அ
கலாது அணுகாது இருந்தால்தான் தீக்காய முடியும்-
யாரை எங்கே வைப்பது என்பதுதான் பண்ணை ஒருங்கமைத்தலின் அடிப்படை. ஒரு மரத்தை எங்கே வைக்க வேண்டும், எப்படி வைக்க வேண்டும் என்பதில் தொடங்கி பண்ணைக் குட்டையை எங்கே வெட்டுவது என்பது போன்ற பல கூறுகளை உள்ளடக்கியதுதான் இந்த ஒருங்கமைப்பு.
அவ்வாறு அமைப்பதற்கான இலக்கணங்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். முதலில் நமது மரபு சார்ந்த பகுப்பு முறை என்ன என்பதைப் பார்க்க வேண்டும். பின்னர் இன்றைய அறிவியல் கூறுகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய முன்னோர்கள் நிலத்தை, இட அடிப்படையிலும் பருவங்களின் அடிப்படையிலும் திணைகளாகப் பகுத்துள்ளனர். இது நமக்கு முதல் இலக்கணம். அதே முறையைப் பின்பற்றி ஒரு பண்ணையை வடிவமைக்க வேண்டும்.
பெருந்திணை மண்டலங்களாக அன்று அறியப்பட்டதை நாம் இன்று பண்ணை அளவிலான நுண்திணை மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும். இரண்டுக்கும் சூத்திரம் ஒன்றுதான்.
நுண்திணை மண்டலங்கள்
ஒவ்வொரு பண்ணையும் ஒரு நுண்திணை மண்டலமாகவே கருதப்படும். முதலில் பண்ணையின் ஓர் உறுப்பு (குளம் அல்லது வீடு) அல்லது உறுப்பினர் (கோழி அல்லது மாடு) அமையும் இடத்தைக் கண்டறிய வேண்டும். இதற்கு ‘இடனறித் திறன்’என்று பெயர். இடத்தைக் கண்டறிய பல கூறுகளை ஆராய வேண்டும். அந்த உறுப்பு நமக்கு எந்த வகையில் உதவப் போகிறது, அதற்கு நாம் எந்த வகையில் உதவப்போகிறோம் என்பது முதல் தெரிவு.
அடுத்தாக அந்த உறுப்பு மற்ற உறுப்புகளுக்கு எப்படி உதவப் போகிறது என்பதும் மற்ற உறுப்புகள் இதற்கு எப்படி உதவப்போகின்றன என்பதும் இங்கு முதன்மையாகிறது.
அக ஆற்றல், புற ஆற்றல்
அடுத்து நமது பண்ணையில் நிலவும் சூழ்நிலைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது பண்ணைக்குள் கிடைக்கும் ஆற்றல் பயன்கள், பண்ணைக்கு வெளியில் இருந்து கிடைக்கும் ஆற்றல் பயன்கள் போன்றவற்றைக் கணக்கிட வேண்டும். பண்ணைக்குள் கிடைக்கும் பயன்கள் என்று பார்த்தால் மண், கிணற்று நீர், தாவரங்கள், கால்நடைகள் முதலியவை. வெளியில் இருந்து கிடைக்கும் பயன்கள் என்று பார்த்தால் மழை, வெயில், காற்று முதலியவை. இந்தப் பயன்கள் சில நேரங்களில் தொல்லையாகவும் அமையக் கூடும்.
பண்ணைக்கு நீரைத் தரும் மழை பெருவெள்ளமாக மாறும்போது நம்மால் எதிர்கொள்ள முடியாது. மகரந்தச் சேர்க்கை முதல் பல வழிகளில் நமக்கு உதவும் காற்று, புயலாக மாறும்போது பெரும் சேதம் விளையக் கூடும். எனவே, இந்த ஆற்றல் ஓட்டங்கள் அனைத்தும் நமக்கு ஏதோ ஒருவகையான தாக்கத்தைத் தருவதை மறுக்க முடியாது. அது நன்மையாகவும் இருக்கலாம் தீமையாகவும் இருக்கலாம்.
எனவே, அக ஆற்றல்களையும் புற ஆற்றல்களையும் நாம் பிரித்தறிந்து கொண்டால்தான், நமது பண்ணையில் எந்த இடத்தில் யாரை வைப்பது என்பதை முடிவு செய்ய இயலும்.
யார் அருகில்?
முதலில் இடத்தை வரையறை செய்வோம். அதாவது நமது பண்ணையை இருப்பிடத்தின் அடிப்படையில் பிரித்துக்கொள்ள வேண்டும். நாம் அடிக்கடி புழங்கும் இடம் தொடங்கி எப்போதாவது பார்வையிடும் இடம்வரை என்று நமது பண்ணையில் இரண்டு வகை நிலப் பகுதியும் இருக்கும்.
எடுத்துக்காட்டாக, ஒரு மாட்டுக் கொட்டகையை நாம் அன்றாடம் கவனித்தாக வேண்டும். மாடுகளுக்கு உணவிடுவது முதல் தூய்மைப்படுத்தும் பணிவரை தொடர்ந்து வேலை இருக்கும். அதேநேரம் வேலியில் உள்ள ஒரு நொச்சிச் செடியை நாம் அன்றாடம் கவனிக்க வேண்டிய தேவையில்லை. எனவே, நாம் இப்போது ஓர் எளிய இலக்கணத்தை வரையறை செய்யலாம். ஓராண்டுக்கு எத்தனை முறை ஓர் உறுப்பைப் பார்வையிடுகிறோமோ அத்தனை மதிப்பெண்களை அதற்குக் கொடுத்துவிடலாம். அதிக மதிப்பெண் பெறும் உறுப்பு, நமது பண்ணை வீட்டுக்கு அருகில் இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, மாட்டுக்கொட்டகை ஒரு நாளைக்கு இரண்டு முறை கவனிக்கப்படுவதாக எடுத்துக்கொண்டால், ஆண்டுக்கு 730 தடவை பார்வையிடப்படும். எனவே, 730 மதிப்பெண். அதுவே நொச்சிச் செடி மாதத்துக்கு ஒரு முறை கவனிக்கப்பட்டால், அதன் மதிப்பெண் 12 ஆக இருக்கும். அப்படியானால் 730 மதிப்பெண் பெற்ற மாட்டுக்கொட்டகை, நமது வீட்டுக்கு அருகில் வந்துவிடும்.
(அடுத்த வாரம்: வீடுதான் மைய அச்சு)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago