வெள்ளக்காடாக விரிந்துகிடக்கும் உப்புநீர்ப் பெருவெளி. உட்கடலுக்குள் போய்விட்டீர்கள் என்றால் இதுதான் உங்கள் காட்சி அனுபவம். ஆனால் ஒரு கடலோடியைப் பொறுத்தவரை அப்படியல்ல. கடல் பெருவெளியிலும் ஊர்கள் இருக்கின்றன. கோயில், குளம், தெருக்கள், கட்டிடங்கள், சாலைச் சந்திப்புகள் என நில எல்லைகளை நாம் நினைவில் வைத்திருப்பதுபோல, தான் புழங்கும் கடல் கடலோடிக்கு அத்துப்படி.
கடலுக்கடியில் சமதளம், பள்ளத்தாக்கு, பாதாளம், மேடுகள், சேற்றுநிலம், பாறைகள் எல்லாமே உண்டு. மரபான அனுபவங்களின் வழியாகக் கிடைத்த இப்பதிவுகள், பழங்குடிச் சமூகத்தின் நினைவு அடுக்குகளில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. கடற்பரப்பின் நிறங்கள், உயவுகள் (கடல் மேற்பரப்பின் நகர்வுகள்), நீரோட்டங்களின் போக்குகளை முன்வைத்துப் பருவகாலம் சார்ந்த மீன்களின் வரவை அவன் கணிக்கிறான், மீன்களை அடையாளம் காண்கிறான்.
'சுனாமிக்குப் பிறகு எங்கள் கடலே மாறிப் போய்விட்டது. இது நாங்கள் மீன்பிடித்த கடலல்ல' என்று நாகை மீனவர்கள் சொன்னார்கள். கடலை மீனவர்கள் அடையாளப்படுத்துவது, அடித்தரையின் அடிப்படையில்தான்.
எங்கு நோக்கினும் கடல்
அண்மையில் அந்தமானுக்குப் போனபோது இருவழிப் பயணத்தில் ஒருவழியாவது கப்பலில் போக ஆசைப்பட்டேன். கடல் ஒவ்வாமை (Sea Sickness) சிக்கல் குறித்து கொஞ்சம் பயம் இருந்தது. ஆழ்கடலில் கப்பல் போய்க்கொண்டிருக்கையில் சில வேளைகளில் துர்வாடை வீசும் பகுதிகளைக் கடந்து போக நேரும். இதுவும் கடல் ஒவ்வாமைக்குக் காரணம்.
அதேநேரம், கப்பலில் இருந்துகொண்டு பார்க்கையில் தொடுவானம்வரை விரியும் கடல் மட்டுமே நாலாபுறமும் தெரிகிற காட்சி அபாரமானது. அதைக் காணப் பேறு செய்திருக்க வேண்டும்.
விமானத்தில் வெண்பஞ்சு மேகங்களுக்கு மேலே பறந்தபடி கீழே தெரிகிற பெருங் கடற்பரப்பைக் காண்பதும் ஓர் ஆனந்த அனுபவம்தான். கடற்கரை மணற் பரப்பில் மல்லாந்து கிடந்து, நிலவற்ற இரவில் வானத்தில் விண்மீன்களை யாரோ கொட்டி வைத்ததுபோல சிதறிக் கிடக்கும் காட்சியை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? அப்படியொரு வானத்தைச் சுருட்டி யாரோ தரையில் விரித்து வைத்திருப்பதுபோலத் தோன்றும்– விமானத்திலிருந்து இரவில் கீழே பார்த்தால். திருவனந்தபுரம்– மும்பை, சென்னை - போர்ட் பிளேர், மும்பை - புவனேஷ்வர் விமானப் பயணங்களில் இரவிலும் பகலிலும் இந்தக் காட்சிகளை அனுபவித்திருக்கிறேன்.
துல்லியக் கணிப்பு
நிலத்தைப் போலன்றி கடல் ஒரு முப்பரிமாண ஊடகம் (பரப்பு, ஆழத்தால்). நிலையாமை என்பது கடலின் அடிப்படைத் தன்மை. ஓடுகயிறு (தூண்டில் கயிறு), கிட்டக்கல்லுடன் (கடலாழத்துக்குள் தூண்டிலைச் செலுத்தும் இரும்புக் குண்டு) கீழே போன பிறகு, நீரோட்டங்களின் கடுமைக்கு ஏற்ப, அது வளைந்து விறைத்து நிற்கும். ஆனாலும் தூண்டிலை அணுகும் மீனைத் துல்லியமாய்க் கணித்துவிடுகிறான் கடலோடி.
இரையை மீன் அணுகும் முறை, இனத்துக்கு இனம் மாறுபடுகிறது. பாரம்பரிய மீனவன் இதை அனுபவத்தில் அறிந்துவைத்திருக்கிறான். இரையை விழுங்கும் மீனின் எடையைக்கூட அவனால் துல்லியமாய்ச் சொல்லிவிட முடியும். எல்லாம் அவன் சுட்டுவிரலில் பிடித்திருக்கும் தூண்டில் கயிற்றின் அதிர்விலிருந்து கிடைக்கும் செய்தி!
மீன்பிடிப் புலமை
புலமைவாய்ந்த சூழலியல் பேராசிரியர் ஒருவர் பாரம்பரிய மீனவர்கள் கடலில் தூண்டில் போட்டு மீன்பிடிப்பதை நேரில் பார்க்க விரும்பினார். ராபர்ட் என்கிற கடலோர சூழலியல் ஆர்வலர் 'வெளிப்பொருத்து' இயந்திரப் படகில் அவரைக் கடலுக்கு அழைத்துப் போனார். அது, தூண்டில் மீன் பிடித்தலில் அனுபவம் மிகுந்த அலெக்ஸ் என்னும் மீனவரின் படகு. ராபர்ட்டின் வார்த்தைகளிலேயே அந்த அனுபவத்தை வாசிக்கலாம்:
வலியதுறையிலிருந்து (திருவனந்தபுரம் அருகேயுள்ள கடற்கரைக் கிராமம்) ஏறத்தாழ 10 கிலோமீட்டர் உட்கடலில் பயணிக்கிறது அலெக்ஸின் படகு. கரையை நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் அலெக்ஸ் படகை ஓட்டுபவரிடம் வேகத்தைக் குறைக்கச் சொல்கிறார். படகு இப்போது வேகம் தணிந்து மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. `படகை நிறுத்து’ என்றவாறு அலெக்ஸ் அந்தப் பேராசிரியரிடம் சொல்கிறார் - `இதுதான் சங்குமுகம் கப்பல்பார்’. பேராசிரியர் ஜி.பி.எஸ். கருவியில் பார்க்கிறார். சங்குமுகம் கப்பல்பாரின் துல்லியமான புவியிருப்பிட எண்களைக் (Co-ordinates) காட்டுகிறது. பேராசிரியரால் நம்ப முடியவில்லை!
உடலே கண்கள்
அலெக்ஸ் தூண்டில் வீசத் தொடங்குகிறார். கொஞ்ச நேரத்தில் தூண்டில் இரையை ஒரு மீன் அணுகுகிறது. அலெக்ஸ், `அது ஒரு பெரிய கலவா மீன்’ என்கிறார்.
'பிறகு ஏன் அதைத் தூக்காமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்?’ - ஆர்வம் தாங்காமல் பேராசிரியர் கேட்கிறார்.
அலெக்ஸ் பொறுமையாக விளக்குகிறார். `இரையை மீன் பிடித்தவுடன் தூண்டில் கயிற்றை இழுத்துவிட முடியாது. சிக்கியிருப்பது பெரிய மீன், இந்த தூண்டில் கயிறு பலவீனமானது. அது மட்டுமல்ல, கலவா மீன் இரையை விழுங்கும்வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்’.
அலெக்ஸ் குறிப்பிட்டதுபோலவே, தூண்டிலில் வந்தது பெரிய கலவா மீன். பேராசிரியருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. `உங்கள் விரல் நுனியில் என்ன, கண் இருக்கிறதா!’
சரியான கேள்வி. மீனவனின் விரல் நுனி மட்டுமா, உடலே கண்தான். பழங்குடி வேட்டைத் தொழிலைப் பொறுத்தவரை, வேட்டைக் களத்தில் அவனது முழு உடலும் புலன்களாகி விடவேண்டும். கடல் காட்சிகளின், ஒலிகளின், பொழுதுகளின், வாசனைகளின் வரைபடமாக அவனது மரபான அறிவில் பதிந்துவிட வேண்டும்.
கணிப்பும் கவனமும் காத்திருப்பும் கடல் பழங்குடிக்கு முதன்மையான பண்புகள். கவனம் தவறிவிட்டால் கடல்வாழ்வு பொருளற்றுப் போய்விடும்.
(அடுத்த வாரம்: மூழ்கவே மூழ்காத படகு)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago