நீர் மறுசுழற்சி முறையை செயல்படுத்தினால் சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு : வழிகாட்டுகிறது அமெரிக்காவின் ஆரஞ்ச் கவுன்டி நகரம்

By டி.செல்வகுமார்

‘நீர்மறுசுழற்சி’ முறை என்ற அதி நவீன தொழில்நுட்பம் மூலம் சென்னை நகரின் குடிநீர் பிரச் சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இதற்கு வழிகாட்டுகிறது அமெரிக்காவின் ஆரஞ்ச் கவுன்டி நகரம். அமெரிக்காவின் கலிபோர் னியா மாகாணத்தில் வறண்ட பூமியாக இருந்த ஆரஞ்ச் கவுன்டி நகரம், நீர்மறுசுழற்சி திட்டத்தின் மூலம் இன்றைக்கு வளமான பூமியாக மாற்றப்பட்டு இருக்கிறது.

அங்கு கடந்த 40 ஆண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடு என்ற பேச்சு எழவில்லை. சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் தேவையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்கின் றனர் நிபுணர்கள்.

ரீ சார்ஜ் ஆகும் தண்ணீர்

ஆரஞ்ச் கவுன்டி நகரத்தில் நீர் மறுசுழற்சி திட்டத்தின் மூலம் கழிவுநீர் முழுவதும், குடிநீர் தரத்துக்கு முழுமையாக சுத்திகரிக் கப்பட்டு கடலோரப் பகுதிகளில் குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் வழியாக நிலத்தடி நீரில் கலக்கப்படுகிறது. அவ்வாறு கலப்பதால் தண்ணீர் ‘ரீசார்ஜ்’ ஆகி நாலாபக்கமும் பரவி இயற்கையாக சுத்தமாகிறது.

அதனால் கடல்நீர் ஊருக்குள் புகுவது முற்றிலுமாகத் தடுக்கப் படுவதுடன், அந்த நகரத்தின் ஆழ்துளை கிணறுகளுக்கு சிறந்த நீர் ஆதாரமாகவும் அமைகிறது.

மாநகர அமைப்பை ஆரஞ்ச் கவுன்டி நகரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நீர் மறுசுழற்சி திட்டம் சென்னையிலும் சாத்தியம்தான் என்கிறார் சென்னை குடிநீர் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநரும், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கழிவு நீர் சுத்தீகரிப்புத் துறை நிபுணருமான எஸ்.சுந்தரமூர்த்தி கூறியதாவது:

மக்கள் தொகைப் பெருக்கத்தால் 18-க்கும் மேற்பட்ட ஏரிகளை விழுங்கி சென்னை மாநகர் உருவாகியுள்ளது. நகரின் விரிவாக்கத்தால் போரூர், அம்பத்தூர் போன்ற ஏரிகளும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. ஒருபக்கம் நகர்மயமாதலால் நீர் ஆதாரங்கள் காணாமல் போகின்றன.

மறுபக்கம் ஆண்டுதோறும் மழைப்பொழிவு குறைவதால் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது.

உப்பு நீரான குடிநீர்

நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சுவதால் சென்னை கடலோரமாக கடல் நீர் ஊடுருவி, பல பகுதிகளில் தண்ணீர் உப்புநீராக மாறிவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு அடையாறு, ராயபுரம், திருவல்லிக்கேணி, சாந்தோம், மயிலாப்பூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கிணற்று நீரையே குடிக்க, சமைக்க, குளிக்க என அனைத்துக்கும் பயன்படுத்தினர். இன்றைக்கு பயன்படுத்தவே முடியாத அளவுக்கு கிணற்று நீர் உப்பாகிவிட்டது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 91 சென்டி மீட்டரும், சென்னையில் 130 சென்டி மீட்டரும் மழை பெய்கிறது. நகரில் ஒரு நபருக்கு 140 லிட்டர் தண்ணீர் தர வேண்டும் என்பது அரசு விதி.

குளிக்க 30 லிட்டர், துணி துவைக்க 45 லிட்டர், பாத்திரம் கழுவுதல் உள்ளிட்ட வீட்டு உபயோகத்துக்கு 25 லிட்டர் என ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 100 லிட்டர் தேவைப்படும். சென்னையில் நபருக்கு 80 லிட்டர் கொடுப்பதே பெரும்பாடாக இருக்கிறது.

நபருக்கு 250 லிட்டர்

ஆரஞ்ச் கவுன்டி நகரம், நீர் மறுசுழற்சி திட்டம் மூலம் நபருக்கு தினமும் 250 லிட்டர் வரை தண்ணீர் தருகிறது. அங்கு ஆண்டுக்கு சராசரியாக 60 சென்டி மீட்டர்தான் மழை பெய்கிறது.

இருந்தாலும் நீர் மறுசுழற்சி திட்டத்தால் 250 லிட்டர் வரை தர முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

சென்னையில் பல்வேறு நீர் ஆதாரங்கள் மூலம் தினமும் 760 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. அந்த நீரை பயன்பாட்டுக்குப் பிறகு கழிவுநீராக்கி அடையாறு, கூவம், பக்கிங்காம், ஓட்டேரி கால்வாய்களில் கலக்கிறோம். இவ்வாறு வீணாகும் கழிவுநீரை, முழுமையாகச் சுத்திகரித்துப் பயன்படுத்தினால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு என்ற நிலையே இருக்காது என்பது மட்டுமல்ல, உபரி நீரும் கிடைக்கும்.

இத்திட்டத்தை செயல்படுத்த நியாயமான செலவும், 10 ஆண்டு காலமும் ஆகும். வரும்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது இன்னும் மோசமாகிவிடும். அதற்கு இந்த திட்டம் மட்டுமே நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

இவ்வாறு சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.

சென்னையில் பெருகி வரும் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையோடு நீர் மறுசுழற்சி திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற முன்வந்தால் தமிழகமும் மற்றொரு ஆரஞ்ச் கவுன்டியாக மாறுவது நிச்சயம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE