அதோ, அந்தப் பறவை

மாலை மயங்கும் நேரத்தில் வானில் இறக்கை அடித்துப் பறக்கும் வவ்வால், தோட்டத்தில் சரசரவென இலைச் சருகுகள் சரசரக்க ஊர்ந்து செல்லும் பாம்பு, வீட்டுப் பொந்துகளில் உணவைச் சிறுகச்சிறுகச் சேர்க்கும் எறும்பு போன்ற உயிரினங்களின் சரியான பெயரும் வகையும் தெரியுமா என்று கேட்டால், எத்தனைக்கு நம்மால் பதில் சொல்ல முடியும்? கொஞ்சம் கஷ்டம்தான் இல்லையா?

இன்று நாம் புழங்கிக் கொண்டிருக்கும் வீடும் அலுவலகமும் அமைந்திருக்கும் நிலப்பகுதியில் ஒரு காலத்தில் நிச்சயம் ஒரு காடு இருந்திருக்கும். நமது மூதாதைகள் விலங்குகளாகவும், பின்னர் விலங்குகளுடன் நெருக்கம் பாராட்டிய பழங்குடிகளாகவும், வீட்டிலேயே ஆடு, மாடு, கோழிகளுடன் வளர்ந்த கிராமத்து மனிதர்களாகவும்தான் ஒரு காலத்தில் இருந்தார்கள்.

சூழ்ந்த இயற்கை

இன்றைக்கு முழுமையும் நகரத்து ஜீவிகளாகிவிட்ட நம்மில் பலரும் இயற்கையிடமிருந்து பெரிதும் விலகிவிட்டோம். நம்மைச் சுற்றி வாழ்ந்துகொண்டிருக்கும் புழு பூச்சிகள், பறவைகள், உயிரினங்களைப் பற்றிப் பெரிதாக நாம் எதுவும் தெரிந்துகொள்ளாத நிலையிலேயே, காலம் அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் உயிரினங்களைப் பார்க்கவும் அறிந்துகொள்ளவும் விலங்கு காட்சிச் சாலைக்கோ, காட்டுக்கோ போக வேண்டிய அவசியமில்லை. நம்மைச் சுற்றிக் கொஞ்சம் கவனித்தாலே போதும், எண்ண முடியாத அளவுக்குப் பறவை வகைகளையும் பூச்சி வகைகளையும் பார்க்க முடியும். அவற்றின் தோற்றமும் வாழ்க்கையும் அழகானது, சுவாரசியமானது.

கள வழிகாட்டி

காலம் காலமாகத் திருத்தி எழுதப்பட்ட நுணுக்கமான வலைப்பின்னல் களைக் கொண்ட இயற்கை, நாம் நினைப்பதை விடவும் செழிப்பானது. கிடைக்கும் இத்துணூண்டு சுவர் இடுக்கிலும் அரச மரம் வேர்விடும். சின்னஞ்சிறு பொந்திலும் எறும்புக் காலனி அமைத்துவிடும். ஜன்னல் சன் ஷேடில் மாடப்புறா கூடு வைத்து இனம் பெருக்கும்.தனக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வதுதான் இயற்கையின் அடிப்படைக் குணம். அந்த வகையில் நெருக்கடிகளும் சுற்றுச்சூழல் சீரழிவும் பெருகிவிட்ட நகர்ப்புறங்களில் செழித்திருக்கும் உயிரினங்களைத் தெரிந்துகொள்ள வழிகாட்டுகிறது ஒரு புத்தகம்.

சென்னையைச் சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலர் பிரெஸ்டன் அய்மாஸ் ஆங்கிலத்தில் எழுதி, சென்னை இயற்கையாளர்கள் சங்கம் (Madras Naturalists' Society) சமீபத்தில் வெளியிட்டுள்ள A guide to some Urban Fauna of India என்ற கள வழிகாட்டிதான் அது. நாடெங்கிலும் நகர்ப்புறங்களில் காணக்கூடிய சுமார் 500 உயிரினங்களை இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீர்நிலவாழ்விகள், மீன்கள், பூச்சிகள், சிலந்திகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

அறிவதன் முதல் படி

நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களை அறிந்துகொள்வதற்கான முதல் படி, அவற்றை வகை பிரித்து அறிவதும் அவற்றின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்வதும்தான். அதற்கு வசதியாக உயிரினங்களை அடையாளம் கண்டறிய உதவும் படங்கள், அறிவியல் பெயர், வாழும் இடங்கள், கூடுதல் விவரங்கள் போன்றவை இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஒரே மாதிரித் தோற்றம் தரும் உயிரினங்களை வேறுபடுத்தி அறிவதற்கான குறிப்புகள் முக்கியமானவை. ஒரே உயிரினத்தின் ஆண்-பெண் வேறுபாட்டை விளக்கும் படங்கள், நேர்வாக்கு படம், குறுக்குவெட்டுப் படம் போன்றவை ஓர் உயிரினத்தைத் திட்டவட்டமாக அடையாளம் காண உதவுபவை. இதை மனதில்கொண்டு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மூடநம்பிக்கைகள்

பாம்பு, நத்தை, சிலந்தி, தேள், பூரான், அட்டை உள்ளிட்டவற்றைச் சாதாரணமாகக் கண்டவுடன் அருவருப்படைகிறோம். அடித்தோ, நசுக்கியோ கொன்றுவிடுகிறோம், அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறியாமலேயே. சில உயிரினங்கள் நம் வாழ்க்கைக்கு இடையூறாகத் தெரியலாம். ஆனால், இயற்கை சமநிலைக்கு அவை ஆற்றிக் கொண்டிருக்கும் பங்கு பற்றி நமக்கு முழுமையாகத் தெரியாது. இயற்கை செழித்திருக்க, சிற்றுயிர் முதல் பேருயிர்வரை எல்லாமே அத்தியாவசியம்.

இவை ஒவ்வொன்றையும் கண்டு உணர்ந்து அறிந்துகொள்வதற்கு முன்னதாகவே, நமது செயல்பாடுகளால் அவை அழிந்துபோய்விடக் கூடிய மோசமான நிலையே நிலவுகிறது. உயிரினங்களைப் பற்றி மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள், வெறுப்பு போன்றவை மிகுந்துள்ள நிலையில், அவற்றைக் களைந்து அறிவியல்பூர்வாக அணுகுவதற்கு இப்புத்தகம் உதவுகிறது.

முன்னோடி முயற்சி

இயற்கை பாதுகாப்புக்கு இதுபோன்ற அடிப்படைத் தகவல்களைக் கொண்ட கள வழிகாட்டிகள் முக்கியமானவை. இயற்கை மீது ஒருவருக்கு உள்ள ஆர்வத்தைத் தூண்டி, அத்துறைக்குள் இழுக்கக்கூடியவை. நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் எளிதில் காணக்கூடிய உயிரினங்களை அடையாளம் காணும் வகையில் இந்த வழிகாட்டி தொகுக்கப்பட்டுள்ளது மிகவும் சிறந்த அம்சம். அந்த வகையில் இது ஒரு முன்னோடி முயற்சி.

அதேநேரம் இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பும் பக்க அமைப்பும் இன்னும் சற்று ஈர்க்கும் வகையில் இருந்திருக்கலாம். காட்டுயிர்-இயற்கை சார்ந்த இதழ்கள், புத்தகங்கள் ஆகியவற்றின் சிறப்பம்சங்கள், அவற்றில் பொதிந்திருக்கும் அழகான தரும் படங்களும் வடிவமைப்பும்தான்.

கள அனுபவம்

காட்டுயிர், இயற்கை சார்ந்து பிரெஸ்டன் அய்மாஸின் 35 ஆண்டு காலக் கள அனுபவம் இந்த நூலைத் தொகுப்பதற்கு நுணுக்கங்களைச் சேர்ப்பதற்கும் ஆதாரமாக இருந்துள்ளது. சென்னை பாம்புப் பண்ணை, உலக இயற்கை நிதியம் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த இவர், காட்டுயிர் ஒளிப்படக்கலை, காட்டுயிர் ஓவியக் கலையில் ஆர்வம் கொண்டவர். கானுலா, பறவை நோக்கும் உலாக்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

படங்களும் அடிப்படைத் தகவல்களும் நிரம்பிய கையடக்கமான இந்த நூல், காட்டுயிர் ஆர்வலர்களுக்கு இயற்கையின் புதிய கதவுகளைத் திறந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. இது போன்ற நூல்கள் தமிழில் வரும்போது, அந்தப் புத்தகங்கள் வெளியிடப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறும்.

A guide to some Urban Fauna of India, பிரெஸ்டன் அய்மாஸ்,
வெளீயீடு: மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டி, 8, ஜானகி அவென்யு, அபிராமபுரம், சென்னை - 600 018
மின்னஞ்சல்: madrasnaturalistssociety@gmail.com, தொலைபேசி:9840090875

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

3 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்