க
ன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு விளிம்பில் அரபிக் கடலோரத்தில் இருக்கிறது எங்கள் குடியிருப்பு. கத்தோலிக்க மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள் எங்கள் மூதாதையர். தூண்டில் மீன்பிடித் தொழிலுக்கு ஒத்தனா மரத்தில் (ஒருவர் தனியாக மீன்பிடிக்கச் செல்லும் கட்டுமரம்) கடலுக்குள் போகும் அப்பா வெகுதொலைவுக்குப் பாய்விரித்துப் பயணித்து நாள் முழுவதும் தூண்டில் போட்டுக் காத்திருப்பார். ஒரு மச்சமும் சிக்காது. ‘பவிச்சு வயது ஒட்டிக் கரையில என் மக்க என்னைக் காத்து நிக்குமே கடவுளே! நான் வெறும் மரத்தோடவா கரைக்குப் போகணும்? ஒரு மச்சம் என் தூண்டிலில் சிக்கவிடும் கடவுளே!’ என்று உருகி ஜெபம் செய்துகொண்டே இரவும் பகலும் தூண்டில் வீசுவார்.
மக்க காத்திருக்கும்
இரண்டாவது நாளிலும் எதுவும் சிக்காது. ஆழக்கடலில் இரண்டு நாட்கள் வெயிலில் காய்ந்தும் குளிரில் நடுங்கியும் கிடந்தாகிவிட்டது. இரை விலையும் (காசு கொடுத்துத்தான் இரைக்கான மீனை வாங்க வேண்டும்) இரண்டு நாள் உழைப்பும் பிரயோசனமில்லாமல் ஆயிற்று. பசி வயிற்றைப் பிடுங்கும்; சோற்றைச் (புளிக் கரைசல் கலந்து தயாரித்த சாதம் இரண்டு மூன்று நாட்கள் கெடாமலிருக்கும்) சாப்பிடக் கேட்கும் மனம் சம்மதிக்காது. ‘மரம் கரையை அடையும். என் மக்க காத்திருக்கும். இன்னைக்குச் சோத்துப்பாடு அவ்வளவுதான். இந்தக் கட்டுச் சோற்றைத் தின்றாவது என் மக்கள் கொஞ்சம் பசியாறட்டும்’ என்று அந்தப் பாத்திரத்தில் கொண்டுபோன பழைய சாதத்தில் பாதிக்குமேல் மிச்சம் வைத்திருப்பார் என் அப்பா.
அவர் கடலில் துளவை போடும் விதத்தில் எங்கள் அப்பாவின் கட்டுமரத்தைத் தொலைவிலேயே அடையாளம் சொல்லிவிடுவேன். துளவை போடும் வேகத்தைப் பார்த்தால் இன்று மீன்பாடு இல்லை என்பது புரிந்துவிடும். கட்டுமரம் கரையை அடையக் காத்திருக்க மாட்டார் என் அப்பா. கட்டுச் சோற்றின் மிச்சத்தைத் தூக்கி என் கையில் தந்து, ‘வீட்டுக்கு ஓடிக் கொண்டுபோய்ச் சாப்பிடுங்க மக்களே! தொளவா, சூண்ட (தூண்டில்) எல்லாம் நான் எடுத்துட்டு வருவேன்’ என்று கட்டுமரத்தைப் பிடித்துக்கொண்டு நிற்கும் என்னை வீட்டுக்குத் துரத்திவிடுவார்.”
எல்லோரும் படித்தோம்
“நான்கு ஆண்களும் மூன்று பெண்களுமாக நாங்கள் ஏழு பிள்ளைகள். அப்போது வீட்டில் இருந்த வறுமை நிலையில் அப்பா என் அண்ணாவையும் என்னையும் மீன்பிடித் தொழிலுக்குப் பழக்கியிருக்கலாம். எங்கள் சமூகத்தில் ஆண் பிறந்தால் பத்துப் பன்னிரண்டு வயதில் எல்லாம் கடல் தொழிலுக்குப் பழக்கிவிடுவார்கள். இது மரபு. அப்பா அதைச் செய்யவில்லை. தனிமனிதராய் உழைத்து எங்கள் எல்லோரையும் படிக்கவைத்தார். பி.எஸ்சி. ஃபிஷரி சயின்ஸ் படித்து மீன்பிடி கப்பலில் ஸ்கிப்பராகச் சேர்ந்த என் அண்ணா; அப்ளைடு மேத்ஸ் எம்.எஸ்சி. படித்துக் கல்லூரியில் பேராசிரியரான நான்; நடுவண் அரசு இரும்புத்தாது நிறுவனத்தில் பொறியாளராகச் சேர்ந்து மேலாளராக உயர்ந்து இப்போது தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் என் தம்பி; எம்.எஸ்சி. அப்ளைடு மேத்ஸ், எம்.சி.ஏ. படித்து அமெரிக்காவில் கிரீன் கார்டுடன் கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மற்றொரு தம்பி; ஆசிரியர் பயிற்சி முடித்துப் பிறந்த ஊரில் தலைமை ஆசிரியரான ஒரு தங்கை; எம்.எஸ்சி., பி.எட். முடித்துக் கேரள மேனிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரியும் மற்றொரு தங்கை, ஒரு தமக்கை மட்டும் பள்ளி இறுதித்தேர்வைத் தாண்டுவதில் ஆர்வம் காட்ட வில்லை”.
(அடுத்த வாரம்: கடல் தொழில் என்னோடு போகட்டும்)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும்
கடல் சூழலியல்
- வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago