சூழலியல் முக்கியத்துவம் பெறும் மேற்குத் தொடர்ச்சி மலை

By டி.எல்.சஞ்சீவி குமார்

மேற்கு தொடர்ச்சி மலையை ‘சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி’ என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரகம் அறிவித்ததன் மூலம் இந்தியாவின் மூன்றின் ஒரு பகுதி உயிர் ஆதாரங்கள் காக்கப்பட்டுள்ளது.

1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என மூத்த சூழலியலாளர்கள் சுந்தர்லால் பகுகுணா, சத்தீஸ் சந்திர நாயர், கலானந்த் மணி, பாண்டுரங்க ஹெக்டே, பி.ஜே.கிருஷ்ணன், டாக்டர் ஜீவனாந்தம் உள்ளிட்டோர் கோரிக்கை எழுப்பினர்.

பாதுகாப்பு நடைபயணம்

அதனைத் தொடர்ந்து 1980-ம் ஆண்டு ஐந்து மாநிலங்களின் சூழலியாளர்கள் ஒன்றிணைந்து மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு நடை பயணம் மேற்கொண்டனர். ஓர் அணி கன்னியாகுமரியில் இருந்து வடக்கு நோக்கியும் மற்றோர் அணி மகாராஷ்டிராவில் இருந்து தெற்கு நோக்கியும் பயணம் செய்து கோவாவில் கூடினர்.

அங்கு நடந்த மாநாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை முக்கியத்துவத்தையும் அதை பாதுகாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பிரகடனம் ஒன்றை வெளியிட்டனர். இதன்பிறகே மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவத்தை உலகம் உணர தொடங்கியது.

தொடர்ந்து 2001-ல் தமிழ்நாடு பசுமை இயக்கம் மற்றும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு பயணம் மேற்கொண்டன. மீண்டும் 25 ஆண்டுகள் கழித்து ஐந்து மாநிலங்களின் சூழலியலாளர்கள் 2006-ம் ஆண்டு கோவாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாட்டை நடத்தினர். இதில் மலைக்கு சட்டப் பூர்வமாக பாதுக்காக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அமைச்சரின் ஒப்புதல்

பின்னர் 2009-ல் கோத்தகிரியில் நடந்த மாநட்டில் பங்கேற்ற அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நிபுணர் குழுவை நியமித்தார். இதன்படி, பெங்களூரின் இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் உயிரியலாளர் டாக்டர் மாதவ் காட்கில் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 2010-ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகளை மிக, மிக பாதுகாக்கப்பட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக சட்டப்பூர்வமாக அறிவிக்கலாம் என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது.

ஆனால், தமிழகம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களும் அந்த பரிந்துரைகளை நிராகரித்தன. தொடர்ந்து மேலதிக பரிசீலனைக்காக நிபுணர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு கொஞ்சம் நிபந்தனைகளை தளர்த்தி, மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகளை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கலாம் என்று பரிந்துரைத்தது.

அதன் பின்பும் மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுவதாகக் கூறி ஐந்து மாநிலங்களும் அதனைப் புறக்கணித்தன. இந்தச் சூழலில்தான் தற்போது மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்ன பலன்?

மத்திய அரசின் அறிவிப்பு குறித்து ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறியது: ‘‘பாதுக்காக்கப்பட்ட இப்பகுதியில், சுரங்கங்கள் தோண்டுவது, அணைகள் கட்டுவது, மின்சார உற்பத்திப் பணிகளை மேற்கொள்வது, மத்திய அரசின் சிகப்புப் பட்டியலில் (Red list) இடம் பெற்ற அபாயகரமான கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளை அமைத்தல் போன்றவை தடை செய்யப்படும். தற்போதைய அறிவிப்பின் கீழ் மேற்குத் தொடர்ச்சி மலையின் 37 சதவிகிதக் காடுகள் வருகின்றன.

இனி என்ன செய்ய வேண்டும்?

மத்திய அரசின் அறிவிப்பில் மேற்குத் தொடர்ச்சி மலையின் எந்தெந்தப் பகுதிகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என்று குறிப்பிடப்படவில்லை. விரைவில் அந்தப் பகுதிகளை குறிப்பிட வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகள் 1980-ம் ஆண்டு இந்திய வனச் சட்டத்தின் கீழ் காப்புக்காடுகள், சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் என பாதுகாக்கப்பட்ட பகுதியாகத்தான் உள்ளன. ஆனால், அதற்கு வெளியிலும் யானை வலசை மற்றும் அதன் இணைப்புப் பாதைகள் நிறைய இருக்கின்றன. அந்தப் பகுதிகளும் மத்திய அரசின் தற்போதைய சட்டத்துக்குள் வர வேண்டும்.

மாநில அரசுகளின் கவனத்துக்கு…

இந்த அறிவிப்பால் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பழங்குடியினருக்கும் விவசாயிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எந்த தனியார் நிலமும் இதனால் கையகப்படுத்தப்படாது. மேலதிக பரிசீலனை கமிட்டியின் பரிந்துரைகளில் புனல் மின் நிலையம் அமைக்க சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசுகளும் மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க கைகோக்க வேண்டும்.” என்றார்.

மேற்குத் தொடர்ச்சி மலையை கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்