ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. 2013ஆம் ஆண்டில் தமிழகம் சந்தித்த முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி, ஒரு பார்வை:
1. கூடங்குளம் போராட்டம்
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் இடிந்தகரையில் கடந்த இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. அணு உலை ஆபத்து தொடர்பாகத் தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியா முழுவதும் ஒரு பொது விவாதம் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்தே உருவானது. "தி இந்து" (ஆங்கிலம்) நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த 46 சதவீத மக்கள் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவாகவும், 23 சதவீத மக்கள் போராட்டத்துக்கு எதிராகவும் கருத்து கூறியதாக தெரிவிக்கிறது.
அதேநேரம், ''இந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி முதல் கூடங்குளம் அணுமின் நிலையம், மின் உற்பத்தியைத் தொடங்கிவிட்டது. தொடர்ச்சியாக 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் மத்திய மின்தொகுப்புக்குச் செல்கிறது'' என்கிறார் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர். இதில் பாதி தமிழகத்துக்குக் கிடைப்பதாகத் தெரிகிறது. போராட்டம் அடுத்து எப்படி நகரும் என்பதை பொறுத்திருந்து அடுத்த ஆண்டு பார்க்க வேண்டும்.
2. தாது மணல் கொள்ளை
தாது மணல் கொள்ளையைத் தென் தமிழக மக்கள் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வளவு காலம் தாது மணல் நிறுவனங்களுக்கு எதிராக வாய் திறக்க முடியாத மௌனிகளாக இருந்த மக்கள், ககன்தீப் சிங் பேடி தலைமையிலான தமிழக அரசின் ஆய்வுக் குழுவைத் தங்கள் ஊருக்கும் வந்து ஆய்வு நடத்தச் சொல்லி மனு கொடுக்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.
"தூத்துக்குடியில் தொடங்கிக் கன்னியாகுமரி வரையிலும் 15 கி.மீ நீளமுள்ள தென் தமிழகக் கடற்கரையில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தோண்டி எடுத்திருக்கும் கனிம வளங்களின் மதிப்பு 96,120 கோடி ரூபாய்" என்கிறார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரம்.
தாது மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு உப்புநீராக மாறுவது, நீர் மாசுபாடு, கரையோர மீன்பிடிப்பு, விவசாய நிலங்கள், கடலோர உயிர்ச்சூழல் போன்றவை பாதிக்கப்படும் என்கிறது மனித உரிமை பாதுகாப்பு மையம்.
3. செய்யூர் மின் திட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் ரூ.24,000 கோடி மதிப்பீட்டில் 4000 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க மத்திய அரசு அக்டோபர் மாதம் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்துக்கு அதிகபட்சமாக 1,200 ஏக்கர் நிலம் தேவைப்படும். இந்த நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியைப் பனையூர், பெரியகுப்பம், பனையூர் சின்னகுப்பம் மீனவக் கிராமங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள துறைமுகம் வழியாகக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 650 மீட்டர் நீளமுள்ள துறைமுகம் தேவை. கப்பலில் இருந்து ஆலைக்கு நிலக்கரியைக் கொண்டு செல்ல வேண்டும். ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்துக்கு 1054 ஏக்கர் முதல் 1200 ஏக்கர் வரை நிலம் தேவைப்படும். "இத்திட்டத்தால் 16,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயமும், மீன்பிடித்தலும் பாதிக்கப்படும். அத்துடன் நீர்நிலைகள், காட்டுப் பகுதி, கடல் முகத்துவாரம், காயல்கள், சதுப்புநிலங்கள், மணல்மேடுகள், தாவரங்கள், உயிரினங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படும்" என்று கம்யூனிட்டி என்விரான்மென்டல் மானிட்டரிங் என்ற அமைப்பு தெரிவிக்கிறது.
4. ஸ்டெர்லைட் மூடலும் திறப்பும்
தொழிற்சாலைகள் நிரம்பிய தூத்துக்குடியில் உள்ள மிகப் பெரிய ஆலைகளில் ஒன்றான ஸ்டெர்லைட் தாமிர ஆலையில், இந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கந்தக டை ஆக்சைடு வாயு கசிந்தது. இதனால் சுற்று வட்டார மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தும்மல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர்.
இதை அடுத்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அந்த ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது, அந்த ஆலைக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக இந்த ஆலை அமைக்கப்படுவதற்கு முன்பிருந்தே பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்துள்ளன. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஆலை மீண்டும் செயல்படத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.
5. அச்சுறுத்தும் கோமாரி
விவசாயிகளையும், கால்நடை வளர்ப்போரையும் இந்த ஆண்டு கதிகலங்க வைத்தது கோமாரி. எல்லோரது தலைக்கு மேலும் கத்தி தொங்கிக்கொண்டே இருந்தது. கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் தொடங்கிய கோமாரி நோய் பாதிப்பு, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், மயிலாடுதுறை பகுதியிலும் பரவ ஆரம்பித்தது.
தமிழகத்தின் பல பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்தன. இதனால் பல மாவட்டங்களில் மாட்டுச் சந்தைக்குத் தடை விதிக்கப்பட்டது. அலோபதி மருத்துவம் கோமாரியைக் கட்டுப்படுத்துவதில் பெரிய பலன் அளிக்காத நிலையில், பாரம்பரிய மருத்துவ முறைகள் கைகொடுத்தன.
6. கெயில் எரிவாயுக் குழாய் திட்டம்
மத்தியப் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'கெயில் (இந்தியா) லிமிடெட்’ என்ற பொதுத்துறை நிறுவனம், கொச்சியில் இருந்து பெங்களூருவுக்குக் கோயம்புத்தூர் வழியாகக் குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்காகக் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 136 கிராமங்களில் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதனால் 310 கி.மீ. நீளத் தொலைவுக்கு 20 மீட்டர் அகலம் உள்ள குழாய்கள் பதிக்கப்படும். இதற்கு 5,842 பட்டாதாரர்களுக்குச் சொந்தமான 1,491 ஏக்கர் விவசாய நிலங்கள் தேவைப்படும். இதனால் 5,500 விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசே தெரிவிக்கிறது.
திட்டத்தை எதிர்த்த விவசாயிகள் காவல்துறை தாக்குதலுக்கு உள்ளாகினர். இதையடுத்துக் கெயில் நிறுவனத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், விவசாயிகளுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தற்போது கெயில் நிறுவனத்துக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
7. மீத்தேன் எரிவாயுத் திட்டம்
தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப்படும் பழைய தஞ்சை மாவட்டம் அந்தப் பெருமையை இழக்கக்கூடும். காரணம், காவிரி படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் வரவுள்ளதுதான்.
தஞ்சை, திருவாரூர் மாவட்டப் பகுதிகளில் நிலத்தடியில் இருந்து மீத்தேன் எரிவாயு எடுக்கக் கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. மேற்கண்ட இரண்டு மாவட்டங்களில் 8 வட்டங்களில் 667 சதுரக் கிலோ மீட்டர் பகுதியில், அதாவது 1,66,210 ஏக்கர் நிலப்பரப்பில் மீத்தேன் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும், காவிரிப் படுகையில் விவசாய வளம் இழக்கப்படும், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் மட்டுமின்றி கடலூர் மாவட்டமும் பாதிக்கப்படும் என்கிறார் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோ.திருநாவுக்கரசு.
8. கீழ்பவானி கால்வாய் சிக்கல்
கீழ்பவானி பாசனத் திட்டத்தின் கீழ் கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1,200 கோடி ரூபாய். தண்ணீர் சேதமின்றிக் கடைமடைப் பகுதிக்கும் சென்று சேர வேண்டும் என்பது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், விவசாயிகள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
கீழ்பவானி பாசனப் பகுதியில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் வயல்வெளிகள் உள்ளன. ஈரோடு, பெருந்துறை, கோபி, திருப்பூர், கரூர் உள்ளிட்ட 10 சட்டமன்றத் தொகுதிகள் இந்தக் கால்வாய் மூலம் நீர்வளம் பெறுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர், விவசாயக் கிணறுகளுக்கான நிலத்தடி நீர், கசிவு நீர் மூலம் இருநூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் பலனடைந்து வருகின்றன. கான்கிரீட் தளம் அமைத்தால் இவை அனைத்தும் பாதிக்கப்படும் என்கின்றன கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கமும், காங்கேயம் காளை ஆராய்ச்சி மையமும்.
9. மேற்குத் தொடர்ச்சி மலை காக்கப்படுமா?
மேற்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்பான கஸ்தூரிரங்கன் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாக மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் நவம்பர் 13ஆம் தேதி அறிவித்தது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு பற்றி தமிழகத்தில் பெரிய விழிப்புணர்வு இல்லை.
கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் இந்த அறிக்கை வலியுறுத்தும் கட்டுப்பாடுகளின் கீழ் வரும். இந்த அறிக்கை பழங்குடி மக்களுக்கு ஆதரவாக இல்லை என்றும், இயற்கை வளம் அழிக்கப்படுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். இதற்குப் பதிலாக முன்பு சூழலியலாளர் மாதவ் காட்கில் அளித்த அறிக்கை சிறந்தது என்கின்றனர். ஆனால், தமிழக அரசு கஸ்தூரிரங்கன் அறிக்கை குறித்து எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
10. சத்தியமங்கலம் சரணாலயச் சர்ச்சை
தமிழகத்தின் நான்காவது புலிகள் சரணாலயமாகச் சத்தியமங்கலம் மார்ச் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, 2008ஆம் ஆண்டிலிருந்து காட்டுயிர் சரணாலயமாக இருந்த சத்தியமங்கலம், தற்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ஹெக்டேர். இங்கு 28 புலிகள் இருப்பதாக கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
ஆனால், புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படுவதற்கு எதிராக அப்பகுதியைச் சேர்ந்த 19 கிராமப் பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தன. இந்தக் காடுகளில் வாழ்ந்து வரும் பழங்குடிகள் வெளியேற்றப்படலாம் என்ற அச்சமே இதற்குக் காரணம்.
மேலும், பழங்குடி மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்திப் புலிகள் காப்பகத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்த மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்கள் உரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் மனுவேல் கைது செய்யப்பட்டார். இதற்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago