பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்

By வி.தேவதாசன்

கார், அன்னமழகி, இலுப்பைப்பூ சம்பா, ஒட்டடையான், மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, நவரா, கல்லுண்டை, கருடன் சம்பா. இப்படி ஒவ்வொரு பெயரும் வித்தியாசமாக இருக்கும் அனைத்தும், நம் பாரம்பரிய நெல் வகைகளின் பெயர்கள். இதுபோல இந்தியா முழுவதும் ஒரு லட்சம் நெல் வகைகள் இருந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பாரம்பரிய நெல் வகைகளை நம் முன்னோர் பயிரிட்டுள்ளனர். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கூடிய நவீன வேளாண்மையின் வரவு ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் வகைகளை நம் மண்ணில் இருந்தே துரத்திவிட்டது.

வெள்ளம், வறட்சி என இயற்கைச் சீற்றங்களையும், பூச்சித் தாக்குதல்களையும் தாங்கி நின்று வளர்வது மட்டுமின்றி, ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டவை நமது பாரம்பரிய நெல் வகைகள். அத்தகைய சிறப்புக்குரிய நெல் வகைகள் வெறும் பழங்கனவாய் போய்விடுமோ என்று பலரும் கவலைப்பட்டு வந்த நேரத்தில், "நமது நெல்லைக் காப்போம்" என்ற பெயரில் உருவான ஓர் இயக்கம், இன்றைக்கு மாபெரும் மக்கள் இயக்கமாக மலர்ந்து தமிழகம், கேரளம், கர்நாடகம், ஒடிசா, மேற்கு வங்கத்தில் 700க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் கிரியேட் என்ற நுகர்வோர் உரிமைகளுக்கான அமைப்பின் சார்பில் ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பாரம்பரிய நெல் வகைகளின் மகத்துவத்தை உணர்த்தி, அவர்களைப் பாரம்பரிய நெல் சாகுபடி முறையின் பக்கம் இந்த இயக்கம் திருப்பி வருகிறது.

நமது நெல்லைக் காப்போம் இயக்கம் குறித்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமனிடம் பேசினேன்:

“விவசாயத் தொழிலில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் காரணமாக ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. இந்தச் சூழலில் இயற்கை வழி வேளாண்மையையும், பாரம்பரிய நெல் சாகுபடி முறைகளால் மட்டுமே விவசாயிகளையும், விவசாயத் தொழிலையும் காப்பாற்ற முடியும் என்று வலியுறுத்தி, சமீபத்தில் மறைந்த ஐயா நம்மாழ்வாரின் கருத்துகளை ஏற்று எங்கள் இயக்கம் பயணிக்கிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மே கடைசி வாரத்தில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழாவை நடத்துகிறோம். குமரி முதல் செங்கல்பட்டு வரையிலான அனைத்து மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து இந்தத் திருவிழாவுக்கு விவசாயிகள் வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 18 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் வகைகளை விநியோகித்துள்ளோம்.

ஆதிரெங்கம் கிராமத்தில் இயற்கை வேளாண் சாகுபடி முறையில் பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிடுவதுடன், நேரடி களப் பயிற்சியும் அளித்து வருகிறோம். நடப்புச் சாகுபடி ஆண்டில் மட்டும் எங்கள் இயக்கம் மூலம் ஆதிரெங்கம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், உளுந்தூர்பேட்டை, நன்னிலம், சிவகங்கை உள்ளிட்ட 13 ஊர்களில் 152 பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் உளுந்தூர்பேட்டை  சாரதா ஆசிரமத்தின் பங்களிப்பு அதிகம்.

ஆதிரெங்கம் கிராமத்தில் மட்டும் கருப்பு கவுணி, சிவப்பு கவுணி, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, மடுமுழுங்கி, வாடன் சம்பா, கருடன் சம்பா, கைவரை சம்பா, இலுப்பை பூ சம்பா, அறுபதாம் குறுவை, பூங்கார், காட்டு யானம், தேங்காய்ப்பூ சம்பா, கிச்சடி சம்பா என 33 பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிட்டுள்ளோம்” என்கிறார் ஜெயராமன்.

இயற்கை முறை சாத்தியமா?

பொதுவாக விவசாயிகளின் விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. அதிலும் நெல் விவசாயிகளுக்குப் பெரிய லாபம் கிடைப்பதில்லை. இந்தச் சூழலில் இயற்கை விவசாயத்தின் பக்கம் பெரும்பகுதி விவசாயிகளைத் திருப்புவது சாத்தியமா?

“விவசாயம் அதிக லாபம் தரும் தொழிலாக மாற வேண்டுமானால், இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகள் நிச்சயம் மாற வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறோம். ஏனென்றால், இயற்கை வழி சாகுபடி முறையில் சாகுபடிச் செலவு மிகமிக குறைவு.

தற்போதைய சாகுபடி முறையில் நாற்றங்காலைத் தயார்படுத்தி, நாற்று விட வேண்டுமானால் ஏக்கருக்குக் குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை ஆகும். ஆனால், இயற்கை வழி சாகுபடி முறையில் 2 கிலோ விதை நெல் செலவைத் தவிர, வேறு எந்தச் செலவும் இல்லை. அந்த 2 கிலோ நெல்லைகூட இலவசமாகவே தருகிறோம். கூலி ஆள் தேவை இல்லாமல், நாமே நாற்றங்கால் தயார் செய்து நாற்று விட்டுவிடலாம்.

நடவுக்கு முன்னதாக நாற்று பறிப்பதற்கு ஏக்கருக்குக் குறைந்தது ரூ.2 ஆயிரம் தேவைப்படும். இயற்கை வழி விவசாயத்தில் அந்தச் செலவும் இல்லை. ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லி மருந்துகளோ வாங்கத் தேவையில்லை. மக்கிய தொழு உரம், எல்லோராலும் தயார் செய்யக் கூடிய பஞ்சகவ்யம் போன்றவற்றைப் பயன்படுத்தினால் போதும். அறுவடைப் பணிக்கு மட்டும் தற்போதைய முறையைப் போலச் செலவு செய்ய வேண்டியிருக்கும்” என்கிறார்.

மகசூல் எப்படி?

சாகுபடிச் செலவு குறைகிறது சரி, மகசூல் எப்படி இருக்கும்?

“ஒரு மாவுக்கு 8 மூட்டை, அதாவது ஏக்கருக்கு 24 மூட்டைக்குக் குறைவாகக் கிடைப்பதில்லை. அத்துடன் தமிழ்நாட்டில் இயற்கை வழி சாகுபடி முறையில் உற்பத்தியாகும் பொருள்களைச் சந்தைப்படுத்தும் பணியைத் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கூட்டமைப்பு செய்து வருகிறது.

கிரியேட் அமைப்பின் தலைவர் பேராசிரியர் பி.துரைசிங்கம், மேலாண்மை அறங்காவலர் இரா.பொன்னம்பலம் ஆகியோர் வழிகாட்டலில் கேரளத்தின் தணல், கர்நாடகத்தின் சகஜ சமர்தா, ஒடிசாவின் லிவிங் ஃபார்ம், மேற்கு வங்கத்தின் சேவா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதால் நாடு தழுவிய ஒருங்கிணைப்பு கொண்ட ஓர் இயக்கமாக எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது” என்று ஜெயராமன் கூறுகிறார்.

கிராமங்கள்தோறும் நமது நெல்லைக் காப்போம் இயக்கம் போன்ற முயற்சிகள் மலர்ந்தால் மறைந்துபோன நமது பாரம்பரிய வேளாண் முறை கூடுமானவரை உயிர்ப்பிக்கப்படும் என்ற நம்பிக்கை இப்போது துளிர்க்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்