அக்டோபர் 26, 2012. அது எங்கள் குடும்பத்துக்குத் துயரம் தோய்ந்த நாள். என் மைத்துனரின் மகன் லெராய், கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் படித்துவந்தான். தனது பள்ளிக்கால நண்பர்கள் மூன்று பேருடன் இறச்சகுளம் பகுதிக்கு அவன் இயற்கைச் சுற்றுலா சென்றிருந்தான். ஒரு நண்பனின் வீட்டருகே ஆற்றில் மூழ்கி நால்வரும் இறந்துபோயினர். நான்கில் இரண்டு சடலங்கள் கைகோத்த நிலையில் நிகழ்விடத்துக்கு 100 மீட்டர் கீழே மூழ்கியெடுக்கப்பட்டன. இவனும் அதில் ஒருவன்.
பாலத்தின் அடியில் நால்வரும் இயற்கை அழகை ரசித்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில், எதிர்பாராமல் ஒருவன் வழுக்கி விழுந்திருக்கிறான். உடன் வந்த நண்பர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் உணர்ச்சிப் பெருக்கில் ஒவ்வொருவராகக் குதிக்க, நான்கு பேரையும் ஆறு விழுங்கிவிட்டது. இளம் இயற்கை ஆர்வலர்களான அந்த நால்வருக்கும் அற்புதமான பல ஒற்றுமைகள். நீச்சல் தெரியாது என்பது அதில் முக்கியமான ஒன்று.
என்ன காரணம்?
போலீஸ், விசாரணைகள், தொலைபேசிப் பரபரப்புகள், பிணவறை, காத்திருப்பு, உடல் கூறாய்வு, கண்ணீர், சடங்குகள், நினைவுநாள்… சிம்ம சொப்பனமாக நகர்ந்த நாட்கள் அவை. அப்போது நெருங்கிய உறவுகளோடும் ஆர்வலர்களோடும் தொடர்ச்சியாக உரையாட நேர்ந்தது. துயரத்திலிருந்து சிறு நிவாரணம் பெறுவதற்கு எல்லோருக்குமே அது தேவையாக இருந்தது. என் செயல்பாடுகள் இயந்திர கதியில் இருந்தபோதும், புலன்கள் விழிப்பு நிலையிலேயே இருந்தன.
இந்த நான்கு மரணங்களுக்கும் காரணம் என்ன? நான்கு இளைஞர்களுக்கும் நீச்சல் தெரியாது என்பதா? தற்காப்பு குறித்த குறைந்தபட்ச அறிவுகூட அவர்களுக்கு இல்லாதிருந்தது என்பதா? உடனடி மருத்துவக் கவனிப்பு கைகூடியிருந்தால் ஒருவேளை அந்த நான்கு மரணங்களைத் தவிர்த்திருக்க முடியுமா?... உரையாடல்கள் எங்கு தொடங்கினாலும் இந்தப் புள்ளியையே வந்தடைந்தன.
நீச்சலை மறந்தோம்
முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடன் கல்லூரி வேலையில் சேர்ந்த என் மைத்துனர் வில்ஃப்ரட், இரவில் கடலுக்குப் போய் மீன் பிடித்துவிட்டுக் காலையில் கல்லூரிக்கு வேலைக்கு வந்துவிடுவார். தனியாகவும் அவர் கடலுக்குள் போவதுண்டு. அவர் சிறந்த கால்பந்து வீரரும்கூட. திருமணத்தைத் தொடர்ந்து நகர்ப்புறத்தில் குடியேறிவிட்ட சூழலில், அவருடைய மகனுக்குக் கடல் பரிச்சயமற்றுப் போனதில் வியப்பொன்றும் இல்லை. லெராயின் உள்ளூர் நண்பர்களைக் குறித்துத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
எங்கள் குடும்பத்தைப் பேரிழப்பில் ஆழ்த்திய இந்த விபத்து மரணத்தைத் தொடர்ந்து, லண்டனில் மருத்துவராகப் பணிபுரியும் லெராயின் தாய்மாமா ஆஸ்கர் ஃப்ரெடி ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தார். கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, மாவட்டத்தின் பல கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் விபத்து முதலுதவி - உயிர்காப்பு முறைகள் குறித்து பரப்புரையும் உயர்நிலைப் பயிற்சிகளையும் அவர் நடத்திவருகிறார். மாவட்டக் கடற்கரைகளில் பள்ளி மாணவர்களின் நீச்சல் பயிற்சிக்காகச் சில முயற்சிகளை மேற்கொண்டு நாங்கள் தோற்றுப்போனோம்.
துறைவர்கள் தந்த அறிவு
உயிர்க் கோளத்தின் அத்தனைக் கூறுகளையும் கட்டுப்படுத்தும் பெருங்கடல்களைக் குறித்து கிஞ்சித்தும் அறிந்திராத இளைய தலைமுறை! கடலுக்கும் நமக்குமான உறவு மிக முக்கியமானது. அது தொப்புள் கொடி உறவு. கடலை எப்படி நம் வகுப்பறைகளுக்கு அறிமுகப்படுத்துவது? நம் வகுப்பறைகளைக் கடலுக்கு நெருக்கமாக எடுத்துச் செல்வது எப்படி?
கடலே வாழ்க்கையாகிப்போன கடல் பழங்குடி மனிதர்களைக் குறித்து இளைய தலைமுறை எப்படி அறிந்துகொள்ளப் போகிறது? நெல், காய் கனி முதல் மீன்வரை நமக்கு ஊட்டி வாழ வைக்கும் மண்ணின் மனிதர்களை, அவர்களின் ஈடுசெய்ய முடியாத பங்களிப்பை, இளைய தலைமுறைக்கு எப்படிப் புரியவைப்பது?
இந்தியக் கடற்கரை நெடுக நான் மேற்கொண்ட பயணங்களின்போது, அங்கெல்லாம் மண்ணின் அற வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் துறைவர்களுடன் தங்கியிருந்தபோது, இந்தக் கேள்விகள் என்னைக் குடைந்துகொண்டே இருந்தன, இப்போதும் குடைந்தகொண்டிருக்கின்றன.
குறைந்தபட்சமாக, கடலைக் குறித்த எனது புரிதலை, துறைவர்கள் தந்த அறிவைப் பதிவு செய்துவிட வேண்டும் எனத் தோன்றியது. இந்தத் தொடரை வாசிக்கையில் கடலைக் குறித்து அறிந்துகொள்ளும் தூண்டுதல் இளைஞர்களுக்கு ஏற்படுமானால், எங்களுக்கு நேர்ந்த பேரிழப்பின் பெறுமதியாக அதனைக் கருதுவேன்.
சொல் புதிது
துறைவர் - கடலைச் சார்ந்து கடற்கரையில் வாழும் மக்கள்.
(அடுத்த வாரம்: பழங்குடியின் பெருங்குரல்)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago