சென்னை அருகே திருவள்ளூர் - மீஞ்சூரில் செயல்படும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய நன்னீராக்கல் நிறுவனம் இது. அடுத்த பெரிய நிறுவனம், நெம்மேலியில் இயங்கும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம். தண்ணீர் பற்றாகுறையால் கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்துவது என்பது காலத்தின் கட்டாயம்.
சரி, உண்மையிலேயே கடல் நீர் சுத்திகரிப்பு என்பது சரி தானா? அதனால் விளையும் தீமைகள் என்னென்ன? என்பது குறித்து இதுவரை பெரியதாக பேசப்படாத நிலையில் அதுகுறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் சூழலியாளர்கள்.
குப்பைத் தொட்டியல்ல கடல்
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான நித்தியானந்த் ஜெயராம் கூறுகையில், "நன்னீராக்கலுக்கு உலகு எங்கும் பரவலாக மாற்றுச் சவ்வூடு பரவல் மற்றும் காய்ச்சி வடித்தல் முறைகளே பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக கடல் நீர் சுத்திகரிப்பு என்பது வரவு எட்டணா செலவு பத்தணா கதைதான். ஆனால், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளுக்கு கணக்கு பார்க்கக் கூடாது என்பதால் அந்த விமர்சனத்தைத் தவிர்த்துவிடலாம். கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், அதில் மனிதனுக்கு நன்மை செய்யும் எந்தக் கனிமங்களும் நுண்ணுயிர்களும் இல்லை. எனவே, அந்தத் தண்ணீரை குடிப்பதால் பாதிப்பு ஏற்படுமா என்பது தெரியாவிட்டாலும் அதனால் உடலுக்கு எந்த நன்மையும் கிடையாது.
அடுத்து சுற்றுச்சூழல் பாதிப்பு. பொதுவாக நம் அரசுகள் கடலை குப்பைத் தொட்டியாகவே கருதுகின்றன. கடல் என்பது ரசாயனக் கழிவுகளைக் கொட்டுவதற்கான களம்அல்ல. கடல் உலகின் வாழ்வாதாரம். திமிங்கலம் தொடங்கி கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் வரை வாழும் உயிர்களின் வாழ்விடம். அந்த உயிர்கள் அத்தனையும் நமக்கு முக்கியம். அவை ஒவ்வொன்றும் உலகின் பல்லுயிர் சமநிலையைக் காக்கும், கோக்கும் கண்ணிகள். ஒன்று அறுந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம்.
நன்னீராக்கல் நிலையங்களை அமைக்கும்போது முறையான இடத்தை தேர்வு செய்வதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் கடல் உயிரின பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம் என்கிறது கலிஃபோர்னியா கடலோரக் கமிஷன். கடலில் இருந்து நீரை குழாய்கள் மூலம் கடும் விசையுடன் உறிஞ்சும்போது அதில் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் இழுத்துச்செல்லப்பட்டு சிக்கி இறக்கின்றன. தவிர, ப்ளாங்க்டான், லார்வா, மீன் முட்டைகள் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் நீரின் விசை மற்றும் அழுத்தத்தால் கொல்லப்படுகின்றன.
தொழிற்சாலைகளின் குழாய்கள், சாதனங்களை சுத்தப்படுத்த குளோரின் அல்லது உயிரி பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்து கிறார்கள். முதல் சுத்திகரிப்பில் நீரை உறைய வைக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு குளோரைடு, குழாய்களில் படிந்திருக்கும் உப்புப் படிமங்களை அகற்ற பயன்படுத்தப்படும் பாலி அக்ரிலிக் அமிலம், தண்ணீர் வடிகட்டி சவ்வுகளை சுத்தப்படுத்த உபயோகிக்கும் நீர்த்த அல்கலைன் அமிலம் மற்றும் சோடியம் சல்பைடு போன்றவை கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அப்படி திட்டம் மிக அவசியம் என்றால் கடலில் இருந்து நேரடியாக தண்ணீரை உறிஞ்சாமல் தீவுப் பகுதிகளிலும் கடற்கரை பகுதிகளிலும் கிணறுகள் அமைத்து அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சினால் நீரின் உப்புத் தன்மையும் குறையும். திட்ட செலவும் குறையும். ஆனால், கழிவுகளை அப்புறப்படுத்த பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாள வேண்டும்" என்றார்.
கடலால் சுத்துதே சுத்துதே பூமி
ஒருங்கிணைந்த கடலியல் ஆய்வாளரான ஒரிசா பாலு கூறுகையில், "கடல் மட்டத்தில் இருந்து சூரியக் கதிர்கள் ஊடுருவும் 200 மீட்டர் ஆழம் வரையில் வசிக்கும் பெரிய உயிரினங்கள், முக்கிய மீன் வகைகள் எப்போதும் கடல் நீரோட்டத்துக்கு ஏற்ப நகர்ந்துக்கொண்டே இருக்கும். நெம்மேலி, மிஞ்சூர் ஆகிய இடங்களில் கடல் நீரை மேல் மட்டத்திலேயே உறிஞ்சுகின்றனர். கழிவையும் அவ்வாறே விடுகின்றனர். இதனால் மேற்பகுதியில் 200 மீட்டர் வரையிலான ஆழத்தில் வசிக்கும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
தவிர, மிக முக்கியமாக கடலின் நீரோட்டம் இதனால் பாதிக்கப்படுகிறது. பூமி ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சத்து ஏழாயிரத்து 300 கி.மீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றுகிறது. அந்த வேகத்தை சீராக வைத்திருப்பவை கடலின் நீரோட்டங்களே. ஆனால், கடலில் நீரை அசுர வேகத்தில் உறிஞ்சுவதும் செலுத்துவதும் கடலின் நீரோட்டங்களை பாதிப்படைய வைத்துள்ளது. உப்புத் தன்மை அதிகமான கழிவை கடலில் கொட்டுவதால் உயிரினங்கள் முற்றிலும் அழியாது என்றாலும்கூட இடம் பெயர்ந்துவிடும் அல்லது அதன் மரபணுவில் மாற்றங்கள் ஏற்பட்டு அதன் வளர்ச்சி குறைந்துவிடும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மீனின் உடல் அளவும் எடையும் இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது. சென்னை கடல் பகுதிக்கு நவம்பர் தொடங்கி ஏப்ரல் வரை மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, பெரு, நியூஸிலாந்து, ஜப்பான், சீனா ஆகிய பகுதிகளில் இருந்து பங்குனி எனப்படும் ரெட்லி ஆமைகளும் பச்சை ஆமைகளும் இனப்பெருக்கத்துக்காக வரும். ஆனால், மேற்கண்ட பாதிப்புகளால் இந்த ஆண்டு ஆமைகள் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. வந்த ஆமைகளும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றன" என்றார்.
மழையே போதும்!
தமிழ்நாடு கடலோர மேலாண்மை குழுமம் உறுப்பினரான காளிதாசன் கூறுகையில், "முதலில் கடல் நீரை சுத்திகரிப்பது என்கிற கருத்துருவே தவறு. மழையை உள்வாங்கி ஆறுகளை உற்பத்தி செய்யும் சோலைக்காடுகளை சுற்றுலா என்னும் பெயரில் அழிக்கிறோம். அங்கிருந்து தரைப்பகுதிக்கு இறங்கி வரும் ஆற்றில் கழிவுகளையும் கொட்டி அழிக்கிறோம். கடலையும் விட்டு வைக்காமல் தீங்கு இழைக்கிறோம்.
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரி யாக பொழியும் 900 மி.மீட்டர் மழையை முறையாக பாதுகாத்து, இருக்கும் நீர் நிலைகளைப் பராமரித்தாலே போதும்; குடிநீர் தேவைக்காக வேறு எதையும் நாட வேண்டாம். மொத்தத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு என்பது வெற்றிகரமான, ஆரோக்கியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்தத் திட்டம் அல்ல" என்றார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago