தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 30: நமக்கு உயிர் தரும் சுழற்சி

By பாமயன்

கரியம் எனப்படும் கரியானது உயிர்களின் அடிப்படைக் கட்டுமானங்களில் ஒன்று. ஒரு பொருள் கரிப் பொருள் என்று எப்படி அறிந்துகொள்வது? அந்தப் பொருளைத் தொடர்ந்து எரித்தால், இறுதியில் மிஞ்சுவது கரியாக இருக்கும். மரத்தை எரித்தாலும், மனிதனை எரித்தாலும் மிஞ்சுவது கரியே. இப்படியாக எந்தப் பொருளை எரித்தால் மிஞ்சுவது கரியாக உள்ளதோ, அப்பொருள் கரியை அடிப்படையாகக் கொண்ட பொருள் என்று புரிந்துகொள்ளலாம்.

கரி எனப்படும் தனிமம் இந்த உலகில் உள்ள அதிகமான தனிமங்களில் நான்காவது இடத்தை வகிக்கிறது. உயிர்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத தனிமம் இது.

பல்லாயிரம் ஆண்டு சுழற்சி

அனைத்து உயிரினங்களின் உடலிலும் கரியம் உள்ளது. இது காற்று வடிவில் கார்பன்-டை-ஆக்சைடு வடிவிலும், திட வடிவில் சுண்ணாம்புக் கற்களாகவும் (கால்சியம் கார்பனேட்), மரம், ஞெகிழி (பிளாஸ்டிக்), வைரம் என்று பல வடிவங்களிலும் உள்ளது.

கரியமானது பல வடிவங்களில் சுழற்சியாகிக்கொண்டே இருக்கின்றது. வளிமண்டலங் களுக்கு இடையிலும், கடல்களினூடாகவும், உயிரினக் கோளங்களிலும், மண்ணக கோளங்களிலும் சுழன்றுகொண்டே இருக்கிறது. மண்ணில் கரிமச் சுழற்சி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவருகிறது. உயிரினத்தில் கரிமச் சுழற்சி ஓரிரு நாட்கள் முதல் பல ஆண்டுகள்வரை நடக்கிறது.

விடாத தொடர்ச்சி

உலகம் தோன்றும்போது நீருடன் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவானது கலந்து கரியமிலமாக உருவானது. பின்னர் மண்ணின் மேல்மட்டத்தில் உள்ள தாதுகளோடு சேர்ந்து கரியக் கூட்டுப் பொருள்களாக மாற்றமடைந்துகொண்டே வந்தது.

மழைக்காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுக் கடலின் அடியில் சென்று கரி கூட்டுப் பொருட்களாகத் தங்குகிறது. இந்தக் கரியப் பொருள் நாளாவட்டத்தில் வெப்பம், கண்டத்தட்டுகளின் நகர்வு, அழுத்தம் போன்றவற்றால் மறுபடி கார்பன் டை ஆக்சைடு ஆக மாற்றமடைகிறது. இப்படியாகப் பல நூற்றாண்டுகளாக இந்தச் சுழற்சி நடந்துகொண்டே இருக்கிறது.

தாவரங்களின் மூச்சு

ஒளிச்சேர்க்கையின் மூலமாகவும், மூச்சு விடுவதன் மூலமாகவும் உயிரியியல் முறையில் கரிமச் சுழற்சி நடந்துகொண்டு இருக்கிறது. அனைத்துப் பயிரினங்களும் தங்களது வாழ்க்கையை நடத்துவதற்கான ஆற்றலை உருவாக்க வெயில், கார்பன் டை ஆக்சைடு ஆகிய இரண்டையும் கொண்டு சர்க்கரையை உருவாக்குகின்றன. பின்னர் அவற்றைப் பயன்படுத்தும்போது மூச்சு விடுவதற்காகக் கரைத்து வெளியேற்றுகின்றன. அதாவது பகலில் பச்சைச் செடியினங்கள் கரிமத்தை எடுத்துக்கொண்டு, இரவில் வெளியே விடுகின்றன எனலாம். அத்துடன் பகலில் ஒரு குறிப்பிட்ட அளவில் மூச்சு விடுவதும் நடப்பதால் கரியம் வெளியிடப்படுவதும் உண்டு.

கழிவைப் பயனுள்ளதாக்கும் கரி

பச்சைச் செடியினங்கள் ஒளிச்சேர்க்கையின்போது காற்றில் - உள்ள கார்பன்-டை-ஆக்சைடு வாயுவைச் சிதைத்துக் கரியமாக மாற்றி, அதை நீர் மூலக்கூற்றிலுள்ள ஆக்சிஜனுடன் சேர்த்துக் கார்போஹைட்ரேட்டாக, அதாவது மாவுப் பொருட்களை உருவாக்குகின்றன. பின்னர் மூச்சு விடும்போது இந்த மாவுப்பொருள் சிதைந்து கரியானது காற்றாக வெளியேற்றப்பட்டுச் செடிகளுக்கு ஆற்றல் கிடைக்கிறது. இப்படியாக மாற்றி மாற்றிக் கரிமமானது சுழன்றுகொண்டே இருக்கிறது.

இதேபோல விலங்கினங்கள் உணவை எடுத்துக் கொள்ளும்போது, கரிமத்தை எடுத்துக்கொள்கின்றன. பின்னர் தங்கள் உடல் இயங்குவதற்கான ஆற்றலைப் பெறும்போது உணவு சிதைந்து, கார்பன்-டை-ஆக்சைடு வாயுவாகப் பிரிகிறது. இதற்கு மூச்சுவிடுவதும் செரிமானமும் உதவுகின்றன.

எனவே, நமது பண்ணையில் கரிமத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். அனைத்து மட்கும் பொருட்களும் பண்ணைக்குள் வந்து விழுந்துகொண்டே இருக்க வேண்டும். அது கரிமச் சுழற்சியில் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இந்தக் கழிவுகள்தாம் நமக்கு அரிசியாக, எண்ணெயாக மாறிக் கிடைக்கின்றன.

(அடுத்த வாரம்: சுற்றிச் சுழலும் நீர்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்