மேள தாளம் முழங்கும், மணமக்களும் உறவினர்களும் ஃபிளெக்ஸ் பேனர்களில் சிரித்துக்கொண்டிருப்பார்கள், சீரியல் விளக்குகள் மினுமினுக்கும்… மணமக்களே ஏதோ ராஜா, ராணி போலத்தான் அன்றைக்கு மிதந்து வருவார்கள். ஆனால், சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு வித்தியாசமான திருமணம் நடைபெற்றது. ஒரு மணி நேரம்கூட இல்லை, இயற்கைக்கு நெருக்கமாகவும் எளிமையாகவும் அந்தத் திருமணம் இனிதே நடந்தேறியது.
மேல்மருவத்தூர் அருகேயுள்ள சித்தாம்பூரில் இயற்கை வேளாண்மை செய்துவரும் தினகர் ஸ்ரீ ப்ரணீத்தாவின் திருமணம்தான் அது. வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்த தினகர், கடைசியாக வந்து தஞ்சமடைந்தது இயற்கை வேளாண்மையிடம். “நமக்குத் தேவையான உணவை நாமே தயாரித்துக்கொள்ளலாமே என்ற எண்ணத்துடன்தான் இயற்கை வேளாண்மையில் ஈடுபட ஆரம்பித்தேன்” என்று சொல்லும் தினகர், கடந்த 3 ஆண்டுகளாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கரின் ஸீரோ பட்ஜெட் வேளாண் முறையைப் பின்பற்றிவருகிறார்.
அவசியமற்றதைக் குறைக்கலாமே!
“மூன்று வருடங்களுக்கு முன் என் தங்கையின் திருமணத்தை இயற்கை முறையில் சித்தாமூரில் நடத்தினோம். வந்திருந்த உறவினர்கள் அனைவரும் அதன் எளிமையையும், குறைந்த செலவையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப் பாராட்டினார்கள். என்னுடைய திருமணத்தை, அதைவிட மேம்பட்ட வகையில், இயற்கைக்கு இணக்கமாக நடத்த நினைத்தோம்.
திருமணம் என்பது இரண்டு பேர் ஒன்றுசேர்வதுதானே. பெற்றோர், உறவினரின் அங்கீகாரம்தான் இதற்கு அடிப்படை. ஆனால், ஒரு நாள் நடக்கும் திருமணத்தில் நம் கவுரவத்தை உயர்த்திக் காட்டுவதாக நினைத்துக்கொண்டு செயல்படுகிறோம். சாப்பாடு, மண்டபம், நகை எனப் பல்வேறு விஷயங்களுக்காக வாழ்க்கை முழுக்கச் சம்பாதித்துப் பணத்தை, ஒரே நாளில் விரயமாக்குகிறோம். திருமண ஏற்பாடுகளில் சின்னச் சின்ன அலைச்சலில் ஆரம்பித்து, பெரும்பாலான விஷயங்கள் அவசியமற்றவை. ஒரு இலை 500-1000 ரூபாய்க்கு ஏற்பாடு செய்து, பெருமளவு உணவை வீணாக்குவது இதற்கு நல்ல உதாரணம்.
இந்தியா முழுக்க நடைபெறும் திருமணங்களை எடுத்துக்கொண்டால், திருமணத்துக்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் செய்யும் செலவை வைத்துப் பல பட்ஜெட்களைப் போடலாம். தொடர்ந்துவரும் வழக்கம் என்பதற்காகவும், வீண் பெருமைக்காகவும் இப்படிச் செலவழிக்கிறோம். இதே பணத்தை ஆக்கபூர்வமாகவும் இயற்கையைப் பாதுகாக்கும் வகையிலும் செலவிட முடியும். நம்முடைய பாரம்பரியத்தில் சற்றே பின்னோக்கிப் போனால், விழாக்களை உத்தமமாக நடத்தியிருக்கிறார்கள். அந்த வகையில்தான் எங்கள் திருமணத்தை நடத்த நினைத்தோம்,” என்கிறார் தினகர்.
தியான ஆசிர்வாதம்
ஸ்ரீ ப்ரணீத்தாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தினகரைப் பற்றியும், இயற்கை வேளாண்மையில் அவருடைய ஈடுபாடு பற்றியும் அறிமுகம் உண்டு. திருமணத்தை எளிமையாக நடத்துவதை அவர்களும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள்.
இந்தத் திருமணத்தில் சடங்கு, சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்படவில்லை. விருந்தினர்களை அன்பரசன் வரவேற்க, மணமக்கள் திருமண ஒப்புதலை அளித்த பிறகு, பதிவேட்டில் கையெழுத்திட்டனர். பிறகு விருந்தினர்கள் ஒன்றுகூடி, ‘வாழ்க வளமுடன்’ என்று மணமக்களை வாழ்த்தினர். பிறகு, மணமக்களும் விருந்தினர்களும் குரு மகரிஷி வழியில் ஐந்து நிமிடம் தியானம் செய்ய, திருமணம் இனிதே முடிந்தது.
ஆரோக்கிய உணவு
வந்திருந்த 400-க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்களுக்கு இந்தத் திருமணம் முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. பலரும், இது போன்ற திருமணத்தைப் பார்த்ததேயில்லை. திருமணம் என்பது இவ்வளவு எளிதாக நடத்தக்கூடிய விஷயமா என்று ஆச்சரியப்பட்டார்கள்.
விருந்தினர்களுக்குச் சுவையான, ஆரோக்கியமான உணவைக் கொடுக்க வேண்டுமென தினகர் நினைத்ததால், எல்லாப் பொருட்களுமே இயற்கை வேளாண் பொருட்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சமைக்கப்பட்டன. டால்டாவுக்குப் பதிலாக நாட்டுப்பசு நெய், தினைப் பாயசம் என ஒவ்வொரு உணவு வகையும் பார்த்துப் பார்த்துத் தயாரிக்கப்பட்டது. இந்தத் திருமணத்தின் மொத்தச் செலவு ரூபாய் ஒரு லட்சத்துக்கும் குறைவு. அதில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு உணவுக்காக மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது.
இயற்கை வேளாண் சந்தை
திருமணம் முடிந்தவுடன், அதே அரங்கில் இன்னொரு விழா தொடர்ச்சியாக நடைபெற ஆரம்பித்தது. பாதுகாப்புக்கான உணவுக் கூட்டமைப்பு, சென்னை ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்கெட் இணைந்து ‘இயற்கை வேளாண் திருவிழா’வை திருமணத்தின் ஒரு பகுதியாக நடத்தினர்.
கேழ்வரகுக் கூழ், பருத்திப் பால், இயற்கை வேளாண்மையில் விளைந்த பழங்கள், மூலிகை சோப்பு, பல்பொடி, பருத்தி ஆடைகள் மற்றும் பல இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இயற்கை உணவுப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வும் ஆரோக்கியத் தகவல்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
“வழக்கமான திருமணங்களில் செலவு, கழிவு ரெண்டுமே அதிகம். நேரம், ஆற்றல், மின்சாரம், உணவு மற்றும் எண்ணற்ற வளங்கள் அதில் வீணாகின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம், நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இந்த எளிமையான திருமணம் மூலம் அவற்றைப் பாதுகாக்கவும், இயற்கை வேளாண் விளைபொருள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று சேர்ந்து சொல்கிறார்கள் புதுமணத் தம்பதியான தினகர்- ப்ரணீத்தா.
ஒவ்வொன்றிலும் ஒரு வித்தியாசம்
# திருமண விழாவில் மேடையோ, ஃபிளெக்ஸ் பேனர்களோ இல்லை. பருத்தித் துணியால் செய்யப்பட்ட பதாகையில், ’தினகர் ப்ரணீத்தா இல்லற ஏற்பு விழா’ என்று எளிமையாகக் கையில் எழுதப்பட்டிருந்தது.
# பட்டுப்பூச்சிகளைக் கொன்று தயாரிக்கப்படுவதால், இந்தத் திருமணத்தில் பட்டு ஆடைகள் தவிர்க்கப்பட்டன. பருத்தி ஆடைகளே மணமக்களை அலங்கரித்தன.
# வந்திருந்தவர்களுக்குக் குளிர்பானங்களுக்குப் பதிலாக, மண்பானையில் சேமிக்கப்பட்ட குளிர்ந்த தண்ணீர் வழங்கப்பட்டது.
# அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விருப்பமுள்ளவர்கள் இயன்ற நன்கொடையை அளித்தும் மரக்கன்றுகளைப் பெற்றுச் சென்றனர்.
தினகர் தொடர்புக்கு: 99415 76080
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago