மனிதச் செயல்பாடுகளே பறவை அழிவுக்குக் காரணம்

By ஆதி வள்ளியப்பன்

சென்னை அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியால் உத்வேகம் பெற்றுப் பறவையியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் வி.சாந்தாராம். "சென்னை போன்ற பரபரப்பான நகரங்களில்கூட உங்கள் சுற்றுப்புறத்தைக் கொஞ்சம் உற்றுநோக்கினால், பல்வேறு பறவைகளை எளிதாக இனங் காண முடியும்," என்கிறார்.

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி அருகேயுள்ள ரிஷிவேலி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், பறவையியல் பற்றி பயிற்சியளிக்கும் பறவை ஆய்வு, இயற்கை வரலாற்று நிறுவனத்தின் (Institute of Bird Studies, Natural History) இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். இந்தியப் பறவைப் பாதுகாப்பு அமைப்பின் (The Indian Bird Conservation Network (IBCN)) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராகவும், தமிழ் பேர்ட்ஸ் என்ற இணையக் குழுமத்தின் நெறியாளராகவும் இருக்கிறார். இந்தக் குழுமம் தமிழகப் பறவைகள் பற்றிய தகவல் பகிர்வு, பாதுகாப்பு அக்கறைகளை வெளிப்படுத்தும் ஒரு கலந்துரையாடல் குழுமம். ஐ.யு.சி.என். சிவப்புப் பட்டியலில் 15 இந்தியப் பறவைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள பின்னணியில், தமிழகப் பறவைகள் தொடர்பாக அவருடன் ஒரு நேர்காணல்:

பறவை நோக்குதலில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

சென்னை சாந்தோமில் 1970களின் தொடக்கத்தில் நாங்கள் வாழ்ந்துவந்தோம். அப்போது அடையாறு முகத் துவாரத்தில் பறவைகளைப் பார்க்கச் செல்வேன். அந்தப் பகுதி என் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது. அங்கிருந்த புல்தரைப் பகு தியே, நான் அடிக்கடி பறவை நோக்கும் இடம். அந்த இடம்தான் தற்போது எம்.ஆர்.சி. நகராகக் கட்டடங்கள் முளைத்து நிற்கிறது. குளிர் மாதங்களில் வலசை பறவைகள் வரும் (Migratory Birds), கோடையில் ஆள்காட்டி, வானம்பாடி வகை கள் அங்கே கூடு வைக்கும்.

அடையாறு முகத்துவாரத்தில் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர முடியுமா?

அடையாறு முகத்துவாரத்தில் வலசை வரும் பூநாரைகள் (flamingos), கருங்கொண்டை வல்லூறு, நண்டுதின்னும் உப்புக்கொத்தி, மின்சிட்டு (Ashy Minivet) போன்றவற்றைப் பார்த்துள்ளேன். இந்தியாவிலேயே மின்சிட்டைப் பற்றிய மூன்றாவது பதிவு அதுதான். மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, கல்பொறுக்கி உள்ளான் கூடுகளை முதன்முதலில் நான் கண்டறிந்ததும் மறக்க முடியாத தருணம். புகழ்பெற்ற இயற்கையியலாளர் எம்.கிருஷ்ணன் அந்த உள்ளான் கூட்டைப் பிறகு படமெடுத்தார்.

நான் பறவை நோக்க ஆரம்பித்த காலத்தில் எங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே 50 பறவை வகைகளைப் பார்க்க முடியும். இன்றைக்கு 5 பறவை வகைகளைப் பார்ப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது.

இதையும் ஐ.யு.சி.என். வெளியிட்டுள்ள புதிய சிவப்புப் பட்டியலில் 15 இந்தியப் பறவைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதையும் பொருத்திப் பார்க்க முடியுமா?

தமிழகம், இந்தியாவைப் பொருத்தவரை இந்தப் பட்டியலில் புதிய மாற்றங்கள் இருப்பதாகச் சொல்ல முடியாது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பறவைகள் ஏற்கெனவே மோசமான நிலைமைக்குச் சென்றுவிட்டவைதான். தமிழ்நாட்டில் பிணந்தின்னிக் கழுகுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. குறைந்த எண்ணிக்கையில் உள்ள இக்கழுகுகள், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான பகுதிகளில், தற்போது இல்லை. அதேநேரம் சிவப்புப் பட்டியலில் இடம்பெறாத பல பறவைகளும் உயிரினங்களும் உள்ளூர் அளவில் அச்சுறுத்தலுக்கு நெருக்கமான நிலைக்குச் சென்றிருக்கலாம். அது சார்ந்த கணக்கெடுப்பு இருந்தால் மட்டுமே, இதை நிரூபிக்க முடியும். துரதிருஷ்டவசமாகத் தமிழகத்தில் உள்ளப் பறவைகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கெடுப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை.

தமிழகத்தில் பறவைகள் அழியும் ஆபத்துக்குத் தள்ளப்படுவதற்கான முக்கியக் காரணங்கள்?

இயற்கையான வாழிடம் அழிப்பு, காடுகள் துண்டாதல் ஆகிய இரண்டும்தான் முக்கியக் காரணங்கள். அத்துடன் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் வேட்டையையும் சேர்த்துக் கொள்ளலாம். மனிதச் செயல்பாடுகள் அதிவேக வளர்ச்சி கண்டு வருவதால், இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன. அதன் பலனாக உயிரினங்கள் முற்றிலும் அற்றுப் போகின்றன. பொருளாதார வளர்ச்சி தொடர்பான வேட்கையால் பூமியில் வாழும் மற்ற உயிரினங்கள், சுற்றுச்சூழல் நலனை நாம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறோம். இது நமது சூழலியல் பாதுகாப்புக்கும் எதிர்காலத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தமிழகப் பறவை சரணாலயங்கள் நல்ல நிலைமையில் உள்ளனவா?

பறவை சரணாலயங்களுக்குப் பாதுகாப்பு தருவதன் மூலம் மட்டும், பறவைகளைப் பாதுகாத்துவிட முடியாது. எடுத்துக்காட்டுக்கு, வேடந் தாங்கல் பறவை சரணாலயம் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், சரணாலயத்தில் உள்ளப் பறவைகள் சார்ந்துள்ள மற்றப் பகுதிகள் வேகமாக அழிக்கப்பட்டுவருகின்றன. அந்த விளைநிலங்களும் மற்றப் பகுதிகளும் தனியாருக்குச் சொந்தமானவை. இந்தப் பகுதிகளில்தான் பறவைகள் மேயவும் உணவு தேடவும் செய்யும். அந்த நிலங்கள் வீட்டுமனைகளாகவோ, தொழிற்சாலைகளாகவோ மாற்றப்பட்டு வருவதால், பறவைகளுக்கு உணவு கிடைக்காமல் போகும். சரணாலயங்கள் பற்றி யோசிக்கும்போது, இதையும் சேர்த்து யோசிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள முக்கியப் பறவை பகுதிகள் (Important Bird Areas) பற்றி...

தமிழகத்தில் 34 பகுதிகள் அப்படியுள்ளன. இந்தப் பகுதிகளில் பாதிக்கு மேற்பட்டவை காட்டுயிர், பறவை சரணாலயங்கள்தான். மற்றவை மிகக் குறைந்த பாதுகாப்பு அல்லது பாதுகாப்பே இல்லாத சதுப்புநிலங்களும் காடுகளும். இவற்றையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். பெரும்பாலான முக்கியப் பறவை பகுதிகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக, முழுமையான தகவல் பதிவும் செய்யப்படவில்லை.

தமிழகத்தில் இந்தியப் பறவை பாதுகாப்பு அமைப்பின் நடவடிக்கைகள் குறித்துச் சொல்லுங்கள்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியப் பறவைப் பாதுகாப்பு அமைப்பு தமிழகத்தில் முழுமையாகச் செயல்படும் நிலையில் இல்லை. இதற்குக் காரணம், குறைவான உறுப்பினர்கள் இருப்பதுதான். நான் மாநிலத்துக்கு வெளியே இருப்பதால், முழுமையாகப் பங்காற்ற முடியவில்லை. கூடிய சீக்கிரத்திலேயே ஐ.பி.சி.என்னின் செயல்பாடுகளை அதிகரிப்போம். புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதுடன், மாநிலத்தில் உள்ள முக்கியப் பறவை பகுதிகளின் நிலைமையை ஆராய்ந்து, பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் பரிந்துரைக்க உள்ளோம். பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப் போகிறோம்.

பறவை நோக்குதலைப் பரவலாக்கத் தனிப்பட்ட முறையில் என்ன பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள்?

இளந் தலைமுறையினர் திறந்த வெளிகளுக்குச் சென்று இயற்கையை அனுபவிப்பதில்லை. இயற்கை உலகின் ஆச்சரியங்களை அறிமுகப்படுத்தவும் பறவை நோக்குதலைப் பரவலாக்கவும் அவர்களைப் பறவை நோக்குதல், கானுலாக்களுக்கு அழைத்துச் செல்கிறேன். இதன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் இயற்கையைப் பாதுகாக்க விழிப்புணர்வு கிடைக்கும். சென்னை இயற்கையாளர்கள் சங்கம் (Madras naturalists society) தொடங்கிய காலத்தில் இருந்து அந்த அமைப்புடனும், பிளாக்பக் என்ற அதன் இதழுக்கு ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறேன். கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சென்னை பறவைப் பந்தயத்தின் நீதிபதிகளில் ஒருவராகச் செயல்பட்டு வருகிறேன்.

வி.சாந்தாராம் தொடர்புக்கு: vsram2003@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்