தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 43: ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல

By பாமயன்

ன்றும் ஒன்றும் இணைந்தால் இரண்டு என்று கணக்கில் படிக்கிறோம். ஆனால், இயற்கையில் அது நிச்சயம் இரண்டைவிட அதிகமாகவே இருக்கும்! பண்ணைக் கூறுகள் அல்லது அமைப்புகள் சீராக இணைக்கப்படும்போதுதான் பண்ணையின் நீடித்தத்தன்மை உறுதி செய்யப்படும். வேலைப் பளு குறையும். விளைச்சல் அதிகரிக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒரு மட்குப் படுகையை மாட்டுக் கொட்டகையின் அருகே அமைக்க வேண்டும். ஏனெனில் மட்குப் படுகைக்கு எப்போதும் சாணம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். அது வெகு தொலைவில் இருந்தால் எடுத்துச் செல்லும் வேலை அதிகமாகும். எனவே, மாட்டுக் கொட்டகையும் மட்குப் படுகையும் அருகருகே அமைய வேண்டும்.

அதேபோல, வாத்துக்களுக்கு கொட்டகை அமைக்கும்போது, அதை குளத்துக்கு அருகே அமைக்க வேண்டும். கோழிகளுக்கான தீவன அறையும், அவற்றுக்கு அருகே இருக்க வேண்டும். பண்ணைக்குள் கிடைக்கும் மழைநீர் முழுமையும் வீணாகாமல் குளத்துக்கு வருமாறு கால்வாய்கள் இணைக்கப்பட வேண்டும். தென்னந்தோப்புக்குள் உள்ள இடத்தை வீணாக்காமல் செம்மறி ஆடுகளை இணைக்க வேண்டும். ஆடுகள் களைகளை உணவாக்கிக் கட்டுப்படுத்தும், அத்துடன் தென்னைக்குத் தேவையான உரத்தையும் அவை தந்துவிடும்.

ஒன்றுடன் ஒன்றை இணைத்தல்

சரி, இதை நாம் எப்படிக் கண்டறிவது, அதற்கு ஏதாவது சூத்திரம் உள்ளதா? ஆம். வினா-விடை வடிவில் இதைச் செய்ய முடியும். ஒரு பண்ணையில் உள்ள கூறுகளின் தன்மைகளையும் குண நலன்களையும் ஏற்கெனவே ஆய்வு செய்து வைத்துள்ளோம். அவற்றை வைத்து நாம் ஒன்றுடன் மற்றொன்றை இணைத்துக்கொள்ள முடியும்.

அதாவது நாம் அமைக்க வேண்டிய ஒரு கூறின் தேவைகள் என்ன, அதன் பயன்பாடு என்ன என்று பட்டியலிட வேண்டும். இந்த அமைப்பு பிற அமைப்பின் எந்தத் தேவையுடன் தொடர்புகொண்டதாக உள்ளது என்பது தெரிய வேண்டும்.

அதாவது இந்த அமைப்புக்கு வேறு எந்த அமைப்பிடமிருந்து தேவைகள் நிறைவு செய்யப்படும் என்றும் அறிய வேண்டும். அது வேறு எந்த அமைப்புக்கு உதவக் கூடியதாக இருக்கும் என்று பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக மாட்டுக்கான தீவனம், தீவன வயலில் இருந்து வர வேண்டும். தீவன வயலுக்கான உரம், மட்குப் படுகையில் இருந்து செல்ல வேண்டும். மட்குப் படுகைக்கான சாணம், மாட்டுக் கொட்டகையில் இருந்து செல்ல வேண்டும். ஆக, இந்த மூன்றையும் சரியாக இணைப்பதுதான் நமது திறமை.

அத்துடன், இந்த அமைப்பு பிற அமைப்புகளுடன் பொருந்தும் தன்மை கொண்டதாக இருக்கிறதா என்றும் பார்த்துக்கொள்ள வேண்டும். கோழிக் குஞ்சுகளுக்கு அருகில் பூனை, நாய் இருப்பிடங்களை அமைக்கக் கூடாது. குஞ்சுகளுக்கு ஆபத்து. கோழிக் கொட்டகைக்குள் தேனீப் பெட்டிகளை வைத்தால், அதுவும் தொல்லையாகும். எனவே எதைச் சரியாக, எப்படி இணைப்பது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

பட்டியலிட்டுத் திட்டம்

இப்போது ஒரு சிறிய தாளாண்மைப் பண்ணையை வடிவமைக்க முயலுவோம். எந்த மாதிரியான கட்டுமானங்கள் தேவை என்பதை முதலில் பட்டியலிட வேண்டும்.

- வீடு, மாட்டுக் கொட்டகை, ஆட்டுக் கொட்டகை, கோழிக் கொட்டகை, தீவன அறை போன்ற நிலையான அமைப்புகள் தேவை.

- அடுத்ததாக குளம், வேலிகள், வரப்புகள், வாய்க்கால், வடிகால் என்கிற மாறும் கட்டமைப்புகள் தேவைப்படும். ஆடு, மாடு, கோழி, மீன், தேனீ போன்ற வளர்ப்பு உயிரினங்கள் பண்ணைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

- பழத்தோட்டம், மேய்ச்சல் பரப்பு, வயல், கொல்லை, தேக்கு, குமிழ் போன்ற மரக்கா (கட்டை மரங்கள்) என்று நிலத்தின் பயன்பாட்டுக்கு ஏற்ற பிரிவுகள் செய்யப்பட வேண்டும்.

- சந்தை, வேலையாட்கள், நிதி, திறன்கள் போன்றவற்றின் நிலவரம் ஆய்வு செய்யப்பட வேண்டும். அதற்கேற்ப முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

- இது தவிர சாலை வசதி, எந்திர வசதி, ஆற்றுப் பாசனம் போன்ற வெளிப்புறக் கட்டமைப்பு உதவிகள் பற்றிய அறிவும் திரட்டப்பட வேண்டும்.

மேலே கூறியவை மட்டும் போதுமானதல்ல. இதற்கும் மேலாக நமது படைப்பாற்றலுக்கு ஏற்ற முறையில் பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். ஆனாலும் ஒரு சிறு புள்ளியில் இருந்து நாம் தொடங்கியாக வேண்டும்.

(அடுத்த வாரம்: சங்கிலித் தொடர் பண்ணை)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்