நாய் வளர்ப்பதில் உள்ள பொறுப்பு என்பது, குழந்தை பராமரிப்பைப் போன்றது. குழந்தையாவது தனக்கு வேண்டியதைக் கேட்கும், வலித்தால் அழும். ஆனால், வாயில்லாத நாயோ, பேசாமல் வதைபடும். சில வீடுகளில் கட்டிப்போடப்பட்டிருக்கும் நாயைக் காணும்போது, இதைப் பற்றி நினைத்துக்கொள்வேன். மனிதரைத் தனிமைச் சிறையில் அடைப்பதைப் போல, இது ஒரு சித்திரவதை. நம்மூரில் நாய்கள் படும் சித்திரவதைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
தமிழகத்தில் தொல் பழங்காலத்துக்கு முன்பே நாய் மனிதருடன் சேர்ந்து வாழ்ந்தது என்பதைப் பாறை ஓவியங்கள் மூலம் அறிய முடிந்தாலும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் குதிரை, மாட்டைப் போன்று மனிதருக்காக வேலை செய்யும் விலங்காகவே அது இருந்தது. காவலுக்கும் வேட்டைக்கும் பயன்படுத்தப்பட்டது. அதிலும் பாமரர், விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்தினரே நாய்களை வளர்த்தனர். மற்றவர்கள் நாயைக் கேவலமாகப் பார்த்தனர். ‘நாய்’ என்பது ஒரு வசவுச் சொல்லானது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தன்னை ‘நாயினும் கடையேன்’ என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகத்தான் நம் நாட்டில் நாய் செல்லப்பிராணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறிப்பாகப் பிரிட்டிஷார் வந்த பிறகுதான். நாய்களை வளர்ப்பதில் பெயர்பெற்ற பிரிட்டிஷார், ஆயிரக்கணக்கில் அவற்றை இறக்குமதி செய்தனர். அதுவரை நாயை மட்டுமல்ல, எல்லா உயிரினங்களையும் தூரத்திலேயே வைத்திருந்த நம்மூர் மேட்டுக்குடி மக்கள் சிலரும் வெள்ளைக்காரரைப் பின்பற்றி கிரிக்கெட், கோல்ஃப் விளையாடத் தொடங்கியது போல, நாய் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர்.
அதன் பிறகு, ஸ்பேனியல், அல்சேஷன் போன்ற நாய்கள் இந்திய வீடுகளில் தென்பட ஆரம்பித்தன. இன்றும் நாய்களுக்கு ஸ்பாட்டி, ஜிம்மி, டைகர் என்று ஆங்கிலப் பெயர்களே வைக்கப்படுவதை, நாம் கவனிக்க வேண்டும். ஆனால், நாயை வளர்க்கும் பலரும் அதை வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.
பழக்கப்படுத்துதல் ஒரு கடமை
நாய் வளர்ப்பில் ஒரு அடிப்படை விதி, நம் நாய் மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் பிரச்சினையாக இருக்கக் கூடாது. அதற்காக நாய் பழக்கப்படுத்தப்பட வேண்டும். சதா குலைக்காமல் இருக்க, வீட்டுக்கு வருபவர்கள் மேல் தாவாமல் இருக்க, நடைப்பயிற்சியின்போது நம்மை இழுத்துக்கொண்டு போகாமலிருக்க, மற்ற நாய்களைக் கண்டு உறுமாமல் இருக்க, வாகனங்களைத் துரத்தாமல் இருக்க, நாய்களைப் பழக்கப்படுத்த முடியும். ஆனால், வெகு சிலரே இதற்கு நேரம் செலவழிக்கிறார்கள். பலரும் பயிற்சி ஏதும் கொடுக்காமல், அது தொல்லை செய்கிறது என்று சொல்லிப் பேசாமல் கட்டிப்போட்டு விடுகிறார்கள். அதுவோ குலைத்துக்கொண்டேயிருக்கும்.
ஆடுமாடுகளைக் கட்டி வைக்கிறோமே நாயைக் கட்டி வைத்தால் என்ன என்று நினைக்கிறார்கள் போலும். இது ஒரு தவறான குறுக்கு வழி. இதனால்தான் பல அடுக்குமாடிக் கட்டிடங்களில் நாய் வைத்திருக்க அனுமதிப்பதில்லை. அப்படியே சில இடங்களில் அனுமதித்தாலும், அந்த நாய்களுக்கு எந்த விதமான உடற்பயிற்சியும் இல்லாததால் சீக்கிரமே உடல்நலம் குன்றுகிறது. இந்தியாவில் வளர்ப்பு நாய்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சினை உடல் பருமன் என்கிறார் எனது நண்பரான விலங்கு மருத்துவர் ஒருவர். கிராமப்புஙகளில் நாய்களை கட்டிப்போட்டு வைப்பதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
எதில் முதலடம்?
அதேபோலத்தான் நாய்க்கு உணவு கொடுப்பதும். சில வீடுகளில் நாயை நடமாடும் குப்பைத்தொட்டி போலப் பாவித்து, மிச்ச மீதி சாப்பாட்டைப் போடுவார்கள். மரக்கறி உணவுப் பழக்கம் கொண்ட சிலரோ, தங்கள் மதிப்பீட்டைப் பாவம் நாய் மீதும் திணித்துவிடுவார்கள். அடிப்படையில் நாய் ஒரு ஊனுண்ணி - இறைச்சி உண்ணும் உயிரினம். அதற்கேற்ப அதன் உணவுப்பாதை மிகவும் குறுகியது. அதன் கோரைப் பற்களும் அதற்கான அடையாளமே. அதற்கு மரக்கறி உணவு மட்டுமே போடுவது கொடுமை. இப்போதுதான் குளிகை வடிவில் நாய் உணவு கிடைக்கிறதே, அதை வாங்கிக் கொடுக்கலாம். பதிலாக வெறும் தயிர்சாதத்தைப் போட்டு வளர்த்தால், அது உயிரோடு இருக்கத்தான் செய்யும், ஆனால் ஆரோக்கியமாக இருக்காது. முதுபெரும் இயற்கையியலாளரான எம்.கிருஷ்ணன், தான் தீவிர சைவமானாலும் வளர்த்த நாய்க்குத் தோட்டத்தில் கறி சமைத்துப் போடுவதை நான் பார்த்திருக்கிறேன். விலங்குகளைத் தீவிரமாக நேசித்தவராயிற்றே!
சரி, செல்லப் பிராணி வளர்ப்பை நாம் எவ்வாறு அணுகுகிறோம்? பல காரணங்களுக்காக நாய் வாங்குகிறோம். குழந்தைகள் கேட்டார்கள் என்று; காவலுக்கென்று. ஆனால், அதன் கூடவே வரும் பொறுப்பைத் தட்டி கழித்துவிடுகிறோம். இதன் ஒரு முக்கிய விளைவு என்ன தெரியுமா? உலகிலேயே தெருநாய்கள் அதிகமாக உள்ள நாடு இந்தியாதான். வெறிநாய்க் கடிக்கு மக்கள் உயிரிழப்பதிலும் நம் நாடுதான் முதலிடம் வகிக்கிறது.
பயனற்ற கருத்தடை
பெட்டை நாய்க்குக் கருத்தடை செய்யாமல் விட்டுவிட்டு, அது குட்டி போட்ட பின் என்ன செய்வதென்று தெரியாமல், அவற்றைப் பூங்கா போன்ற பொது இடங்களில் கொண்டு போய் விட்டுவிடும் ஆட்கள் சிலர் நம்மிடையே இருக்கிறார்கள். இன்னும் சிலரோ தெருநாய்களுக்குச் சோறு போடுவார்கள். ஆனால் அவற்றுக்கு வெறிநாய்க் கடிக்குத் தடுப்பூசி போடவோ, கருத்தடை செய்யவோ எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள்.
தெருநாய்களுக்கு ஒரு சிலர் தீனி கொடுப்பதைப் பெரிய புண்ணியக் கைங்கரியம் போலப் பத்திரிகைகளும் படம் போட்டு வெளியிடுகின்றன. தெருநாய்கள் பல்கிப் பெருகி ஒரு பிரம்மாண்டமான சுற்றுச்சூழல் பிரச்சினையாக இப்போது உருவெடுத்திருக்கின்றன. விலங்குக் கருத்தடைத் திட்டம் (ABC - Animal Birth Control) இருபது ஆண்டுகளுக்கு மேல் இயங்கிக்கொண்டிருந்தாலும், தெருநாய்களின் எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டேதான் போகிறது. இது ஒரு உதவாக்கரை வேலை என்று நிபுணர்களும் நீதிபதிகளும் சுட்டிக்காட்டிவிட்டார்கள்.
அது மட்டுமல்ல. கருத்தடை செய்வது, நாய்க்கு வெறிபிடிப்பதை எந்த வகையிலும் குறைப்பதில்லை. ஏனென்றால், வெறிநோய்த் தடுப்பூசி ஒவ்வோர் ஆண்டும் போடப்பட வேண்டும். ஒவ்வொரு தெரு நாயையும் பிடித்து வருடாவருடம் யாரால் ஊசி போட முடியும்? இது நடக்கிற காரியமா?
பிரச்சினை புரிகிறதா?
இந்த நிலையில் தீவிரமான இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவாமல், ‘தெருநாய்களுக்காகக் குரல் கொடுக்கிறோம்’ என்று மேலும் குட்டையைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள் விலங்கு ஆர்வலர்கள். அமெரிக்காவில் உருவான விலங்குரிமை இயக்கம் நம் நாட்டுக்கு வந்தபோது முக்கிய உருமாற்றத்தைப் பெற்றது. அது மரக்கறி உணவைப் போற்றிச் செயல்பட ஆரம்பித்துவிட்டது.
தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டும் இவர்களுடைய இலக்கானது. உலகின் தொன்மைக் கலாச்சாரங்களில் எல்லாம், உழைக்கும் வர்க்கத்தினருக்கும் விலங்குகளுக்கும் நெருங்கிய உறவு உண்டு. இது ஊழிக்காலமாகச் செழித்திருக்கும் பாரம்பரியம். குளுகுளு அறைக்குள்ளிருந்து கணினியைத் தட்டிக்கொண்டு, விலங்கு எதையும் தொட்டுக்கூடப் பார்த்திராத, எருதுக்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரியாத, நகர்வாழ் மேல்தட்டு மக்கள் உழவர்களுக்கு என்ன சொல்லித்தரப் போகிறார்கள்? ஜல்லிக்கட்டுக்காகப் பேணிப் பராமரிக்கப்படும் மாடுகள் எல்லாம் காங்கேயம், பர்கூர் போன்ற உள்ளூர் கால்நடை இனங்களைச் சேர்ந்த பொலிகாளைகள். ஜல்லிக்கட்டை நிறுத்தினால் சில ஆண்டுகளில், நம் பாரம்பரியக் கால்நடை இனங்கள் மறைந்துவிடும். நாய்கள், பூனைகளை முன்வைத்துச் செயல்படும் விலங்கு ஆர்வலர்களுக்கு இந்த இணைப்புகள் எதுவும் புரிவதில்லை.
சரி, நாய் வளர்க்க வேண்டுமென நீங்கள் நினைத்தால், நாய்க்குட்டி வாங்கும் முன் தீர யோசியுங்கள். நாய் வளர்ப்பு பற்றி ஏதாவது ஒரு புத்தகத்தைப் படியுங்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது கூகுள். நாய்க்காகச் சிறிது நேரம் செலவழித்து, அதைப் பழக்கப்படுத்தி வளர்த்தால், பிரச்சினை இல்லாமல் நம் இல்லத்தில் ஒருவரைப் போலவே வாழும். குறிப்பாக முதியவர்களுக்கு அது ஓர் அன்பான துணை.
இதை நான் எழுதும்போது என் நாய் ஜேனு, என் காலடியில் அதன் உடல் என் காலில் படும்படி படுத்திருக்கிறான். கணினியை அணைத்துவிட்டு நான் தூங்கப்போகும்போது அவனும் கூட வந்து, என் கட்டிலுக்கு அருகே படுத்துக்கொள்வான்.
நாய் வளர்ப்பில் ஒரு அடிப்படை விதி, நம் நாய் மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் பிரச்சினையாக இருக்கக் கூடாது. அதற்காக நாய் பழக்கப்படுத்தப்பட வேண்டும்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago