காகத்துக்கு உணவு வைத்துவிட்டு அதனுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டி ருப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் காகத்துடன் நட்புகொள்ள ஆசை வந்தது. அலுவலகத்தின் பால்கனியில் காகத்துக்கு பிஸ்கட் வைத்துவிட்டுக் கொஞ்சம் பக்கத்திலேயே நின்றுகொண்டேன். கொஞ்ச நேரத்தில் எங்கெங்கெல்லாமோ இருந்து வந்த காகங்கள் அருகில் வராமல் வெளியில் உள்ள மரத்திலும் கேபிள்களிலும் உட்கார்ந்துகொண்டு பிஸ்கட்டையும் என்னையும் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தன. எதுவும் அருகில் வரவே இல்லை. நான் சற்று நகர்ந்து உள்நோக்கிச் சென்று பால்கனியைப் பார்ப்பதற்கு ஏதுவாக மறைந்துகொண்டேன். அடுத்த விநாடியே காகங்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு வரிசையாகப் பிட்டு வைத்த பிஸ்கட்டைக் கொத்திக்கொண்டு போயின. இப்படியே ஒரு சில நாட்கள். ஒவ்வொரு நாளும் எனக்கும் பிஸ்கட்டைப் பிட்டுவைத்த இடத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்துக்கொண்டே வந்தேன். காகம் பிஸ்கெட் எடுக்க வருவதற்கு முன் மறைந்துகொண்டிருக்கும் நான் அது எடுக்கும்போது மெதுவாக வெளிப்பட்டு அதை நோக்கி வருவேன். அது எடுக்காமல் பறந்துவிடும். குறித்த நேரத்தில் பிஸ்கட் வைக்கத் தவறியபோதெல்லாம் கிராதியில் உட்கார்ந்துகொண்டு காகங்கள் கரைய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் நான் பால்கனியில் இருக்கும்போதும் பயப்படாமல் வந்து பிஸ்கட்டை எடுத்துச்செல்ல ஆரம்பித்தன.
என் பரிசோதனையையும் காகத்துக்கும் எனக்கும் இருக்கும் உறவையும் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிஸ்கெட்டைப் பிட்டுக் கையிலே வைத்துக்கொண்டு காகம் எடுத்துச் செல்ல ஏதுவாய்க் கையை வெளியில் நீட்டிக்கொண்டிருந்தேன். பிஸ்கெட் சாப்பிட வந்த காகங்கள் என்னைக் கண்டதும் கிராதி அருகே வருவதும் மரத்தை நோக்கிப் போவதுமாக அலமலந்துகொண்டிருந்தன. முதல் நாள் அப்படிச் செய்துவிட்டு பிஸ்கெட்டைக் கிராதியில் வைத்துவிட்டேன் சட்டென்று ஒரு காகம் வந்து எடுத்துக்கொண்டு போனது.
இந்தப் பரிசோதனையை மூன்று நாட்கள் செய்த பிறகு நான்காம் நாள் கிராதியில் வைத்த பிஸ்கட்டை எடுப்பதற்காகக் காகம் கிராதியில் வந்து தொற்றியபடி நின்றபோது பிஸ்கெட்டை எடுத்துக் காகத்திடம் நீட்டினேன். சட்டென்று என் கையிலிருந்தே கொத்திக்கொண்டு போனது. எனக்கு உற்சாகத்துக்கு அளவே இல்லை. அலுவலகத்தில் எல்லோரிடமும் பெருமையடித்துக்கொண்டேன், காகம் என் கைகளில் இருந்து பிஸ்கெட்டை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டதென்று. ஐஸ்வர்யா ராயிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஒருவர் எப்படி பீற்றிக்கொள்வாரா அப்படிப் பீற்றிக்கொண்டேன்.
காகம் என் கையில் முதன்முறையாக பிஸ்கெட் வாங்கியபோது நான் உண்மையிலேயே என்னை மறந்த பரவச நிலையை அடைந்தேன். காகம் என்னை நம்பி என் கைகளில் வாங்குகிறதே, தன் உலகுக்குள் என்னையும் அனுமதிப்பதால்தானே இந்த நம்பிக்கை வந்தது என்று எனக்குத் தோன்றியது.
காகம் நம்மை நெருங்கும் போதெல்லாம் நாமும் காகத்தை நெருங்குகிறோம். நம்மை நம்பி நம் கையில் உணவை வாங்கிக்கொள்ளும்போது அதுவரை காகத்துக்கும் நமக்கும் இடையே இருந்த இடைவெளி கரைந்து நாமும் காகமாகிறோம். நம் கையில் உணவு வாங்கித்தின்பது காகமல்ல நாம்தான். இது ஆனந்தமயமான ஒன்றுபடல். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இந்த உணர்வு புதிதல்ல. இது குழந்தையிடம் நமக்குக் கிடைக்கும் உணர்வைப் போன்றது.
ஒருமுறை திருவான்மியூர் கடற்கரையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது ஒரு காட்சியைப் பார்த்தேன். ஒரு நபர் மஞ்சள் பையை வைத்துக்கொண்டு அதிலிருந்து மாவு மாதிரி ஏதோ எடுத்து வரிசையாகக் கோலமாவால் கோடு கிழிப்பது மாதிரி போட்டுக்கொண்டே வந்தார். என்னவென்று அவரிடமே கேட்டேன். "கம்பு மாவுங்க, எறும்புகளுக்காகப் போடுறேன்" என்றார். அவருடைய கருணை உணர்வை நினைத்து எனக்குச் சிலிர்த்துவிட்டது. எறும்புகள் தாமாகவே தீனி தேடிக்கொள்ள முடியும் என்றாலும், இப்படிப்பட்ட கருணை, மனிதர்களின் மேல் இன்னும் நம்பிக்கை வைக்கலாம் என்ற ஆறுதலை ஏற்படுத்துகிறது.
வளர்ப்புப் பிராணிகளுக்குத் தீனி வைப்பது சரி. ஆனால் இயற்கையாகத் திரியும் உயிரினங்களுக்கு இப்படித் தீனி வைப்பது சரியா? காகத்துக்கு பிஸ்கட் கொடுப்பது சரியா? இதைப் பற்றி பறவையியலாளர் ஜெகநாதனிடம் கேட்டேன்.
தீனி வைப்பது உயிரினங்களுக் கிடையே ஒரு விதப் போட்டியை ஏற்படுத்திவிடுவதோடு ஒரு சில உயிரினங்களுக்கு மட்டும் அது சாதகமாகிவிடும் என்றார். மனிதர்கள் இருக்கும் இடங்களில் காகம் உள்ளிட்ட ஒரு சில பறவைகள் மட்டும் எண்ணிக்கையில் அதிகரிப்பது மற்ற பறவைகள் கொஞ்சம்கொஞ்சமாக அந்த இடத்திலிருந்து குறைந்துவிடுவதற்குக் காரணமாகிவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட உயிரினம் ஆதிக்கம் செலுத்தினால் மற்ற உயிரினங்கள் ஒடுங்கிவிடும் என்பதற்கு மனித ஆதிக்கம் ஒரு எடுத்துக்காட்டு என்றார் அவர்.
அவர் சொன்னதைக் கேட்ட பிறகு எனக்குத் தோன்றிய உண்மை இதுதான்: உயிர்களிடத்தில் நமக்கு அன்பு இருந்தால் நாம் அவற்றுக்குத் தீனி வைக்கத் தேவையில்லை, அவை தாமாகவே இரை தேடி உண்பதற்கு ஏற்ற இயற்கையான சூழலை ஏற்படுத்தினால் போதும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago