நம்முடைய உணவும் உழவும் களவு போய் நவீன மருத்துவத்திலும் நவீன விவசாயத்திலும் நம்முடைய உடலும் மண்ணும் சிக்கிக்கொண்டுவிட்டன. இந்த நிலையில் உடலையும் மண்ணையும் மீட்டெடுப்பதற்கான சிறந்த வழி இயற்கை வேளாண் முறைக்குத் திரும்புதல். இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் இந்த மீட்டெடுப்பை வேகமாகச் செய்யும். இயற்கை வேளாண் முறையை உழவர்களிடமும் மக்களிடமும் பிரபலப்படுத்தும் முயற்சிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துவருகின்றன. சென்னை மட்டுமில்லாமல் சிறு நகரங்களிலும் இதுபோன்ற கண்காட்சிகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் பிரபலமடைந்துவருகின்றன.
அந்த வகையில் திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் ஆடிப் பட்டம் தேடி விதை' என்ற பெயரில் இயற்கை உணவு, பாரம்பரிய நாட்டு விதைத் திருவிழா, கருத்தரங்கம், கண்காட்சி ஆகியவற்றை பசுமை சிகரம், சகஜ சம்ருதா, நபார்டு ரூரல் மார்ட், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு ஆகியவை கடந்த வாரம் ஒருங்கிணைத்திருந்தன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டுவந்தாலும், இந்த முறை விவசாயிகள் மட்டுமல்லாமல், ஏராளமான பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் அதிக அளவில் வந்திருந்தனர். பாதுகாப்பான உணவின் மீது அவர்களுக்கு இருந்த அக்கறையைப் புரிந்துகொள்ள முடிந்தது.
இயற்கையின் குவியல்
பாதுகாப்பான உணவு குறித்து அனந்து, நன்மை செய்யும் பூச்சிகள் குறித்து பூச்சியியல் வல்லுநர் நீ. செல்வம், பஞ்சகவ்யம் குறித்து மருத்துவர் கொடுமுடி நடராஜன், பாரம்பரிய நெல் ரகங்களின் பயன்கள் குறித்து நெல் ஜெயராமன், கால்நடைகளுக்கு இயற்கை மருத்துவ முறைகள் குறித்து பேராசிரியர் ந. புண்ணியமூர்த்தி, கால்நடை மருத்துவர் காசிபிச்சை, நாட்டு மாடுகளின் மகத்துவம் குறித்து முகுந்தன் என இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கான பல்வேறு வழிமுறைகளைக் கருத்தரங்கில் நிபுணர்கள் பகிர்ந்துகொண்டனர்.
கருத்தரங்கம் அறிவுக்குத் திருப்தியான விருந்தளித்தது போலவே, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட காய்கறி, பழ வகை விதைகள், சிறுதானிய உணவுப் பொருட்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை, சித்தா முறையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு மருந்துகள், மூலிகை, பழவகை மரக்கன்றுகள் என்று மக்கள் மன்ற வளாகம் முழுவதும் இயற்கைப் பொருட்களால் நிறைந்து காணப்பட்டது.
புதுமையான செடிப்பை
உடலுக்குத் தீங்கில்லாத சிறுதானியங்களைச் சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே பரவலாகியுள்ளது. அதேநேரம், சிறுதானியங்களை எப்படிச் சமைப்பது, என்ன சேர்த்தால் சுவையாக இருக்கும் என்று பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் உள்ளன. இந்த சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பது போல் அமைந்திருந்தது ஓர் அரங்கம்.
அது புதுக்கோட்டை ‘குடும்பம் அமைப்'பின் சிறுதானிய உணவு அரங்கம். வாழைத்தண்டு, முருங்கை, மணத்தக்காளி சூப் வகைகள், சாமை தயிர்ச்சோறு, குதிரைவாலி சாம்பார் சோறு, தினைப் பாயசம், கம்மங்கூழ், வாழைப்பூ படை, வரகு பிரியாணி, கேழ்வரகுக் கொழுக்கட்டை, மூலிகை தோசை என வாய்க்கு ருசியும் உடலுக்கு ஊட்டமும் அளிக்கக்கூடிய உணவு ரகங்களின் சுவையில் மக்கள் மயங்கி சாப்பிட்டனர். “குடும்பம் அமைப்பு உணவு தயாரித்து வழங்குவது மட்டுமில்லாமல், சிறுதானிய சமையலைப் பல இடங்களில் கற்றுத்தந்திருக்கிறோம். நஞ்சற்ற உணவு குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகக் கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சியளித்து, இயற்கை உணவைப் பரிமாறிவருகிறோம். இயற்கை முறை வேளாண்மை, சிறுதானிய சாகுபடி குறித்து உழவர்களுக்குத் தொடர்ச்சியாகப் பயிற்சியளித்து வருகிறோம்" என்கிறார் குடும்பம் அமைப்பின் இயக்குநர் ஆஸ்வால்டு குவின்டால்.
விழாவில் பேசுகிறார் கொடுமுடி டாக்டர் நடராஜன். உடன் (இடமிருந்து) நமது நெல்லை காப்போம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன், இயற்கை ஆர்வலர்கள் அன்பு சுந்தரானந்த சுவாமிகள், மரம் கருணாநிதி. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
பாரம்பரிய தாவர விதைகள்
மற்றொருபுறம், இந்த உணவை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணமாக இருக்கும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி, பழங்கள், சிறுதானிய விதைகளின் விற்பனை ‘பசுமை சிகரம்' அமைப்பு சார்பில் அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அகத்திக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, சிவப்புத் தண்டுக்கீரை, பச்சைத் தண்டுக்கீரை, பருப்புக்கீரை, பாலக்கீரை, பச்சை புளிச்சக்கீரை, சிவப்பு புளிச்சக்கீரை, மணத்தக்காளிக் கீரை, முருங்கை, கொத்தமல்லி, வெந்தயம் என கீரைகளில் மட்டும் கணக்கில்லா ரகங்களின் விதைகள். செடி வகை, கொடி வகை என இரண்டு விதமான காய்கறி விதைகள் என ஏராளமான வீட்டுத் தோட்ட விதைகள் விற்பனை செய்யப்பட்டன. ஒரு பொட்டலம் விலை ரூ.10 மட்டுமே.
கண்காட்சியில் பார்வையிட்ட பொதுமக்கள்
"வேதி உரம், வேதி மேல்பூச்சு எதுவும் இல்லாமல், இயற்கை உரங்கள் மூலம் வளர்க்கப்பட்ட செடிகளிலிருந்து இந்த விதைகள் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. நல்ல முளைப்புத் திறன் கொண்டவை. இந்த விதைகள், அந்தந்த செடிகளுக்கே உரிய தனித்தன்மையுடன் இருக்கும். இவற்றில் வளரும் காய்கறிகள், பழங்கள் மிகவும் சுவையாக இருக்கும். வீரிய விதைகளுக்கு மாறாக, இந்த செடிகளிலிருந்து விதையை எடுத்து வைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடிவதுதான் இவற்றின் கூடுதல் சிறப்பு" என்கிறார் பசுமை சிகரம் அமைப்பின் யோகநாதன்.
மாடித் தோட்ட ஆர்வம்
இதேபோன்று வீடுகளில் மாடித் தோட்டம் அமைப்பதற்கான ‘க்ரோ பேக்' எனும் செடிப்பை மற்றும் இயற்கை உரங்கள் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றன. நவநாகரிகமாக கோன் வடிவில் சிறிய செடிகளை வளர்க்கும் வகையிலான செடிப்பைப் புதுமையாக இருந்தது. மாடித் தோட்டம் போட ஆர்வமாக இருந்தவர்களுக்கு விதை, செடிப்பை அரங்குகள் பயனுள்ளதாக அமைந்திருந்தன.
இப்படியாக இயற்கை வேளாண் விளைபொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு பரவலாகிவரும் நிலையில், அதற்கான எதிர்பார்ப்பும் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சி போன்ற இடைநிலை நகரங்களில் மக்களின் புரிதலை மேம்படுத்தவும் தேவையை நிறைவு செய்யவும், இதுபோன்ற கண்காட்சிகள் பெருமளவு உதவும் என்பதில் சந்தேகமில்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago