குளத்தைக் குடிக்கும் ஊதா நிறப் பூக்கள்!

By கோவை சதாசிவம்

புதரின் மேல் வெயில் காய்ந்து கொண்டிருக்கும் தம் இணையின் முன், ஒரு கொத்து ஆகாயத் தாமரையை விரலிடுக்கில் பற்றி அலகால் அசைத்துக் காட்டியது நீலத்தாழைக் கோழி (Purple Moorhen). உணவை காலால் எடுத்து வாயில் சேர்க்கும் பழக்கம் கொண்ட நீலத்தாழைக் கோழிகள் இனச்சேர்க்கை காலத்தில் இதை வேறு வகையில் கையாளுகின்றன.

ஆனால்... நீரில் வாழும் வேறு வகைப் பறவைகள் ஒன்றைக்கூட அந்த நீர்நிலையில் எங்களால் பார்க்க முடியவில்லை. ஏனென்றால், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ஊதா நிறப் பூக்களோடு ஆகாயத் தாமரைகள் படர்ந்திருந்தன. நீர் நிலைகளை பாலையாக்க இந்த ஒரு தாவரமே போதும். வெப்பமண்டல தென் அமெரிக்காவைச் சார்ந்த இத்தாவரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், இந்தியாவில் நுழைந்தது. எதன் பொருட்டு இத்தாவரத்தை நமது நீர் நிலைகளில் வேர் பிடிக்கச் செய்தார்கள் என்று யூகிக்க முடியவில்லை! அவர்களுக்கு அழகின் வடிவமாகத் தெரிந்த தாவரம், நமக்கு அழிவின் வடிவமாகத் தெரிகிறது. வற்றாத குளங்களில் வன்மத்துடன் வளர்ந்த ஆகாயத் தாமரைகள், நமது மரபு சார்ந்த நீர்நிலைத் தாவரங்களை அழித்து விட்டன. அதனால்தான் ஊர்ப் புறங்களில் இதை பேய் தாமரை என்கிறார்கள் போலிருக்கிறது. இதற்கு வெங்காயத் தாமரை என்று வேறொரு பெயரும் உண்டு.

நீர்நிலைகளை நம்பி வாழும் பறவைகளின் வாழ்விடத்தை அபகரித்துக் கொண்டு, தண்டுகளில் காற்றை நிரப்பி குளமெங்கும் மிதந்து கொண்டிருக்கிறது ஆகாயத் தாமரை. பருவமழை பெய்யாதபோது குளங்கள் வறண்டு விடும். ஆனால் நகரங்களின் கழிவுநீர், குளங்களில் தேங்கும்போது ஆகாயத் தாமரைகள் செழித்து வளர்கின்றன. மாசடைந்த நீர்நிலைகளில் வளரும் தன்மை கொண்ட இத்தாவரம் குறைந்த காலத்தில் வேகமாக வளர்ந்து குளத்தின் நீர்ப்பரப்பை மூழ்கடித்து விடும். இத்தாவரத்தின் விதை முப்பது வருடங்களுக்கு முளைக்கும் திறன் கொண்டது. ஆழமாய் வேர் ஊன்றி வளர்ந்து பரவி, மற்ற தாவரங்களின் வளர்ச்சியை தடை செய்துவிடுகிறது. உள்நாட்டு நீர் வளங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கும் இத்தாவரம் தமிழகத்தில் சுமார் 3,150 குளங்களில் முழு அளவில் படர்ந்துள்ளது.

வறட்சியான காலங்களில் இத்தாவர இலைகள் குளத்து நீரை அளவுக்கு அதிகமாக ஆவியாக்குகிறது. இவை புதர் போல் படர்ந்துள்ளதால் சூரிய ஒளி, உயிர்க் காற்று நீரினுள் நுழைய முடியாது. மிதக்கும் கூடுகளை கட்டும் பறவைகள் இப்புதரில் கூடுகளை கட்டி வாழ்வது சிரமம். நீர்-நிலவாழ் உயிர்களின் இருத்தலுக்கும் இனப்பெருக்கத்துக்கும் இப்புதர்கள் இடையூறாக இருக்கின்றன. நன்கு நீச்சல் தெரிந்தவர்கள்கூட இத்தாவரப் புதரில் அகப்பட்டு மாண்டு போயிருக்கிறார்கள்.

நீர்வாழ்ப் பறவைகளின் உணவு என்பது குளக்கரையோரமுள்ள பூக்கள், காய்கள், விதைகள், பழுத்து உதிரும் இலைகள், சிறு மீன்கள், நத்தைகள், பூச்சிகள் ஆகும். ஆகாயத் தாமரை பரவியுள்ள குளங்களில் இத்தகைய உணவுத் தொகுதி இருப்பதில்லை! இதனால் உணவும் வாழ்விடமும் தேடி பறவைகள் வேறு இடம் செல்ல நேர்கிறது. நோய்களைப் பரப்பும் கொசுக்களுக்கு ஏற்ற இடமாகவும் ஆகாயத் தாமரை படர்ந்த நீர்நிலை உள்ளது. பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இத்தாவரங்களால், மழைக் காலங்களில் வெள்ளச் சேதங்கள் ஏற்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் இத்தாவரத்தை அழிக்க அரசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

நகரமயமாக்கலால் பெருகி வரும் கழிவுநீரை, குளங்களில் தேக்குவதால் ஆகாயத் தாமரை, பெருங் கோரை, காட்ட மணக்கு, சம்பு போன்ற அயல்நாட்டு களைப் பயிர்கள் குளங்களில் வளர்கின்றன. நல்ல நீர்நிலைகளில் இத்தாவரங்கள் பெரிதாக வளர முடிவதில்லை. குளங்களுக்கு அருகிலுள்ள வீடுகள், தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் குளங்களுக்கு வருவதை தடுக்க வேண்டும். ஏனென்றால், இந்த கழிவு நீர்தான் மாசு ஏற்படுத்தும் தாவரங்கள் வளரத் தேவையான ஊட்டச்சத்தைத் தருகிறது. வேதிக் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி இத்தாவரத்தை அழிக்கும் முயற்சியில் சில மாநகராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. நீர்நிலைகளில் இந்த களைக்கொல்லிகள் வேறு வகையான பாதிப்புகளை உருவாக்கும் வாய்ப்புகளும் உண்டு. பின்விளைவுகளைப் பற்றி ஆராயாமல் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது தவறாகும். ஏற்கெனவே, வயல்களில் பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்துவது, நீரில் கலந்து பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.

ஆகாயத் தாமரையின் தாயகமான தென்அமெரிக்காவைத் தவிர இவை பரவியுள்ள மற்ற நாடுகளில் இதன் பாதிப்பிலிருந்து மீளவும், இதை பயன்பாட்டுப் பொருளாக்கவும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. இயற்கை எரிவாயு, கயிறு, எத்தனால் போன்ற மனிதப் பயன்பாட்டுப் பொருள்களை தயாரித்து, குளங்களை நிரந்தர சாக்கடையாக்கும் அவசர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருப்பது போல, ஒரு நீர்நிலை என்பது வெறும் தண்ணீர் தேங்கிய இடமன்று. நீர்நிலை ஓர் சிறந்த சூழல் கட்டமைப்பாகும். சூழல் கூட்டமைப்பு கொண்ட உயிரினங்கள் வாழும் உணவுச் சங்கிலியின் தொகுதிதான் குளம். மிக நுண்ணிய மிதவைத் தாவரங்கள் தொடங்கி நீரில் மிதந்து வாழும் பாசிகள், குளத்தின் ஓரங்களில் வேர் ஊன்றிய நீர் முள்ளிகள், குளத்தின் ஆழத்தில் வேர் ஊன்றி மூழ்கியிருக்கும் தாவரங்கள், நீர் மேற்பரப்பில் மிதக்கும் அல்லி, தாமரை போன்ற தாவரங்கள், இத்தாவரங்களை உண்டு வாழ பல்வேறு பூச்சியினங்களான மிதவை உயிரிகள், மீன், தவளை, நண்டு, நத்தைகள், இவை கட்டுமீறிப் பெருகிப் போகாமல் கட்டுப்படுத்தும் பறவைகள், நீரை பலவகைகளிலும் பயன்படுத்தும் மனிதர்கள் என… இயற்கையில் உருவாகும் வேதியியல் ஆற்றல், வெவ்வேறு உணவூட்ட நிலைகளுக்கு கடத்தப்படுவதைதான் இயற்கை ஆர்வலர்கள் உணவுச் சங்கிலி என்கிறார்கள்.

நீர்நிலைகளை மாசுபடுத்தினால் இந்த உயிர் தொகுதி சிதையும் என்பதை வெறுமனே வளர்ச்சியை மட்டும் முன்னிறுத்தும் விஞ்ஞானிகள் உணரமாட்டார்கள், நாம் உணர வேண்டும்! பிறருக்கும் உணர்த்த வேண்டும்.

நன்றி: கோவை சதாசிவம் எழுதிய நீர்வாழ் பறவைகளைப் பற்றிய 'இறகுதிர் காலம்' என்ற புத்தகத்தின் ஓர் அத்தியாயம் இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்