காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களின் முன்னத்தி ஏர்

By ஏ.சண்முகானந்தம்

2008-ம் ஆண்டின் மத்தியில் மூத்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞரான த.ந.அ. பெருமாளுக்கு, சென்னை கூழைக்கடா இயற்கை புகைப்படக் குழு (Pelican Nature Photo Club) சார்பாக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்க முடிவு செய்திருந்தோம்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, விடுதி அறைக்கு அழைத்துச் செல்வது, அவரை கவனித்துக்கொள்வது முதலான பொறுப்புகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன. சர்வதேசப் புகழ்பெற்ற காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக அறியப்பட்ட ஒருவர், மிகவும் எளிமையாகவும், பழகுவதற்கு இனிய பண்பாளராகவும் இருந்தது அவர் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது.

அவர் தங்கியிருந்த அறை எப்போதும் நண்பர்களால் சூழப்பட்டிருந்தது. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள், ஐயங்களுக்கு சிறிதுகூட சலிப்படையாமல் இன்முகத்துடன் பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அடுத்த நாள் சென்னையில் உள்ள பிரபலப் பள்ளி ஒன்றில் பெருமாளின் காட்டுயிர் ஒளிப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. பூச்சிகள் தொடங்கி பேருயிர்வரை அவருடைய ஒளிப்படங்கள் பெரும்பாலானவற்றில் ஒளி முக்கியப் பங்காற்றி இருந்தது.

வாழ்நாள் சாதனை விருது

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பொது மக்கள், கூழைக்கடா இயற்கை புகைப்படக் குழு உறுப்பினர்கள் கூடியிருந்தனர். த.ந.அ. பெருமாளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவருடன் சிறந்த பத்திரிகை ஒளிப்படக் கலைஞருக்கான விருது ரங்காச்சாரிக்கும், மருத்துவத் துறையில் ஒளிப்பட சேவையாற்றிய டி.எஸ்.கே. கரன் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து த.ந.அ.பெருமாள் சிறப்புரை ஆற்றினார். ஒளிப்படக் கலையின் வரலாறு, ஆரம்பப் பாடங்கள், தொடக்கக் காலத்தில் தனக்கு ஏற்பட்ட சிரமங்கள், இன்றைய கணினிமயப்பட்ட சூழல், காட்டுயிர் ஒளிப்படங்கள் எடுக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய பொறுமை, உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பண்பு, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு என பல்வேறு அம்சங்கள் பற்றி விரிவாகப் பேசினார்.

உரைக்குப் பின் காட்டுயிர் ஒளிப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர்களுடன் நீண்ட நேரத்துக்குக் கலந்துரையாடினார். காட்சியமைப்பு, படத்தில் ஒளி இடம்பெற வேண்டிய பங்கு, எத்திசையிலிருந்து ஒளி வந்தால் படத்திற்கு அழகு சேர்க்கும், நிறங்கள், கோணம் என ஒளிப்படக்கலையின் நுட்பங்கள் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

வெளித்தெரியாத உழைப்பு

அவருடைய ஒளிப்படங்களில் மிகவும் புகழ்பெற்றது, அலகில் எலியைப் பிடித்தபடி இறகுகளை விரித்த நிலையில் இருக்கும் கூகையின் படம்தான். பெங்களூரு புறநகர்ப் பகுதியில் அப்படம் எடுக்கப்பட்ட பகுதிக்கு தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு பகல் நேரத்தில் பெருமாள் சென்றார். சரியான தொலைவில் ஒளிப்படக் கருவியையும் ஃபிளாஷையும் சரியான கோணத்தில் பொருத்திவிட்டு, அந்தி சாயும்வரை பொறுமையுடன் காத்திருப்பார். இருள் கவிந்ததும், இரையைப் பிடிக்க கூகை வந்து செல்வது உறுதியானதும் ஒளிப்படக் கருவியை இயக்க ஆரம்பிப்பார்.

முதல் முறையாக ஒளி வெள்ளம் பாயும்போது அச்சப்பட்ட கூகை திரும்ப நீண்ட நேரத்துக்கு வராமல் இருந்ததையும், பின்னர் வந்ததையும் பதிவு செய்துள்ளார். அதுபோல ஒரு வாரத்துக்கும் மேலாக பகலில் சென்று, இரவில் நீண்ட நேரம் காத்திருந்து கூகையை சரியான கோணம், காட்சியில் பதிவு செய்த நிகழ்வை எளிமையாக விவரித்து சொல்வார்.


படம்: சந்த்ரு, ஊட்டி

காட்டுயிர் ஒளிப்படம் எடுப்பதில் அவருடைய பொறுமை எங்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த கூகை ஒளிப்படம் சிறப்பாக அமைந்திருந்ததுடன், பல்வேறு விருதுகளைப் பெற்றதையும் நினைவுகூர்ந்தார். அப்படத்தின் கோணம், ஒளி பாய்ச்சப்பட்ட விதம், பதிவு செய்த நேர்த்தி, அதற்காகச் செலவிடப்பட்ட மனித உழைப்பு, கருவிகள், நாட்கள் என பல அரிய செய்திகளை அவருடனான உரையாடலின் வழியே அறிய முடிந்தது.

எளிமையின் புகலிடம்

ஒளிப்படம் எடுக்கும்போது உயிரினத்தின் வாழ்விடம் தெரியும்படி எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோலவே அந்த உயிரினத்தின் வாழ்விடத்துக்கும் கூட்டுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கவனத்துடனும் பொறுமையுடனும் ஒளிப்படம் எடுப்பது அவசியம் என்று வலியுறுத்துவார். அப்படி இயலாத நிலையில், ஒளிப்படம் எடுப்பதை தவிர்ப்பதே நல்லது என்பார்.

சென்னையின் புறநகர்ப் பகுதியான நன்மங்கலம் காப்புக் காட்டுக்கு அவருடன் சென்றிருந்தபோது, வண்டுகளை படம் எடுப்பதற்கான நுட்பத்தை விளக்கியதோடு, பூக்களை ஒளியமைப்புடன், அழகுணர்வோடு எடுக்கும் விதத்தை பொறுமையுடன் விளக்கினார். அன்றைக்கு இளைஞர்களாக இருந்த எங்களோடு இயல்பாகப் பேசிக்கொண்டும், குழந்தைகளோடும் சிரித்து விளையாடிக்கொண்டும் இருந்த அவருடைய எளிமை அனைவரையும் கவர்ந்தது.

மறக்காத நாட்கள்

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு, நன்மங்கலம் காப்புக் காட்டுப் பயணம், அவருடனான உரையாடல் என த.ந.அ.பெருமாளுடன் சென்னையில் கழித்த மூன்று நாட்களும், இன்றளவும் மனதில் பசுமையாகத் தங்கியுள்ளன. அடுத்தடுத்து சென்னைக்கு அவர் வருகை தந்தபோது, அவரையும் அவருடைய துணைவியாரையும் சந்தித்து உரையாடுவது இயல்பான நிகழ்வாகி இருந்தது.

இன்று அவர் இயற்கையோடு கலந்தாலும், அவரது ஒளிப்படங்கள், உரையாடல், மேற்கொண்ட பயணங்கள் வழியாக தமிழக காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்கள் மனதில் என்றென்றும் நீங்காமல் இடம்பிடித்துள்ளார். இந்திய காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களின் 'முன்னத்தி ஏர்' என்ற அடைமொழிக்கு சாலப் பொருத்தமானவர் பெருமாள். அவர் விட்டுச்சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.



தாய்: பெரியநாயகி;

தந்தை: நடேச ஆச்சாரி

மனைவி: செல்லம்மாள்

பிலிப்ஸ் நிறுவனத்தில் Radio Service Engineer ஆகப் பணிபுரிந்துள்ளார்.

ஒளிப்படக்கலையின் முன்னோடி: ஓ.சி. எட்வர்ட்ஸ்.

250-க்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் சர்வதேச, தேசிய விருதுகளை பெற்றுள்ளன.

1,500-க்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் கண்காட்சிகளுக்குத் தேர்வாகியுள்ளன.

மைசூர் புகைப்படக் கழகத்தின் செயலர், பொருளாளர் பதவிகளை வகித்துள்ளார்.

இந்திய புகைப்படக் கூட்டமைப்பின் (Federation of Indian Photography FIP) இயற்கை பிரிவுக்குச் செயலாளராக இருந்துள்ளார்.

1978-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள Royal Photography Society-இன் நிதிநல்கை, 1983-ம் ஆண்டு FIAP என்ற அமைப்பில் Master பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Indian International Photographic Council என்ற அமைப்பு, கர்நாடக லலித் கலா அகாடமி விருதுகளை பெற்றுள்ளார்.

பெருமாளின் ஒளிப்படக் கண்காட்சியைக் காண பெங்களூரூ வந்திருந்த பாகிஸ்தான் புகைப்படக் குழுவினர், தங்களுடைய அமைப்பின் கெளரவ உறுப்பினர் பதவியையும் அளித்து கௌரவித்தார்கள்.

Sanctuary Asia, FIP View Finder, பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் Hornbill உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

Photography Wildlife in India, Reminiscences of a Wildlife Photographer உள்ளிட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

Encounter in Forest, Some South Indian Butterflies என்ற இரு நூல்களுக்கு முதன்மை ஆசிரியராக இருந்துள்ளார்.

பெருமாள்: முக்கியக் குறிப்புகள்

- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்