செயற்கையாக ஒரு காட்டை உருவாக்க முடியுமா? சட்டென்று விடையளித்துவிட முடியாத கேள்விகளுள் ஒன்று. ஆனால், இயற்கை வளர்த்தெடுத்த காடுகளெல்லாம் மனிதர்களின் கால் பட்டு மடியும் தருணத்தில், அரிய தாவரங்களை வேறு எப்படி காப்பாற்றுவது? நம்முடைய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் அழிந்துவரும் அரிய தாவரங்களைப் பாதுகாப்பதற்காகவே ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு வந்த உல்ஃப்கேங் தேவூர்காஃப் உருவாக்கிய காட்டில் பல அரிய தாவரங்களைக் காப்பாற்றியுள்ளார்.
நாராயண குருவின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்த தேவூர்காஃப், தாய்நாடு திரும்பாமல் கேரளத்திலேயே தங்கிவிட்டார். 1981-ல் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவாரத்தில் 50 ஏக்கர் பரப்பில் குருகுலா தாவரவியல் சரணாலயத்தை அவர் நிறுவினார். வடக்கு வயநாடு அருகேயுள்ள அலத்தில் என்ற இடத்தில் இந்தக் காடு அமைந்துள்ளது.
சாத்தியமற்றதென்று நம்பப்படுவதை நிதர்சனமாக்கிக் காட்டியுள்ள அந்தத் தாவரவியல் சரணாலயத்தை உருவகமாகச் சுட்டுவதுபோல, உலகின் மாபெரும் மலரான டைட்டன் ஆரம் சமீபத்தில் அங்கே மலர்ந்து ஆச்சரியப்படுத்தியது. உலகின் மிகவும் அரிதான இந்த மலர், இந்தியாவில் மலர்வது இதுவே முதன்முறையாகக் கருதப்படுகிறது.
2008-ல் இந்த மலரின் தாய்க்கிழங்கு குருகுலாவுக்கு வந்தபோது, சாதாரண உருளைக்கிழங்கு அளவிலேயே இருந்தது. இந்தோனேசியாவின் சுமத்ரா மழைக்காடுகளைத் தாயகமாகக் கொண்டது இந்தத் தாவரம். கடந்த எட்டு ஆண்டுகளில் வெறும் ஐந்தே ஐந்து இலைகளை உருவாக்கிய இந்தத் தாவரம், இரண்டு மாதம் ஆழ்உறக்கத்தில் இருந்தது. அதற்குப் பிறகு ஒரு மாதத்துக்கு முன்பாக இலைக்குப் பதிலாக மொட்டு ஒன்று எட்டிப்பார்த்தது. அப்போது முதலே குருகுலா சரணாலயப் பணியாளர்களும், கேரள இயற்கைப் பாதுகாவலர்களும் இந்த மலரின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தனர்.
இரண்டு மீட்டர் உயரமுள்ள இந்த மலர் ஜூலை 18-ம் தேதி இரவு தன் முழு முகத்தைக் காட்டியது. உலகின் மிகப் பெரிய மலர் - துல்லியமாகச் சொல்வதென்றால், ‘கிளைக்காத மிகப் பெரிய மலர்'. ஏனென்றால், பார்ப்பதற்கு ஒரு மலரைப் போன்றிருந்தாலும், மலர்களின் தொகுப்பே இந்த டைட்டன் ஆரம். இதன் நறுமணம் அவ்வளவு உவப்பானது இல்லையென்றாலும், கடந்து செல்பவர்களின் மூக்கைத் துளைக்கக் கூடியது. அழுகிய சதையைப் போன்ற மணமுடையது.
Amorphophallus Titanum என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்தத் தாவரத்துக்கு ‘பிண மலர்' என்ற வழக்குப் பெயரும் உண்டு. இந்தத் தாவரம் தன்மகரந்தச் சேர்க்கை செய்துகொள்ளக்கூடியது இல்லை என்பதால், இந்த மலரின் மணம் காடுகளில் விலங்கு சடலங்களில் இருக்கும் வண்டுகள், வியர்வை ஈக்களை ஈர்க்கும். அதன் வழியாக மற்ற ‘பிண மலர்’களுடன் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
இதன் ஆயுள் காலம் என்னவோ 24 மணி நேரம்தான். ஒரு மலர் மலர்வதற்கு எட்டு ஆண்டுகள் காத்திருப்பதும், மலர்ந்த பிறகு வெறும் 24 மணித்தில் மடிந்து போவதும் இந்த உலகின் அற்புதங்களுக்கும் நிலையாமைக்கும் ஒன்றிணைந்த எடுத்துக்காட்டாக இம்மலர் அமைந்திருக்கிறது.
குருகுலா சரணாலயத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் 300 வகை அரிய தாவரங்கள், 200 வகை ஆர்கிட் தொற்றுத் தாவரங்கள், 250 வகை தகரைகள் (பெரணிகள்), 50 வகை பால்சம் என 2,000-த்துக்கும் அரிய வகைத் தாவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைக்குத் தாவரங்களை நெருங்கி அறிய விரும்பும் மாணவர்களுக்கு ஓர் இயற்கை வகுப்பறையாக இந்தச் சரணாலயம் மாறியுள்ளது.
உலகிலேயே பல்லுயிர் செழிக்கும் 34 மையங்களில் ஒன்றாக குருகுலா சரணாலயத்தை சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) அறிவித்திருக்கிறது. குருகுலாவில் ஒவ்வொரு தாவரமும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை எட்டியவுடன், முக்குருத்தி தேசியப் பூங்கா போன்ற காடுகளில் அவற்றை அறிமுகப்படுத்தி, இயற்கையாக அவை வளரவும் தேவூர்காஃப் வழிசெய்து சென்றிருக்கிறார்.
திரும்பத் திரும்ப உதாரணம் காட்டப்படும் ‘மரம் நட்ட மனிதனின் கதை' என்றொரு புகழ்பெற்ற கதை உண்டு. நம்மைச் சுற்றியும் பல மனிதர்கள் அப்படி வாழ்கிறார்கள். உலகின் பெரிய மலர் என்ற பெருமையைப் பெற்ற டைட்டன் ஆரத்தைப் போலவே, மரம் நட்ட மனிதர்களில் தேவூர்காஃபுக்கு உயரிய இடம் உண்டு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago