கடல். சிலருக்கு ஆச்சரியம். சிலருக்கு அழகு. சிலருக்குக் கவிதை. மீனவர்களுக்குத் தாய்மடி. சமயங்களில் சமாதி! இன்று அப்படித்தான் இருக்கிறது சென்னை கடல்.
மனிதர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரமான குற்றங்களை அறிந்திருப்போம். ஆனால் ஒருவரின் வாழ்வாதாரத்தை முற்றிலும் எரித்து, அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாகடிக்கும் குற்றத்தை நீங்கள் எங்காவது கண்டதுண்டா? எண்ணூர் கடல் பகுதியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தற்சமயம் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதி எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு இரண்டு வாரங்களாகிவிட்டன. சுமார் 20 மெட்ரிக் டன் எண்ணெய் கசிந்திருக்கலாம் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையான அளவு இன்னும் அதிகமாகக்கூட இருக்கலாம். ஊடகங்களில் சமீபமாக வெளிவந்த அறிக்கைகளைப் பார்த்தால் 70 மெட்ரிக் டன்வரை எண்ணெய் கசிந்திருக்கலாம் என்று அறிய முடிகிறது. இதுவரை, அகற்றப்பட்ட கசிவின் அளவு சுமார் 600 டன் முதல் 800 டன் மட்டுமே. கடலில் கசிந்த எண்ணெயின் அளவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெறும் 10 சதவீதத்துக்கும் குறைவான அளவே அகற்றப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அருகிலிருக்கும் காமராஜர் துறைமுக நிர்வாகம், இந்தியக் கடலோரக் காவல் படை உள்ளிட்ட அரசு அமைப்புகள் அளிக்கும் மேலோட்டமான தகவல்கள் இவைதான். அவை இதுவரை சொல்லாத சில உண்மைகளும் இருக்கின்றன.
தவறு, தாமதம், தூரம்...
தமிழகத்தின் ஒட்டுமொத்த கடற்கரையின் நீளம் 1,076 கிலோமீட்டர். இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் கடற்கரை நீளம் மட்டும் 134 கிலோமீட்டர். எண்ணெய்க் கசிவுப் பிரச்சினையில் இந்தக் கிலோமீட்டர் கணக்கைக் குறிப்பிடுவது முக்கியமாகிறது.
விபத்து ஏற்பட்டது எண்ணூர் கடல் பகுதி. ஆனால், அங்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்கிறார்கள் மீனவர்கள். அங்குக் கசிந்த எண்ணெய், காற்றின் வேகத்தாலும் கடல் அலையின் வேகத்தாலும் திசை மாறி நகர்ந்து பாரதி நகரை அடைந்திருக்கிறது. தற்போது எண்ணெய்க் கசிவை அகற்றும் பணிகள் அந்த இடத்தில்தான் நடைபெற்று வருகின்றன. எண்ணூரிலிருந்து பாரதி நகருக்கு இடையேயான தூரம், சராசரியாக 2 கிலோமீட்டர். இந்த இடைப்பட்ட தூரத்தில் மீனவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால், இந்த எண்ணெய்க் கசிவு கொஞ்சம் கொஞ்சமாக மெரினா, எலியட்ஸ் (பெசன்ட் நகர்), நீலாங்கரை பகுதிவரை பரவியது. இதுவரை, சுமார் 52 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தக் கசிவு பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபோன்ற கசிவுகளின்போது, எவ்வளவு விரைவாகச் செயலாற்றுகிறோமோ அந்த அளவுக்குக் கசிவின் பரவலைத் தடுக்க முடியும். ஆனால், விபத்து நடந்து ஒன்றரை நாட்களுக்குப் பிறகே கசிவு ஏற்பட்டுள்ளது முதன்முறையாகக் கவனிக்கப்பட்டது. இந்தக் காலதாமதம் இந்தப் பிரச்சினையில் நிகழ்ந்த முதல், மாபெரும் தவறு. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், 52 கிலோமீட்டர் தொலைவு என்பதைக் குறைந்தபட்சம் 20 கிலோமீட்டர் தொலைவுக்காவது கட்டுப்படுத்தியிருக்க முடியும்.
மாசுபாட்டின் ஆழம் என்ன?
'இரண்டு வாரங்களில் 52 கிலோமீட்டர் தூரம்தானே' என்று நாம் சாதாரணமாக நினைக்கலாம். இந்தத் தூரத்தை நிலத்துடன், அதாவது சாலையுடன் ஒப்பிட்டால் மிகவும் சாதாரணமாகத்தான் தோன்றும். ஆனால், கடல் வேறு ஒரு சூழலியல் பகுதி. நமக்குத் தெரிவது அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தனித்தனிக் கசிவுப் படலங்கள். ஆனால், அந்தக் கசிவு எவ்வளவு ஆழத்துக்கு மாசுபடுத்தி இருக்கிறது என்பதை நம் கண்களால் கணிக்க முடியாது. சுமார் 52 கிலோமீட்டர் தொலைவு முழுக்க, ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு ஆழத்துக்கு இந்தக் கசிவு-மாசுபாடு கடல் நீருடன் கலந்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், கடல் எவ்வளவு மோசமாக மாசுபட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
முறையான பயிற்சியும் இல்லாமல், தேவையான கருவிகளும் இல்லாமல், போதுமான ஆட்களும் இல்லாமல் ஆமை வேகத்தில் கடலைச் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதைப் பார்த்தால், சென்னை-காஞ்சி-திருவள்ளூர் மாவட்டங்களில் மீதமிருக்கிற 82 கிலோமீட்டர் தொலைவும் விரைவில் எண்ணெய்க் கசிவுப் படலத்தைச் சுமந்திருக்கும் என்றே தோன்றுகிறது.
கல்பாக்கம் கடற்கரைப் பகுதியை இந்தப் பிரச்சினை இன்னும் சென்றடையவில்லை. ஆனால், அங்குப் பிடிக்கப்படும் மீன்களை வாங்கக்கூட ஆட்கள் இல்லை. எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் விளைவு, செங்கல்பட்டு மீன் சந்தைவரை எதிரொலித்திருக்கிறது என்பதுதான் இதன் மூலம் நாம் அறிய வேண்டிய செய்தி.
சூழலியல் பாதிப்புகள் என்ன?
அது மட்டுமல்லாமல், 'வெறும் எண்ணெய்க் கசிவு' என்று நாம் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. ஏனெனில் கடலில் கசிந்திருப்பது கச்சா எண்ணெய். அதில் என்னென்ன ரசாயனப் பொருட்கள் இருக்கின்றன என்பதைக் கப்பல் நிறுவனங்களோ, துறைமுக நிறுவனங்களோ இதுவரை தெளிவாக்கவில்லை.
கடலில் கசிவது மட்டுமே பிரச்சினையில்லை. அந்தக் கசிவு கரையில் ஒதுங்கிக் கடற்கரை மணலுடன் கலப்பதும் பிரச்சினைதான். அந்தக் கசிவு பாறைகளில் படிவதும் பிரச்சினைதான். கசிந்த எண்ணெய் சூரிய ஒளி பட்டு ஆவியாகும்போது, எண்ணெயில் உள்ள மூலக்கூறுகள் சிதையும். இதுவும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டுவரும்.
எப்படி? கடலில் மிதக்கும் எண்ணெய்ப் படலத்தால், ஓங்கில் போன்றவை கடல்வாழ் பாலூட்டிகள் மேற்பரப்புக்கு வந்து மூச்சுவிட முடியாமல் இறந்து போகலாம். எண்ணெய்க் கசிவு, கடற்கரை மணலுடன் கலந்தால், முட்டையிட வரும் பங்குனி ஆமைகளின் மீது படியும். அவை ஆமைகளின் சிறுநீரகங்களைத் தாக்கி, அவற்றை உயிரிழக்கச் செய்யும். ஆவியாகும் எண்ணெயிலிருந்து சிதையும் மூலக்கூறுகளால், கடலில் உள்ள நுண்ணுயிர்களும் அழிவைச் சந்திக்கும். அந்த நுண்ணுயிர்களை உண்ணும் மீன்களும் இறக்கலாம்.
அந்த மீன்களை உண்ணும் கடல் பறவைகளும் இறந்து போகலாம். பாறையில் படிந்திருக்கும் கசிவுகள் நீண்ட காலத்துக்குப் பாதிப்புகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும். கடலில் இவ்வளவு மோசமாகக் கசிந்த எண்ணெயைப் பற்றியே பெரிதாக அக்கறை காட்டாத அரசும் நிர்வாக அமைப்புகளும், பாறைகளில் படியும் எண்ணெய் பற்றியா கவலைகொள்ளப் போகிறார்கள்?
எங்கே போனது பீட்டா?
எலியட்ஸ் கடற்கரை தொடங்கி நீலாங்கரைவரை பங்குனி ஆமைகள் வருடா வருடம் அதிக எண்ணிக்கையில் முட்டையிட வருகின்றன. அதையொட்டி, அந்தப் பகுதிகளில் கரை ஒதுங்கிய எண்ணெய்க் கசிவுப் படலங்கள் துரிதமாக அகற்றப்பட்டுவிட்டன. பல வருடங்களாக அந்தப் பகுதியில் ஆமைகளின் முட்டைகளைப் பாதுகாத்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் அந்தப் பகுதி பங்குனி ஆமைகள் வரும் முக்கியமான இடமாக ஒரு தோற்றத்தைப் பெற்றிருக்கிறது.
ஆமைகளைக் காப்பாற்றும் பணியில் இது ஒரு முக்கிய அம்சம். ஆனால், கடலில் உள்ள அத்தனை ஆமைகளும் எலியட்ஸ் கடற்கரைக்கு மட்டும்தான் வரும் என்று சொல்ல முடியாதே. சுமார் 134 கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் கடற்கரையில், எங்கு வேண்டுமானாலும் ஆமை வரலாம், இல்லையா? அவற்றின் பாதுகாப்பு சாதாரண நாட்களிலேயே கேள்விக்குறிதான். அப்படியிருக்கும்போது, இப்படிப்பட்ட மோசமான எண்ணெய்க் கசிவின்போது அவற்றின் நிலை பற்றி அதிகம் கூற வேண்டியதில்லை.
இதுபோக மீனவர்கள் கூறும் தகவல்கள் அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. பொதுவாகத் தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களை 'கரை வரும் நாள்' என்றழைக்கிறார்கள் மீனவர்கள். ஏனென்றால், இந்த மாதங்களில்தான் ஆழ்கடலில் இருக்கும் மீன்கள், ஆமைகள் போன்றவை இனப்பெருக்கம் செய்யக் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு வரும். அப்போது அதிகளவு மீன்கள் பிடிக்கப்படும். இந்த நேரத்தில் இப்படி ஒரு விபத்து நேர்ந்திருப்பது மீனவர்களின் வயிற்றில் அமிலத்தை ஊற்றியிருக்கிறது. அதோடு, கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது.
'கரப்பான்பூச்சி உட்பட எல்லா உயிரினங்களுக்காகவும் நாங்கள் போராடுவோம்' என்று முந்தைய வாரம்வரை மார்தட்டிய 'பீட்டா' உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள், தற்சமயம் ஏன் வாய்மூடி இருக்கின்றன? இதைப் பற்றி இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை. ஒருவேளை அவர்களைப் பொறுத்தவரையில் மீன்களும் ஆமைகளும் உயிரினங்கள் இல்லை போலிருக்கிறது.
முன்னேற்பாடு உண்டா?
கடலில் கலந்த கசிவை அகற்ற நம்மிடையே போதுமான தொழில்நுட்ப ஆதாரங்கள் இல்லை என்பதால், சுத்தப்படுத்தப்படும் பணிகள் இப்படி மெத்தனமாக நடக்கின்றனவா? வாளிதான் நமக்கான நவீனத் தொழில்நுட்பமா?
நிச்சயமாக இல்லை! காமராஜர் துறைமுகத்திலேயே 'எண்ணெய்க் கசிவு கட்டுப்பாட்டு படை' (ஆயில் ஸ்பில் ரெஸ்பான்ஸ் டீம்) என்று ஒரு பிரிவு இருக்கிறது. அது ஏன் இன்னும் களத்துக்கு வரவில்லை? இந்தியக் கடலோரக் காவல் படையின் கீழ் இயங்கும், மாசுக் கட்டுப்பாட்டு கப்பல்களான ‘சமுத்ரா ப்ரஹாரி', ‘சமுத்ரா பஹரேதார்', ‘சமுத்ரா பவக்' ஆகியவை ஏன் துணைக்கு அழைக்கப்படவில்லை?
சுமார் 36 எண்ணெய் நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கிய 'ஆயில் ஸ்பில் ரெஸ்பான்ஸ் லிமிடெட்' எனும் தொண்டு நிறுவனம், பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. உலகில் எங்கு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டாலும், இவர்களை உதவிக்கு அழைக்கலாம். இவர்கள் ஏன் அணுகப்படவில்லை? 2010-ம் ஆண்டு மும்பையில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவின்போது இந்த நிறுவனம் உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கும் மேலாக, ஒவ்வோர் ஆண்டும் ‘ஆயில் ஸ்பில் இந்தியா' எனும் அமைப்பு எண்ணெய்க் கசிவின்போது எப்படிச் செயலாற்ற வேண்டும், கசிவுகளைச் சுத்தப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய கருவிகள், அதிகளவு கசிவு பரவாமல் தடுக்க எவ்வாறெல்லாம் முன்தயாரிப்புடன் இருக்க வேண்டும் என்று மாநாடுகள், கண்காட்சிகள் போன்றவற்றை நடத்துகிறது. அந்த நிகழ்ச்சிகளில் கப்பல்துறை சார்ந்த பல வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆய்வாளர்கள், கப்பல் படை, எண்ணெய் நிறுவனங்கள் போன்ற பல தரப்பினர் கலந்துகொள்வார்கள். இதுபோன்ற அமைப்புகளிடம் ஏன் உதவி கோரப்படவில்லை?
எண்ணெய்க் கசிவை வேதியியல் முறைகள் மூலமாகவோ அல்லது உயிரியல் முறைகள் மூலமாகவோ சுத்தப்படுத்த முடியும். வேதியியல் முறைகளைப் பின்பற்றினால், அதில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் பின்விளைவுகள் ஏற்படலாம். எனவே பாக்டீரியா போன்றவற்றைப் பயன்படுத்திச் சுத்தப்படுத்தப்படும் உயிரியல் முறைகளைப் பின்பற்றலாம். அதற்கான தொழில்நுட்பத்தை டெல்லியைச் சேர்ந்த ‘டெரி' எனப்படும் ‘தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட்' நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதைப் பரவலாகப் பயன்படுத்துவதில் என்ன தயக்கம்?
பிரச்சினையா, பேரிடரா..?
‘சர்வதேசப் பெட்ரோலியத் துறைசார் சூழலியல் பாதுகாப்புச் சங்கம்' எனும் அமைப்பு, எண்ணெய்க் கசிவுகளை மூன்று அடுக்குகளாக வகைப்படுத்துகிறது. அதன்படி, சுமார் 7 டன் வரையிலான எண்ணெய்க் கசிவு முதல் அடுக்காகவும், 7 முதல் 700 டன் வரையிலான கசிவு இரண்டாவது அடுக்காகவும், 700 டன்னுக்கு மேற்பட்ட கசிவு மூன்றாவது அடுக்காகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எண்ணூர் பகுதியில் நடந்திருப்பது இரண்டாவது அடுக்குக் கசிவு. இந்த வகைப்பாட்டை அடிப்படையாக வைத்து ‘தேசிய எண்ணெய்க் கசிவுப் பேரிடர் திட்டம்' ஒன்று 1988-ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் 1996-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் இன்றுவரை தொடர்கிறது.
அந்தத் திட்டத்தில் கூறியுள்ள விதிமுறைகள் எண்ணூர் எண்ணெய்க் கசிவுப் பிரச்சினையில் ஏன் பின்பற்றப்படவில்லை என்பதைப் பற்றி யோசித்தால், ஒன்று புரியும். அது, நம் அரசுகள் ஒரு பேரிடரை, பேரிடர் என்று முதலில் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. இந்த எண்ணெய்க் கசிவைக்கூட ஒரு சாதாரணப் பிரச்சினையாகத்தான் நம் அரசு பார்க்கிறதே தவிர, பேரிடராகக் கருதுவதில்லை.
அது மட்டுமல்லாமல், ‘இவ்வளவு தூரத்துக்கு இவ்வளவு டன் எண்ணெய்தான் கசிந்திருக்கிறது' என்று அறிவித்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடுவதில்லை. அரசும் நிர்வாகமும் பிரச்சினையின் பின்விளைவாக ஏற்படும் உண்மைகளை ஒப்புக்கொள்வதற்கும் முன்வர வேண்டும். தவறுகளை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். தீர்வுக்கான முதல்படி அது மட்டுமே. அதுவரை இந்தக் கடல் எரிந்துகொண்டேதான் இருக்கும்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago