தட்டான்களைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால், நாம் சிறுவர்களாக இருந்தபோது தட்டான்களை என்ன செய்தோம் என்று நினைவிருக்கிறதா? தட்டானைப் பிடித்து ‘ஆட்ரா ராமா, ஆட்ரா ராமா’ என்று குரங்கை ஆட வைத்ததுபோல் சிறு கல்லைத் தூக்க செய்வது, வாலில் நூலைக் கட்டிவிட்டு ‘தட்டான் பட்டம்’ விடுவது என்றெல்லாம் கொடுமைப்படுத்தியிருப்போம் அல்லவா?
அப்படிச் செய்வது தவறு என்பதை அறியாமல் செய்தாலும் தட்டான்களுடன் குறைந்தபட்ச உறவையாவது அன்று சிறார்கள் கொண்டிருந்தார்கள். இன்று தட்டான்களுக்கு நூல் கட்டுவதும் குறைவு, தட்டான்களைக் கண்டுகொள்வது மிகமிகக் குறைவு. இந்த இரண்டு சூழல்களும் தட்டான்களுக்கு உகந்தவை அல்ல.
இயற்கையின் மீது ஒரு சமூகத்துக்கு அக்கறை இருக்கிறது என்பதன் அடையாளம், மனிதர்களின் வாழ்க்கையிலும் கலை இலக்கியங்களிலும் எந்த அளவுக்கு இயற்கை இடம்பிடித்திருக்கிறது என்பதுதான். சங்க இலக்கியக் காலத்திலிருந்து தமிழ் இலக்கியத்தில் தட்டான்கள் இடம்பிடித்து வந்தாலும் சமீபகால இலக்கியங்களில் தட்டான்களுக்கான இடம் குறைந்துவிட்டது.
தட்டான்களைப் பற்றிய குறிப்பிடத்தகுந்த ஆராய்ச்சி நூல்களும் அறிமுகக் கையேடுகளும் தமிழில் இல்லை. அந்தக் குறையைப் போக்க வந்த நூல்தான், ப. ஜெகநாதனும் ஆர். பானுமதியும் உருவாக்கியிருக்கும் ‘அறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள்’. ‘பறவைகள்’, ‘வண்ணத்துப்பூச்சிகள்’ ஆகிய கையேடுகளின் தொடர்ச்சியாக இந்த நூல் வெளியாகியிருக்கிறது.
விரிவானதோர் அறிமுகம்
உலகில் சுமார் 6,000 தட்டான் இனங்கள் இருக்கின்றன, இந்தியாவில் 503 தட்டான் இனங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படும் தட்டான்களில் 73 வகைகளைப் பற்றி (44 தட்டான்கள், 29 ஊசித்தட்டான்கள்) விளக்கங்கள், அவற்றின் 203 படங்கள் என்று அறிமுகக் கையேட்டைத் தாண்டியும் இந்தப் புத்தகம் விரிவாகவே இருக்கிறது.
புத்தகத்தின் அறிமுகப் பகுதி சுமார் 60 பக்கங்கள் நீள்கிறது. இதில் தட்டான்களின் உயிரியல் வகைப்பாடு, தட்டான்களுக்கும் ஊசித்தட்டான்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், தட்டானின் உடல் பாகங்கள், வாழிடங்கள், வாழ்க்கைச் சுழற்சி, நீர்வாழ் நிலை, முதிர்ந்த பருவம், பறத்தல், இனப்பெருக்கம், வலசைபோதல், சூழல் மண்டலத்தில் தட்டான்களின் பங்கு, தட்டான்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள், தட்டான் பார்த்தல் என்று விரிவான அறிமுகம் நமக்கு இந்தப் பக்கங்களில் கிடைக்கிறது.
சூழல் சுட்டிக்காட்டி
பல தகவல்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. நாம் காணும் தட்டான்கள் அவற்றின் இளம் மற்றும் முதிர்ந்த பருவத்தைச் சேர்ந்தவையே; இந்தப் பருவங்களைவிட தட்டான்களின் தோற்றுவளரி (Larvae) பருவமே மிக நீண்டது. முட்டைப் பருவத்தில் ஆரம்பித்து தோற்றுவளரிப் பருவம்வரை நன்னீரிலே அவற்றின் பெருமளவிலான ஆயுட்காலம் கழிகிறது.
தோற்றுவளரி நிலையில் தட்டான்களின் முக்கிய உணவு இளம் கொசுக்கள், கொசுக்களின் தோற்றுவளரிகள் என்னும் தகவல் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் தட்டான்களின் பங்கை நமக்கு உணர்த்தும். சிக்குன் குன்யா, டெங்கு போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்களை இரையாகக்கொண்டு அந்த நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் தட்டான்கள் பெரும் பங்காற்றுகின்றன.
அது மட்டுமல்லாமல், பூச்சிகளை வேட்டையாடித் தட்டான்கள் தின்பதால் விவசாயிகளுக்கும் உற்ற நண்பர்களாகத் தட்டான்கள் விளங்குகின்றன. தட்டான்கள் ஓர் இடத்தின் சூழலியல் நலன் சுட்டிக்காட்டிகளாகவும் விளங்குகின்றன. தட்டான்கள் ஓர் இடத்தில் அதிகம் காணப்பட்டால், அந்த இடத்தின் சூழல் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். இதுபோன்ற பல காரணிகள் தட்டான்களை இயற்கையின் சங்கிலியில் மிக முக்கியமான கண்ணியாக ஆக்குகின்றன.
நீண்டதூர வலசைப் பூச்சிகள்
பெண் தட்டான்களைக் கவர்வதற்காக ஆண் தட்டான்கள் செய்யும் சாகசங்கள் தமிழ்ப்பட விடலைக் கதாநாயகர்களை நினைவுபடுத்துகின்றன. பெண் தட்டான்களை அழைத்துக்கொண்டு செல்வதிலிருந்து, கலவிக்கான இடத்தைத் தேர்வுசெய்தல், போட்டித் தட்டான்களை விரட்டுவதற்கான போராட்டங்களை மேற்கொள்ளுதல், முட்டை இடுவதற்குப் பெண் தட்டான்களுக்கான இடத்தைத் தேர்வு செய்து அங்கே காவல் காத்தல் போன்ற பல விஷயங்கள், தன் இனத்தைப் பெருக்குவதில் தட்டானுக்கு உள்ள இயற்கை உந்துதலை நமக்குச் சுட்டுகின்றன.
அதிலும், ஒரு பெண் தட்டானின் இனப்பெருக்க உறுப்பில் வேறு ஆண் தட்டானின் விந்தணுக்கள் இருந்தால் கலவி கொள்ள வரும் ஆண் தட்டான், அவற்றை வெளியேற்றிவிட்டுத்தான் கலவி கொள்ளும் என்ற தகவல் பெரிதும் ஆச்சரியமளிப்பது.
அதேபோல், தேசாந்திரித் தட்டான்களின் (Globe Skimmer) வலசை போகும் பண்பு வியப்பளிக்கிறது. பூச்சியினங்களிலேயே நீண்ட தொலைவுக்கு வலசைபோவது இந்தத் தட்டான்கள்தான் என்று சமீபத்திய கண்டுபிடிப்பை இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள்.
காற்று அலைகளின் உதவியால் இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு, ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு என்று இந்த வகைத் தட்டான்கள் வலசைச் சுழற்சியை பின்பற்றுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் சார்லஸ் ஆண்டர்சன் என்னும் கடலுயிர் ஆராய்ச்சியாளர். நான்கு தலைமுறைத் தட்டான்கள், மொத்தமாக 16 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கின்றன என்கிறார் ஆண்டர்சன்.
கவித்துவப் பெயர்கள்
தட்டான்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும் பெயர்கள் இந்தப் புத்தகத்தின் முக்கியமான அம்சம். பெரும்பாலான பறவை இனங்களுக்கு உள்ளூர்ப் பெயர்கள் இருக்கின்றன. ஆனால் தட்டான்களைப் பொறுத்தவரை தட்டான், ஊசித்தட்டான் ஆகியவை மட்டுமே பெரும்பாலும் தெரியும். ஆனால், இவற்றிலேயே ஏராளமான வகைகள் இருக்கின்றன. அவற்றுக்கு அநேகமாக தனி உள்ளூர்ப் பெயர்கள் ஏதும் கிடையாது. ஆகவே, நூலாசிரியர்கள் பெரும்பாலானவற்றுக்குத் தமிழில் புதிதாகப் பெயர்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
கூடியவரை ஆங்கிலப் பெயர்களின் மொழிபெயர்ப்பாக இல்லாமல், தட்டான்களின் பண்புகளைக்கொண்டே பெயர்களை உருவாக்கியிருக்கிறார்கள். கி.ரா-வின் ‘பிஞ்சுகள்’ நாவலில் ‘குங்குமத் தட்டான்’ என்றொரு தட்டானைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அதே பெயர் இந்தக் கையேட்டிலும் பயன்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தேன்துளிச் சிறகன், காட்டுச் சிறுநீலன், ஓவியச் சிறகன், மேகச் சிறகன், கபிலத் தட்டான், தேசாந்திரித் தட்டான், காட்டு மரகதம், குடகு மூங்கில்வாலி என்று பல பெயர்கள் கவித்துவத்தில் மின்னுகின்றன. கூடவே, கலைச்சொற்களும் அழகூட்டுகின்றன. ‘Tandem flight’ என்பதற்கு ‘பற்றிப் பறத்தல்’ என்ற பதத்தை உருவாக்கியிருப்பது அழகு. இப்படியாக, இந்த நூல் தமிழ் மொழிக்கும் பெருங்கொடையாக விளங்குகிறது.
பார்வையால் பிடிப்போம்
எல்லாவற்றுக்கும் உச்சம்போல், தட்டான்களின் ஒளிப்படங்கள் இந்தக் கையேட்டின் மிக முக்கியமான அம்சம். பறவைகளை ஒளிப்படம் எடுப்பதே எளிதல்ல எனும்போது, தட்டான்களை படமெடுப்பது இன்னும் சிரமம். எனினும் பொறுமையோடும் அழகாகவும் இந்தப் படங்களை எடுத்திருக்கும் ப. ஜெகநாதன், ஆர். பானுமதி, டேவிட் வி. ராஜு உள்ளிட்ட காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
ஓர் ‘அறிமுகக் கையேடு’ எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி அழகாகவும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காட்டுயிர் ஆர்வலர்களிடம் மட்டுமின்றி சிறார், பெற்றோர், ஆசிரியர்கள் என்று அனைவரிடமும் இருக்க வேண்டிய புத்தகம் இது. இந்தப் புத்தகத்தைப் படிக்க நேரும் சிறுவர்கள் இனிமேல் தட்டான்களைப் பார்வையால் மட்டுமே பிடித்து விளையாடுவார்கள் என்பது நிச்சயம்.
தோற்றுவளரி நிலையில் தட்டான்களின் முக்கிய உணவு இளம் கொசுக்கள், கொசுக்களின் தோற்றுவளரிகள் என்னும் தகவல் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் தட்டான்களின் பங்கை நமக்கு உணர்த்தும். சிக்குன்குன்யா, டெங்கு போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்களை இரையாகக்கொண்டு அந்த நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் தட்டான்கள் பெரும் பங்காற்றுகின்றன.
தட்டான்கள், ஊசித்தட்டான்கள்: அறிமுகக் கையேடு, ப. ஜெகநாதன், ஆர். பானுமதி, வெளியீடு: க்ரியா பதிப்பகம், தொடர்புக்கு: 97898 70307
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago