட்டி சிவப்புச் சாயம் காணாமலேயே போய்விட்டது குறித்துச் சோகத்துடன் குறிப்பிடுகிறார் உஸ்ரம்மா. கலை வரலாற்று ஆராய்ச்சியாளரும் நிலவியலாளருமான ஆனந்த குமாரசுவாமி தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குங்குமச் சிவப்பு நிறம் பற்றி எழுதியிருக்கிறார். தரப்படுத்தப்பட்ட செயற்கைச் சிவப்பு வண்ணத்தில், போதுமான சிவப்பு இல்லை என்று கூறியுள்ளார். ஒவ்வொரு கிராமத்திலும் சிவப்பு நிறம் உயிர்ப்புடன் வித்தியாசமாகத் திகழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு கைவினைக் கலைஞர் சமூகமும் சிவப்பு வண்ணத்தில் தங்களது சுயமான பண்பொன்றைச் சேர்க்கிறது.
எல்லப்பாக்களைக் கவுரவிப்பது
இயற்கைச் சாயங்களும் வண்ணங்களும் சந்திரமௌலிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவை. இயற்கையான சாயங்கள் குறித்துக் கதை கதையாகச் சொல்வதில் அவர் நிபுணர் என்று உஸ்ரம்மா கூறுகிறார். அவர் வழக்கமான விஞ்ஞானி அல்ல, தனது வாழ்நாள் முழுவதையும் கைவினைக் கலைஞர்களுடன் கழித்த வேதியியலாளர். சி.என்.ஆர். ராவும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும் கவுரவிக்கப் படுவதைப் போலவே எல்லாப்பாவும் சந்திரமௌலியும் கவுரவிக்கப்பட வேண்டியது அவசியம். பாரம்பரியச் செய்முறைகளின் நடமாடும் நாட்டுப்புறவியல் களஞ்சியம் அவர்.
சந்திரமௌலி அரசு வேதியியலாளராக இருந்தவர். ஓய்வுபெற்ற பின்னர், தனது பாரம்பரிய அறிவு வளத்தைச் சமூகத்துக்கு அவர் திரும்ப அளித்தார். அவரும் உஸ்ரம்மாவும் சேர்ந்து பாரம்பரிய வண்ணங்களுக்குப் புத்தாக்கம் ஊட்டினர். இயற்கை சாயத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுப்பதில் கலம்காரி ஓவியர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் அவர் பார்க்கவில்லை.
1997-ல் சந்திரமௌலி இறந்துபோனதுதான் பெரும் சோகம். அதன் பிறகுதான் உஸ்ரம்மா எல்லப்பாவைத் தேடிக் கண்டறிந்தார். சத்தமின்றி மறைந்து வரும் பழைய தலைமுறையைப் பற்றித் துக்கத்துடன் நடத்திய தேடல் அது. எல்லப்பா போன்ற பாரம்பரிய அறிவு வளத்தைக் கொண்டிருப்பவர்களைக் கவுரவிக்க வேண்டியது அவசியம். அவர்கள் நமது வண்ணங்களின் பாதுகாவலர்கள்
(ஷிவ் விஸ்வநாதன், ஜிண்டால் ஸ்கூல் ஆப் கவர்மெண்ட் அண்ட் பப்ளிக் பாலிசி-யில் பேராசிரியர்)
© தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: ஷங்கர்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago