ராமாயணம், மகாபாரதம், பிரஹத்சம்ஹிதா மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிகவும் பழமையான மரம், நாவல் மரம். மிகவும் சாதாரணமாக வளரக்கூடிய மரங்களில், இது மிகவும் முக்கியமானது.
பழங்களே பிரதானம்
ஷைசிஜியம் கூமினி (Syzygium cumini; தாவரக் குடும்பம் மிர்டேஸி) என்ற தாவரப் பெயர் கொண்ட நாவல் மரம் இந்தியா முழுவதும் காணப்பட்டாலும், தமிழகத்தில் அதிகமாக வளரும் மரங்களில் ஒன்று. ஜனவரி முதல் ஏப்ரல்வரை பூக்களையும், மார்ச் முதல் செப்டம்பர்வரை பழங்களையும் தாங்கியிருக்கும்.
இயல்பாக வளர்வது மட்டுமின்றி மக்களால் வளர்க்கப்பட்டுவரும் மரங்களில் இது முக்கியமானது. மரத்தின் முக்கியமானபாகங்கள் அதன் பழங்களே. தமிழகத்தில் வளரும் மரங்களின் பழங்கள் சற்றுச் சிறியவை, வட இந்திய மரங்களின் பழங்கள் பெரியவை; மிகுந்த சுவையுடையவை.
பழங்கள் அதிகமாக இருப்பதால் வடஇந்தியாவில் கிளிகளுக்குச் சிறந்த புகலிடமாக இந்த மரம் திகழ்கிறது. பழங்கள் நிறைய உண்டாக்கப்பட்டால் அந்தக் காலகட்டம் உளுந்து, எள் போன்ற பயிர்களுக்குச் சிறந்த காலமாக அமையும் என்றும், இந்த மரம் மிகவும் செழிப்பாக வளரும் இடங்களில் நிலத்தடி நீர் நன்கு காணப்படும் என்றும், அந்த மண்ணில் தங்கத் தாதுகள் மிகுந்திருக்கும் என்றும் பிரஹத்சம்ஹிதா குறிப்பிடுகிறது.
சுரபாலரின் விருக்ஷாயுர்வேதத்தின் 232-வது பாடலில் இதன் பழத்துடன் “பவளம், வெட்டி வேர் சேர்த்து அரைத்த விழுதை மாமரத்தின் வேர்ப்பகுதியில் பூசி, நீர் கலந்து தெளித்தால், மாமரம் மணம் நிறைந்த மலர்களை உருவாக்கித் தேனீக்களை ஈர்த்து நல்ல சுவையுள்ள மாம்பழங்களை உண்டாக்கும்” என்கிறது.
இந்தியாவின் மரம்
‘ஜம்பூத்வீபே’ என்ற வடமொழி மந்திரத்தின்படி பண்டைய ‘இந்தியத் தீவில்’ நாவல் மரங்கள் (ஜம்பு மரங்கள்) நிறைந்து காணப்பட்டதால், இந்தியாவே இந்த தாவரத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. ‘நாவலந்தீவு’ என்ற பெயரும் உண்டு.
ஒரு புராணக் கதையின்படி மேகக் கடவுளான வருணன் நாவல் மரமாக மாறினார். இதன் காரணமாகவே, ஐம்பூதங்களில் நீருக்கான தலமாகத் திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலின் தலமரமாக நாவல் (வெண்ணாவல் அமர்ந்துறை வேதியனை - திருஞான சம்பந்தர்) மரம் திகழ்கிறது. மற்றொரு சிவன் கோவிலான திருநாவலூரிலும் நாவல் மரம் தலமரமாக உள்ளது.
வடநாட்டில் பழத்தின் நிறம் கருதி இது கிருஷ்ணருக்கும், மகாராஷ்டிரப் பகுதியில் விநாயகருக்கும், தமிழகத்தில் சிவனுக்கும் முருகனுக்கும் உரித்தானதாக இந்த மரம் கருதப்படுகிறது. அவ்வையார் ‘முருகனிடம் சுட்ட பழம், வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டது, நாவல் பழத்தைத்தான் என்று கருதப்படுகிறது. பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும்கூட நாவல் மரம் ஒரு புனிதத் தாவரம். புத்தக் கபிலவஸ்தா இந்த மரத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். பதிமூன்றாவது சமணத் தீர்த்தங்கரரான விமலநாதர், நாவல் மரத்தடியில்தான் ஞானம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
(அடுத்த வாரம்: நீரிழிவுக்கு மாமருந்தாகும் மரம்)
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago