புதிய பறவை 05: வேம்பை நாடிய வேதிவால் குருவி

By டாக்டர் வி.விக்ரம்குமார்

சித்திரை மாதம். காய்களாக உருமாறக் காத்திருந்த வேப்பம் பூக்களை, ஒரு மரத்தின் கீழிருந்து ரசித்துக்கொண்டிருந்தேன். நீண்டிருந்த பட்டை வாலைச் சுமந்து கொண்டு திடீரென ஒரு பறவை அதன் ஒரு கிளையில் வந்து அமர்ந்தது.

ஏற்கெனவே பலமுறை அந்தப் பறவையை ரசித்திருந்தாலும், அன்றைக்கு அந்தப் பறவை மிக மிக அருகில்! அது அழகு நிறைந்த வேதிவால் குருவி. ஆங்கிலத்தில் Paradise Flycatcher.

வெள்ளை நிறத்திலிருந்த அது ஆண் குருவி. பறவை இனத்தில் பொதுவாக ஆண்களுக்கே அழகான இறக்கைத் தொகுதிகள் இருக்கும். பெண் பறவைகளைக் கவர்ந்தாக வேண்டுமே!

படம் எடுக்க என் கைகள் பரபரத்தன. கேமராவை எடுத்து வரச் சென்றிருந்த நேர இடைவெளியில் பறவையைக் காணவில்லை. ‘கண்ணுக்கெட்டியது, கேமராவுக்கு எட்டவில்லை’ என்ற ஏமாற்றத்தில் அந்த இடத்திலேயே கால் மணி நேரம் காத்திருந்தேன்.

கொடி போன்ற வால்

என் காத்திருப்புக்குப் பலன் கிடைத்தது. மீண்டும் அதே மரத்துக்கு வந்த குருவி, கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அந்த மரத்தின் வெவ்வேறு கிளைகளில் மாறி மாறி அமர்ந்தது. அதன் நீண்ட வால் வேப்பம் பூக்களைத் தீண்டத் தீண்ட, பறவையின் ஸ்பரிசத்தைச் சுமந்து கொண்டு வந்த வேப்பம் பூக்கள் என் மீது சிதறி விழுந்தன. வேப்பம் பூக்கள் எந்த இடத்தில் உதிர்கின்றனவோ, அதற்கு மேலுள்ள கிளையில் பறவை இருக்கும் என்ற உத்தியைக் கடைப்பிடித்து, பறவையை நோக்கினேன்.

வேப்ப மரத்தை ஒட்டியிருந்தது ஒரு குட்டிச் சுவர்! கேமராவை ஒரு கையில் சுமந்து கொண்டு, மறுகையின் உதவியுடன் சுவரில் ஏறிப் பறவை இருந்த கிளைக்கு வெகு அருகில் சென்றுவிட்டேன். பேரதிர்ச்சி… பறவையைக் காணவில்லை! மீண்டும் அந்த மரத்தை நாடி அந்தப் பறவை வரும் என்ற நம்பிக்கை இருந்தது. வேப்ப மரம் ஈர்த்ததா, இல்லை என் எண்ணம் ஈர்த்ததா என்று தெரியவில்லை… எங்கிருந்தோ வேகமாக பறந்து வந்து, எனக்கு மிக அருகில் அமர்ந்தது அந்த வேதிவால் குருவி.

அதன் கொண்டையின் அழகையும் நீண்ட வால் தந்த வியப்பையும் ரசித்தேன். காற்று வீசியதற்கு ஏற்ப அதன் வால் முன்னும் பின்னுமாகத் துடுப்புபோல அழகாக ஆடியது.

அதன் வெண்ணிற வாலில் தென்பட்ட கருநிறக் கோடுகள், வாலுக்குக் கூடுதல் அழகு சேர்த்தன! பல்வேறு கோணங்களில் வாலைத் திருப்பிய அந்தப் பறவை, இறுதியாகக் கொடி அசைவதைப் போல வாலை அசைத்துக்கொண்டே பறந்து சென்று அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டது!

கட்டுரையாளர், சித்த மருத்துவர் - இயற்கை ஆர்வலர்,

தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்