மன்னார்குடியைச் சேர்ந்த பேராசிரியர் மாறனிடம் பேச ஆரம்பித்தால், அவரது பேச்சு முழுக்க மரங்களே நிறைந்திருக்கின்றன. அவை பேச்சின் எல்லா திசைகளிலும் கிளை பரப்பி நிற்கின்றன.
"என்னுடைய சின்ன வயதில் எங்கள் குடும்பத்துக்கு மாந்தோப்பும், தேக்கு, வேம்பு நிரம்பிய மற்றொரு தோப்பும் இருந்தன. ஆனால் குடும்பச் சூழ்நிலையால் தோப்பை விற்க வேண்டியதானது. மாந்தோப்பு வறட்சியால் முற்றிலும் பட்டுப் போனது. இந்தத் தோப்புகள் என் மனதில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டன.
அது மட்டுமில்லாமல் சின்ன வயசில் நண்பர்களுடன் இந்தத் தோப்புகளில்தான் எப்போதும் கிடப்பேன். என் குழந்தைகளுக்கும், மற்ற குழந்தைகளுக்கும் அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று நினைத்தேன். அவர்களுக்காகவே மரங்களை வளர்க்கும் ஆர்வம் தீவிரமடைந்தது" என்கிறார் மன்னார்குடி எம்.ஆர். அரசு கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவராக பணியாற்றிவரும் மாறன். மரம் வளர்ப்பது மீதான இந்தக் காதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்குள் துளிர்த்திருக்கிறது.
"எங்களுடைய கல்லூரியில் படித்த ஒரு மாணவியின் தந்தை வனத்துறையில் வேலை பார்த்தார். அவரது உதவியுடன் வேங்கை, செஞ்சந்தனம், நீர்மருது, இருவாச்சி, பெருநெல்லி என நான் பரிந்துரைத்த மரங்களை எங்கள் கல்லூரியில் நட்டார்கள். மரங்களை நட ஆரம்பித்த காலத்தில் எங்கள் கல்லூரி வெறிச்சென்றுதான் இருந்தது. இப்போது சிறிய காட்டைப் போலிருக்கிறது.
இந்த அனுபவத்துக்குப் பிறகு மகிழ மரங்கள் மீது தீவிர ஆர்வம் எழுந்தது. நம் நாட்டில் வாழ்ந்த வெள்ளைக்காரர்களுக்கு மகிழ மரம் ரொம்பப் பிடித்தமான மரம். பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையங்கள், ரயில் நிலையங்களில் அவர்கள் நட்ட பிரம்மாண்ட மகிழ மரங்கள் நிற்பதே இதற்கு சாட்சி. மகிழ மரத்தை அவர்கள் விரும்பி நட்டதற்கு முக்கியக் காரணம், அது ஆண்டு முழுவதும் இலை உதிர்க்காத மரம் என்பதுதான். நம் நாட்டு மரங்களான புங்கன், வேப்ப மரங்கள்கூட ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் இலைகளை உதிர்த்துவிடும். ஆனால், மகிழம் ஆண்டு முழுவதும் இலை உதிர்க்காது.
மகிழ மரத்தின் அடியில் சென்று பார்த்தால், அடியில் ஒரு சிறிய இடைவெளியில்கூட வானத்தைப் பார்க்க முடியாது. சூரிய ஒளி நுழைய முடியாத அளவுக்கு இலைகள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும். அதன் நிழலில் படுத்துத் தூங்கலாம். 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மகிழ மரங்கள் பரவலாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. இப்போது மகிழ மரங்களை தேடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது.
மகிழ மரத்தை பலரும் வளர்க்க விரும்பாததற்குக் காரணம், அது மெதுவாக வளரும் தன்மை கொண்ட மரம் என்பதுதான். மகிழ மரத்தின் பழங்களைச் சாப்பிடலாம் என்பது பலருக்குத் தெரியாது. தோல் பராமரிப்புக்குப் பயன்படுத்தலாம். மருத்துவ குணங்கள் கொண்ட அப்பழங்கள், அழகுப் பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
என் வீட்டு வாசலில் 2, என் வீட்டுக்கு எதிரே உள்ள வீரன் கோவிலில் 2, கல்லூரியில் 1 என ஐந்து மகிழ மரங்களை வளர்த்திருக்கிறேன். ஒவ்வொரு வருஷமும் என் துறையில் படித்து முடிக்கும் 40 மாணவர்களுக்கு மகிழ மரக்கன்றுகளைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எல்லா மாணவர்களும் மரங்களை வளர்க்க வாய்ப்பில்லை என்றாலும், ஒரு சிலராவது நிச்சயம் வளர்ப்பார்கள்.
எனது பேராசிரியர் தங்க.ஜெயராமனின் வலியுறுத்தலின்படி சமீபகாலமாக செண்பக மரக்கன்றுகளையும் இப்படிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். செண்பக மரங்கள் பெருகி இருந்ததால், மன்னார்குடி செண்பக ஆரண்ய சேத்திரம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டுவார். இன்றைக்கு மன்னார்குடி ராஜகோபால சாமி கோவிலில் செண்பக மரங்கள் 2 இருக்கின்றன.
மீண்டும் சந்திக்கும்போது என் மாணவர்கள், தாங்கள் வளர்க்கும் மரக்கன்றுகளைப் பற்றிச் சொல்வார்கள். பலரும் எனது மரக் காதலைப் பார்த்துவிட்டு, என்னிடம் மரக்கன்றுகளைக் கேட்பார்கள். சிலர் திருமணங்களில் விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கவும் மரக்கன்றுகளை கேட்பார்கள். எல்லோருக்கும் வாங்கித் தருகிறேன்.
என்னுடைய புதிய வீடு மன்னார்குடி-பட்டுக்கோட்டை சாலையில் சுந்தரக்கோட்டை என்னும் இடத்தில் உள்ளது. 2 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த வீட்டைச் சுற்றி மாவில் 8 வகை, கொய்யாவில் 10 வகை, சப்போட்டா, ஆரஞ்சு, நாரத்தை, பலா என 50க்கும் மேற்பட்ட வகைகளில் மரக்கன்றுகளை வளர்த்திருக்கிறேன்.
என் வீட்டுக்கு எதிரே ஒரு வீரன் கோவிலும், அதற்குரிய 1 ஏக்கர் நிலமும் பராமரிப்பில்லாமல் இருந்தன. அந்த நிலத்தில் செண்பகம், வன்னி, நாகலிங்கம், வில்வம், ஆல், அரசு போன்ற நம் நாட்டு மரக்கன்றுகளையும், இலுப்பை, புன்னை போன்ற பசுமைமாறாத் தாவரங்கள், குதிரைக்காய் மரம் என்றொரு பிரம்மாண்ட மரம் உள்ளிட்டவற்றை வளர்த்துவருகிறோம்" என்று சொல்லும் மாறனின் குடும்பத்தினர்தான், மரக் கன்றுகளை வாங்குவது, தண்ணீர் விடுவதற்கான குழாய், பராமரிப்புச் செலவுகள், பராமரிப்புப் பணிகள் போன்ற அனைத்தையும் பகிர்ந்து செய்துவருகிறார்கள்.
பேராசிரியர் மாறன், மரங்களுடன் மரங்களாக இப்படி ஒன்றிப் போவதற்குக் காரணம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு எதிரே பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒரு பெரியவர்தானாம். மன்னார்குடியின் பல பகுதிகளுக்கு மரக்கன்றுகளை எடுத்துச் சென்று நட்டு, சுற்றிலும் கருவேல முட்களால் வேலி அமைத்து, தினசரி சைக்கிளில் குடங்களைக் கட்டி தண்ணீர் எடுத்துப் போய் ஊற்றுவது அந்தப் பெரியவரின் வழக்கம்.
"மரம் வளர்ப்பதை தவம் போலச் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் அவரிடம் இருந்தே எனக்குக் கிடைத்தது. என் கல்லூரியில் நான் வளர்த்த பல மரங்கள், 1 மாடி, 2 மாடிகளைக் கடந்து வளர்ந்துவிட்டதைப் பார்க்கும்போது என் மனசு குதூகலிக்கிறது" என்று கூறும் பேராசிரியர் மாறனைப் பார்க்கும்போது, அவர் மனதுக்குள் விதைக்கப்பட்ட விதைகள் ஆழ வேரூன்றியிருப்பது தெரிகிறது.
மகிழம்
மகிழ மரத்தின் பழைய தமிழ்ப் பெயர் வகுளம். மகிழ் என்றும் அழைக்கப்படுகிறது. அறிவியல் பெயர் Mimusops elengi (L.) ஆங்கிலத்தில் Bullet wood, Indian Medlar, Spanish Cherry. இது சப்போட்டா குடும்பத்தைச் சேர்ந்த பசுமைமாறாத் தாவரம். இலைகள், மலர்கள் சப்போட்டாவை ஒத்திருக்கும், பழங்கள் மஞ்சளாக ஒட்டும்தன்மையுடன் இருக்கும். இவற்றைச் சாப்பிடலாம். இந்தியா, பசிஃபிக், ஆஸ்திரேலியா நாடுகளில் இயல்பாக வளரக்கூடியது. எண்ணெய் போன்ற நறுமணப் பொருளைத் தரும். இந்த மரம் ரொம்பவும் உறுதியானது, கடினமானது, மதிப்புமிக்கது. அதன் காரணமாகத்தான் ஆங்கிலத்தில் "புல்லட் உட்" என்ற பெயர் இதற்கு வந்தது. இந்த மரத்துக்கு பாலிஷ் போட்டால் அடர்சிவப்பாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 mins ago
சிறப்புப் பக்கம்
55 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago