வேளாண்மையில் நாளும் ஒரு வருமானம், வாரம் ஒரு வருமானம், மாதம் ஒரு வருமானம், ஆறு மாதத்துக்கு ஒரு வருமானம், ஆண்டுக்கு ஒரு வருமானம் என்று பல தவணைகளாக வருவாய் இருக்குமேயானால், அதைவிடச் சிறந்த தொழில் வேறு எதுவாக இருக்க முடியும்? அப்படியொரு பெருமையான விவசாயத் தொழிலைச் செய்யும் ஒருவரை நேரில் காணும்போது, மனம் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்கிறது.
அது மட்டுமல்ல, `நான் ஒரு விவசாயி’ என்று கூறுவதில் பெருமை கொள்ளும் அந்த நபர் சதுரகிரி.
பல பயிர் சாகுபடி
வெயில் தகிக்கும் கரிசல் மண். கோடை நாட்களில் நிலம் பாளம் பாளமாகப் பிளந்துவிடும். அப்படிப்பட்ட நிலத்தில் வெற்றிகரமாக ஒருவர் இயற்கைவழி வேளாண்மை செய்கிறார் என்றால், அதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. மதுரை மாவட்டத்தில் தென்கோடிப் பகுதியில் உள்ள கல்லுப்பட்டி வட்டாரத்தில் உள்ள ஊர் சாலிச்சந்தை. இங்கு ஒன்பது ஏக்கர் நிலத்தில் பழைய கிணறு ஒன்றை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை நடத்திவருபவர் சதுரகிரி.
மாட்டுப் பண்ணை, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பழத் தோட்டம், மலர் சாகுபடி, காய்கறிச் சாகுபடி என்று பல வகைகளிலும் தனது பண்ணையை விரிவுபடுத்தியுள்ளார். இயற்கை வேளாண்மைக்கான சான்றிதழும் பெற்றுள்ளார்.
உதவும் கால்நடைகள்
இவரது பண்ணைக்கு ஆதாரமாக இருப்பது மாட்டுப் பண்ணை. பால் ஒரு முதன்மை வருமானமாக இருந்தாலும், சாணமும், மாட்டுச் சிறுநீரும் இவரது இயற்கை வேளாண்மைக்கு உறுதுணையாக விளங்குகின்றன. பத்து மாடுகளில் ஐந்து மாடுகள் பால் கறக்கின்றன, மீதியிருக்கும் மாடுகள் சினையூட்டப்பட்டுள்ளன. அவை கறவைக்கு வரும்போது இப்போது கறக்கும் மாடுகள் சினையூட்டப்படும்.
இப்படி மாறி மாறித் தொடர்ச்சியாக பால் கிடைக்கும் அளவை முறையாகப் பராமரிக்கிறார். ஒரு நாளைக்கு சராசரியாக 70 லிட்டர் பால் கிடைக்கிறது. மாட்டுக்கான தீவனத்துக்கு ஒரு ஏக்கர் பரப்பில் தீவனப் புல் வளர்த்துள்ளார். இது தவிர காய்ந்த தீவனமாக இருங்குச் சோள நாற்றுகளை வளர்த்துப் படப்பு (தட்டைப் போர்) போட்டு வைத்துள்ளார். அடர் தீவனமாக சிறிதளவு தவிடு மட்டுமே கொடுக்கிறார். இவை மட்டுமே அவர் மாட்டுக்குச் செய்யும் செலவு. மாட்டுக் கொட்டகையை மிக எளிய முறையில் அமைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஒரு லிட்டர் பாலை இவர் 24 ரூபாய்க்கு மட்டுமே விற்கிறார். இவரது பாலை எடுத்துச் சென்று விற்பவர்கள், அதை 40 ரூபாய் வரை விற்கின்றனர்.
வளர்ப்பில் புதுமை
மட்கிய சாணம் ஒவ்வொரு பருவத்திலும் நிலத்துக்குச் சென்றுவிடுகிறது. நிலத்தில் விளைச்சல் குறைவில்லாமல் கிடைக்க இது உதவுகிறது. மாட்டுக் கொட்டகையில் ஒருபுறத்தில் ஆடுகளையும் வளர்க்கிறார். இப்போது இவரது பண்ணையில் பத்து ஆடுகள் உள்ளன. ஆடுகளை வளர்ப்புக்காக இவர் விற்பனை செய்கிறார். அதாவது பெட்டை ஆடுகளை வாங்கி வளர்த்து குட்டி போட வைத்து, அந்தக் குட்டிகளை மட்டும் விற்கிறார். இறைச்சிக்கான ஆடு வளர்ப்பு செய்வதில்லை. இவரது பண்ணையைச் சுற்றி சுபா புல் என்ற தீவனப் புல் மரத்தை அடர்த்தியாக நடவு செய்து வைத்துள்ளார். அது எப்போதும் பசுமையாக இருக்கும். காற்றில் உள்ள நைட்ரஜனை (தழைச் சத்தை) நிலைப்படுத்தி நிலத்தை வளமாக்கிக்கொண்டே இருக்கும். இதிலிருந்து ஆட்டுக்குத் தேவையான தீவனத்தில் பெரும்பகுதி கிடைத்துவிடுகிறது. மீதத் தேவைக்கு கோ-4 வகைப் புல் கொடுக்கப்படுகிறது.
கோழி வளர்ப்பின் மூலம் சிறுசிறு செலவுகளைச் சமாளிக்கிறார். அது மட்டுமல்லாது தனக்கும் பண்ணைப் பணியாளர்களுக்கும் இறைச்சிக்காக கோழிகளைப் பயன்படுத்துகிறார். வாரத்துக்கு ஒரு நாள் இவரது பண்ணையில் நாட்டுக் கோழிக் குழம்பு கிடைக்கும். கோழிகளுக்கு என்று தனியாக எந்தத் தீவனமும் கொடுப்பதில்லை. அவை நிலத்தில் அலைந்து திரிந்து சிறுசிறு பூச்சிகளையும், புழுக்களையும் தின்று மிகச் சத்தான இறைச்சியையும் முட்டையையும் கொடுக்கின்றன. மாலை வேளையில் மட்டும் குருணை போன்ற தீவனத்தைக் கொஞ்சம் கொடுக்கிறார். எந்தவிதமான முயற்சியும் இல்லாமலேயே வருவாய் தருவது கோழிகள் என்றால் மிகையாகாது.
(அடுத்த வாரம்: இயற்கைக் காய்கறி: ஒரு லட்சம் மேல் லாபம்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் | தொடர்புக்கு: adisilmail@gmail.com
விவசாயி சதுரகிரியைத் தொடர்புகொள்ள: 78716 00000
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago