மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பெரும் களையாக உருவெடுத்து வருகிறது ‘கப்பாபைகஸ் ஆல்வரேசி’ என்ற வெளிநாட்டு கடல்பாசி. கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமான பவளப் பாறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவரும் இந்த கடல்பாசிகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பவளப்பாறைகள்
இந்தியாவில் பவளப்பாறைகள் அதிகமுள்ள நான்கு முக்கிய பகுதிகளில் மன்னார் வளைகுடாவும் ஒன்று. இங்கு 21 தீவுகளைச் சுற்றி பவளப்பாறை படுகைகள் அமைந்துள்ளன. இப்பகுதி 1986-ம் ஆண்டு கடல் வாழ் உயிரினத் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. குழி மெல்லுடலிகள் எனப்படும் பவளப்பாறைகள், பல்வேறு கடல் வாழ் உயிரினங்களுக்கு முக்கிய உறைவிடமாகவும், உணவு மற்றும் இனப் பெருக்கத்துக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கின்றன. எனவே இவற்றை ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாரம்பரியமாக சார்ந்துள்ளனர்.
பல்வேறுபட்ட மனித செயல்பாடுகளால், 110 சதுர கி.மீ. பரப்பளவுக்கு இருந்த பவளப்பாறை பகுதியில் 30 சதுர கி.மீ. ஏற்கெனவே அழிந்துவிட்டது. பவளப்பாறையை தோண்டி எடுக்க தடை மற்றும் பவளப்பாறை மறு உருவேற்படுத்துதல் போன்ற செயல்பாடுகளால், 2005-ல் 37 சதவீதமாக இருந்த உயிர் பவளப்பாறையின் அளவு 2009-ல் 43 சதவீதமாக உயர்ந்தது. இவற்றைக் காக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்கும் வேளையில் இவற்றுக்கு புதிய ஆபத்து உருவாகியுள்ளது.
வெளிநாட்டு கடல்பாசியால் ஆபத்து
அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாகத் திகழும் இந்த பவளப் பாறைகளுக்கு, கடல்பாசி வடிவில் புதிய ஆபத்து வந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து, 1995-ல் கொண்டுவரப்பட்ட ‘கப்பாபைகஸ் ஆல்வரேசி’ எனப்படும் வளர்ப்பு கடல்பாசி, மன்னார் வளைகுடா தீவுப் பகுதி
களில் உள்ள பவளப் பாறைகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கின்றது. கெராஜின் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் தயாரிப்பதற்காக, கடலில் இந்தப் பாசியை தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் வளர்த்து வருகின்றன. இந்தப் பாசிகள், பவளப்பாறைகளின் மீது படர்ந்து, அவற்றை முற்றிலுமாக மூடி, ஒளிச்சேர்க்கை நடைபெறவிடாமல் தடுத்து உயிரோடு அழித்து விடுகின்றன.
முதல்முதலாக இந்த அபாயம் கடந்த 2008, அக்டோபர் மாதம் தெரியவந்தது. மன்னார் வளைகுடாவில் உள்ள சிங்கிள், குருசடை மற்றும் பூமரிச்சான் ஆகிய 3 தீவுகளில் உள்ள பவளப்பாறைகளை இந்த பாசிகள் ஆக்கிரமித்து அவற்றை உயிரிழக்கச் செய்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
தெற்கு பாக் வளைகுடா பகுதியில் இந்த பாசிகள் வளர்க்கப்படுவதால், மண்டபம் பகுதியில் 2 சதுர கி.மீ. பரப்பளவுக்கு பவளப்பாறைகளை, கப்பாபைகஸ் ஆல்வரேசி மூடி மறைத்துள்ளது. இந்த கடல்பாசி வேகமாக வளரக்கூடிய, ரப்பர் போன்ற சிகப்புப் பாசி வகையாகும். 15 முதல் 30 நாட்களில் இருமடங்காக வளரும் தன்மை கொண்டது. இது பவளப்பாறைகள் மீது படர்ந்து, அவற்றின் துளைகள், பிளவுகள் போன்றவற்றை அடைத்து விடுகின்றன. இதனால் பவளப்பாறைகளை நம்பி வாழும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆய்வுக்கு உத்தரவு
‘கப்பாபைகஸ் ஆல்வரேசி’யால் ஏற்படும் பாதிப்பு குறித்து கடல் ஆராய்ச்சியாளர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குரல் கொடுத்ததன் விளைவாக, மூன்றாண்டு கால விரிவான ஆய்வுக்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ. 24.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆய்வை, தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொள்கிறது.
முதல் கட்ட நிதி வரப்பெற்றதைத் தொடர்ந்து, செப்.1-ம் தேதி முதல் ஆய்வைத் தொடங்கியிருப்பதாக சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஜே.கே.பேட்டர்சன் எட்வர்டு தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்த ஆய்வை தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளோம். மன்னார் வளைகுடா கடல்வாழ் தேசிய பூங்காவில், கப்பாபைகஸ் ஆல்வரேசி பாசியால் பாதிக்கப்பட்டுள்ள பவளப்பாறை மற்றும் கடல் புல் படுகைகள் அடையாளம் காணப்பட்டு, பாதிப்பு குறித்து விரிவான சர்வே நடத்தப்படும்.
பவளப்பாறை மற்றும் கடல் புல்களில் எந்த வகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, எந்த நேரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது, எந்தப் பருவநிலையில் பாதிப்பு அதிகம், எந்த இனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன, இவைகளை சார்ந்து வாழும் மீன் இனங்கள், கடல் வாழ் உயிரினங்களில் எந்த வகையான பாதிப்புகளை அவை ஏற்படுத்தியுள்ளன என்பன குறித்து ஆய்வு நடத்தப்படும்.
கப்பாபைகஸ் ஆல்வரேசி கடல் பாசியைக் கட்டுப்படுத்துவது மற்றும் பவளப்பாறைகள், கடல் புல்களை பாதுகாப்பது குறித்த ஆலோசனைகள், திட்டங்களை ஆராய்ச்சி முடிவில் அரசுக்கு பரிந்துரை செய்வோம் என்றார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago
சிறப்புப் பக்கம்
9 days ago