மாடித் தோட்டம் போடும்போது எளிதில் வளர்க்கக் கூடியவை, உடலுக்கு ஊட்டம் தருபவை கீரைகள். கீரைகளை வளர்ப்பது எப்படி என்று விளக்குகிறார் சென்னையில் மாடித் தோட்டம் பிரபலமாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான மாலதி:
கீரைகளை விதைகள், நாற்றுகள் மூலமாகவும், தண்டுகளை நட்டு வைத்தும் வளர்க்க முடியும். கீரைகளின் வளர்ச்சிப் பருவம் சாதாரணமாக 20 முதல் 25 நாட்கள்.
கீரைப் பாத்தி
தரையாக இருந்தால் முதலில் நீளவாக்கில் பாத்தி அமைக்க வேண்டும். மூன்று அடிக்கு 10 அடி அளவில் பாத்தியை அமைத்துக் கொள்ளலாம். மாடித் தோட்டம் என்றால் செங்கல் அடுக்கி வைத்தோ அல்லது தற்போது எளிதாகக் கிடைக்கும் பெரிய பிளாஸ்டிக் பையையோ கீரை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். நன்றாக மக்கிய எரு, மண் கலந்து அத்துடன் பொடித் துகள்களாக இருக்கும் மரத்தூளோ அல்லது தென்னை நார்க்கழிவோ கலந்து, மண்ணைக் கட்டியில்லாமல் நன்கு கொத்திக் கிளறிவிட வேண்டும். களைகள் ஏதேனுமிருந்தால் அகற்றி, மண்ணை நன்றாகக் காயப்போட வேண்டும். மண் ‘பொலபொல' என்றிருக்க வேண்டும். கட்டிகள் இருந்தால் அவற்றை நீக்கிவிட வேண்டும். மண்ணைக் கையில் எடுக்கும்போது உப்பு மாதிரி இருக்க வேண்டும். பிறகு கட்டையைப் பயன்படுத்தி மண்ணைச் சமப்படுத்திக் கொள்ளவேண்டும்.
விதையிடுதல்
கீரை விதைகள் மிகச் சிறியவை. ஆகவே, மிகக் குறைந்த அளவே விதைகளைப் பயன்படுத்த வேண்டும். விதைகளை மணலோடு கலந்து பாத்திகளின் மேல் தெளிக்க வேண்டும். தெளித்த பின், விதைகள் மண்ணுள் செல்லும்படி நெல் துழாவுவதுபோல் அளாவி விட வேண்டும். உடனே தண்ணீர் தெளித்துவிட வேண்டும். இல்லையென்றால் விதைகளை எறும்புகள் இழுத்துச் சென்றுவிடும்.
முதல் நாள் தண்ணீர் தெளித்தால், ஒரு நாள் இடைவெளி விட்டு மூன்றாம் நாள் மீண்டும் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒருசில கீரைகள் மூன்றாம் நாள் முளை விட்டு வெளியே வந்துவிடும். ஒருசில கீரை வகைகள் நான்காம் நாள் அல்லது ஐந்தாம் நாள்தான் முளை விடும்.
வளர்ச்சி ஊக்கி
முளை விட்டு, ஐந்து அல்லது ஆறு இலைகளைப் பார்த்தவுடன், நாம் முன்னேற்பாடாகச் செய்து வைத்திருக்கும் பஞ்சகவ்யம் அல்லது ஏதாவதொரு வளர்ச்சி ஊக்கியை ஸ்பிரேயர் மூலம் செடிகளுக்குத் தெளிக்க வேண்டும். பின்னர், 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வளர்ச்சி ஊக்கியை தெளித்துவிட்டால், 20 முதல் 25-ம் நாளில் கீரையைப் பறித்துச் சமைக்கலாம். வளர்ச்சி ஊக்கியைத் தெளிக்க முடியாதவர்கள், அரிசி, பருப்பு களைந்த தண்ணீரைப் புளிக்கவைத்துச் செடிகளுக்குத் தெளித்து வரலாம். கீரைக்கு அன்றாடம் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் தெளித்தாலே போதுமானது.
எளிதாக வளர்க்கும் முறை
மூன்றுக்கு 10 அடி பாத்தியில் ஒரே நாளில் நமக்குத் தேவையான அளவு கீரை கிடைத்துவிடும். இல்லத்தரசிகள் இதை விற்கவும் செய்யலாம். இல்லை, நம் வீட்டுத் தேவைக்கு மட்டும் போதும் என்பவர்கள், அதற்கேற்பக் கீரையை விளைவிக்க வேண்டும்.
திராட்சை, அத்திப் பழங்கள் வைத்து வரும் தக்கைப் பெட்டிகளில் தேவைக்கேற்ப மண் இட்டு எந்தக் கீரை விதை வேண்டுமோ, அதை மட்டும் தெளித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையேல், மூன்றுக்கு 10 அடி பாத்தியில் தேவைக்கேற்ப பிரிவுகள் செய்து மூன்று அல்லது நான்கு வகைக் கீரைகளை வளர்த்துப் பயன் பெறலாம்.
பல கீரைகள் பல சத்துகள்
அகத்திக் கீரையைப் பெற விதையை ஊன்றி வைத்தால் வளரும். ஒரு முருங்கைக் கிளையை நட்டு வைத்தால் முருங்கைக் கீரையுடன் காய்களும் கிடைக்கும். தவசி முருங்கையை நட்டுவைத்துத் தவசி முருங்கைக் கீரையும் பெறலாம்.
ஒருமுறை விதையை ஊன்றி வைத்தால் பாலக் கீரை கிள்ளக்கிள்ள வளர்ந்துகொண்டேயிருக்கும். பொன்னாங்கண்ணி, சிலோன் பருப்புக் கீரை, பாலக் கீரை, வல்லாரை, புதினா போன்றவற்றையெல்லாம்
ஒரு முறை நட்டுவைத்தால் போதும். வேண்டும் போதெல்லாம் கிள்ளியெடுத்துச் சமையல் செய்யலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கை நட்டுவைத்தால், அதிலிருந்தும் கீரை கிடைக்கும். இந்தக் கீரையைக் கூட்டு செய்து உண்ணலாம். பலவகைக் கீரைகளை மாடித் தோட்டத்தில் வளர்ப்பதால், நாள்தோறும் ஒரு கீரையைப் புத்தம் புதிதாகப் பறித்துச் சமைத்து உண்ணலாம். உடல்நலமும் நல்வாழ்வும் பெறலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago