குப்பைக் கிடங்கில் சேகரமாகும் குப்பை பண மதிப்பற்றதாகக் கருதப்படுகிறது. குப்பையைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான் இப்படி நினைக்கிறோம். கழிவும் காசாகும் என்று செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள் திருவள்ளூர் அருகேயுள்ள தலக்காஞ்சேரி விவசாயிகள்.
ஊருக்கு நல்லது
உள்ளாட்சி அமைப்புகள் குப்பையைச் சேகரிக்கவும், பிறகு எடுத்துச் செல்வதற்கும், சேமிப்பதற்கான இடத்துக்கும் பெரும் செலவு செய்கின்றன. குப்பைக் கிடங்குகளால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது, துர்நாற்றம் வீசுகிறது, கொசு உற்பத்தி அதிகரிக்கிறது, நோய்கள் பெருக வழிவகுக்கிறது. குப்பை கொட்ட இடமில்லாத நிலையில், சாலையோரங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களிலும் குப்பை கொட்டப்படுகிறது. இதனாலும், குப்பை எரிக்கப்படுவதாலும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
வேதி உரத்துக்கான செலவு அதிகரிப்பு, உரமிட்டும் மகசூல் குறைவாகக் கிடைப்பது போன்றவற்றால் விவசாயிகள் இயற்கை உரத்தை நாட ஆரம்பித்துவிட்டனர். அந்த இயற்கை உரத்தையும் சுயமாகவே தயாரித்துக்கொள்ளலாம் என்பதற்குத் தலக்காஞ்சேரி விவசாயிகள் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.
ரசாயனத்துக்கு மாற்று
தான் சார்ந்திருக்கும் பகுதியில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களால், உடல்நலம் எப்படியெல்லாம் கெட்டுப் போகும் என்பதை விவசாயிகளுக்கும் மக்களுக்கும் அறிவுறுத்திவருகிறார் தலக்காஞ்சேரியைச் சேர்ந்த பொன்னரசு. கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டுவரும் பொன்னரசு, ரசாயன உரங்களுக்கு மாற்றாகக் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் வழிமுறையைப் பொன்னரசு விவசாயிகளுக்குக் கற்றுத்தருகிறார்.
இயற்கை உரம் தயாரிப்பதற்கு விவசாயிகளுக்கு வழிகாட்டவே தலக்காஞ்சேரி அண்ணா மறுமலர்ச்சி ஆண்கள் சுயஉதவிக் குழுவைத் தொடங்கியிருக்கும் பொன்னரசு, குழுவின் செயல்பாடுகளைக் குறித்து விளக்கினார்:
உரம் தயாரிக்கும் குழு
“நான் ஐந்தரை ஏக்கரில் விவசாயம் செய்துவருகிறேன். என்னைப் போல் இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள 13 விவசாயிகள் இணைந்து தொடங்கியதுதான், அண்ணா மறுமலர்ச்சி ஆண்கள் சுயஉதவிக் குழு.
குழுவின் மூலமாக ரசாயன உரத்துக்கு மாற்றாக இயற்கை உரம் தயாரிக்க முதலில் திட்டமிட்டோம். அதற்காக அரசு நிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்களில் நேரடிப் பயிற்சி பெற்றோம். தொடர்ந்து, ஊரில் சேரும் குப்பையை இயற்கை உரமாக மாற்ற முயற்சித்தோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலக்காஞ்சேரியை ஒட்டியுள்ள திருவள்ளூர் நகராட்சியின் குப்பை கிடங்கிலிருந்து, பழைய குப்பையை எடுத்து இயற்கை உரம் தயாரித்துவருகிறோம். பழைய மக்கும் குப்பையில் 60 சதவீதத்துக்கு மேல் அங்கக சத்துகள் இருப்பதே இதற்குக் காரணம்.
அமோக மகசூல்
உரம் தயாரிக்கும் நடைமுறையின் முதல் வேலையாகக் குப்பையின் மேல் `இ.எம்.’ என்ற நுண்ணுயிர் திரவத்தைத் தெளித்து, குப்பையில் உள்ள துர்நாற்றத்தை அகற்றுவோம். குப்பையில் கனஉலோகங்கள் இருந்தால், உரமாக்குவதில் பிரச்சினை ஏற்படலாம். ஆனால், பொதுவாகக் கனஉலோகங்கள் காணப்படுவதில்லை.
அதன்பிறகு குப்பையில் உள்ள கல், கண்ணாடி, ரப்பர், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தேவையற்ற கழிவு - மக்காத பொருட்களை அகற்றிவிட்டு, மணல் சலிக்கும் நான்கு மி.மீ. சல்லடை மூலம் சலிக்க வேண்டும். சலித்த பின் கிடைக்கும் கழிவுடன் உயிர்ச்சத்து உரத்தைச் சேர்த்து இயற்கை உரத்தை உற்பத்தி செய்கிறோம்.
சுமார் 60 டன் குப்பையிலிருந்து 30 டன் இயற்கை உரம் கிடைக்கும். ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து டன்வரை தயாரிக்கலாம். இந்த இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதால் எங்கள் சுயஉதவி குழுவினர் பயிரிட்டுள்ள நெல், கரும்பு, வாழை மற்றும் மலர் உள்ளிட்ட பயிர்கள் அமோக மகசூலைத் தந்துவருகின்றன.
ஊருக்கு ஒரு தொழிற்சாலை
எங்கள் குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், மற்ற விவசாயிகளுக்கு ஒரு கிலோ இயற்கை உரத்தை நான்கு ரூபாய்க்கு விற்றுவருகிறோம். தற்போது குறைந்த அளவில் மட்டுமே உற்பத்தி செய்வதால், ஒரு கிலோவுக்கு 80 பைசா மட்டுமே லாபம் கிடக்கிறது. அதிக அளவில் உற்பத்தி செய்தால், நிச்சயம் அதிக லாபம் கிடைக்கும். நாங்கள் பயன்படுத்தும் உரத்துக்கு எந்தப் பெரிய செலவும் ஏற்படுவதில்லை.
குப்பையிலிருந்து அதிக அளவில் இயற்கை உரத்தை உற்பத்தி செய்வதற்கான இயந்திரத்தை வடிவமைக்க முயற்சித்துவருகிறோம். இயற்கை உரம் தயாரிப்பதற்கு அரசு நிதியுதவி, கட்டமைப்பு வசதிகள் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தித் தந்தால் ஊருக்கு ஒரு இயற்கை உரத் தொழிற்சாலையை அமைக்கலாம். உழவர் மன்றங்கள், விவசாய அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள் இதை மேற்கொண்டால் மண் வளம் பெறும், வேலை கிடைக்கும், சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும்” என்கிறார்.
விவசாயிகளின் இந்த முயற்சியால் திருவள்ளூரில் தேவையின்றிச் சேரும் குப்பையின் அளவு குறைகிறது, விவசாயிகளுக்கும் மண்ணைக் கெடுக்காத இயற்கை உரம் குறைந்த விலையில் கிடைப்பது என இரட்டை லாபம் கிடைக்கிறது.
விவசாயி ஜெ. பொன்னரசு, தொடர்புக்கு: 98408 24167
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago