கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ள சிறிய நீர் மின் திட்டத்தை நான்கு கிராமங்களின் பஞ்சாயத்தாரும், மூன்று மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மூலவரும், தாவரவியல் வல்லுநர்களும் மீனள விஞ்ஞானிகளும், இந்திய அறிவியல் கழகம் போன்ற அமைப்புகளும் எதிர்க்கிறார்கள். சிறிய நீர் மின் திட்டங்கள் சுற்றுச்சூழலைக் கெடுக்காதல்லவா, சமூகத்துக்குப் பயன் தரக் கூடியதல்லவா, பிறகு ஏன் எதிர்க்க வேண்டும்? தென் கன்னட மாநிலத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் ‘கிரீன்கோ’என்ற நிறுவனம் தொடங்க விரும்பும் 24 மெகாவாட் மின்னுற்பத்தித் திறனுள்ள நீர் மின் திட்டமானது, அந்த நிறுவனம் குறிப்பிடுவதுபோல சிறியதும் அல்ல, பசுமையானதும் அல்ல.
அந்தத் திட்டத்துக்குப் பெயர் ‘குக்கே முதல் திட்டம்’. குமாரதாரா நதி குண்டியா நதியுடன் சேர்ந்த பிறகு, பெருகும் புதிய ஆறு மீது இந்த மின் திட்டம் உருவாகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இரு வேறுபட்ட உயிரிப் பல்வகைமை கொண்ட ஆறுகள் என்றால், அவை குமாரதாராவும் குண்டியாவும்தான். ‘குக்கே முதல் திட்ட’த்துக்கு அடுத்தபடியாக ‘குக்கே இரண்டாம் திட்ட’த்தையும் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நீர்மின் திட்டம் அமலுக்கு வந்தால், ஆற்றின் நீர்ப்பிடிப்பு அதிகமாகி வனத்தின் பெரும் பகுதி நீரில் மூழ்கும் என்பதால், இப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டாக இத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று போராடிவருகிறார்கள். இந்த நீர்மின் திட்டத்தால் நீர்ப்பிடிப்புப் பகுதியே இருக்காது என்று ஆரம்பத்தில் வாதிட்ட ‘கிரீன்கோ’நிறுவனம், அதிகபட்சம் 21 ஹெக்டேர் நிலப்பரப்புதான் நீரில் மூழ்கும் என்கிறது. சூழலியலுக்கான மத்திய மையம் இந்தத் திட்டத்தின் அளவு, நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்தது. திட்டம் சிறியதாக இருந்தாலும் 388.71 ஹெக்டேர் நிலப்பரப்பு நீரில் மூழ்கிவிடும் என்று அது மதிப்பிட்டது. அந்த 388.71 ஹெக்டேரில் 110.1 ஹெக்டேர் பகுதி உயிரிப் பல்வகைமை கொண்ட இடங்களாக இருக்கும் என்றும் அதன் ஆய்வு எச்சரிக்கிறது.
குமாரதாரா ஆறானது உயிரிப் பல்வகைமையைப் பொறுத்தவரை அரிய பொக்கிஷமாகும். புதிய மீன் இனங்களும் பிற உயிரிகளும் இங்கே அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன. உத்தேச நீர்மின் திட்டப் பகுதிக்கு அருகிலேயே அபூர்வ மீன்களுக்கான இரண்டு மீனளக் காப்பகங்கள் இருக்கின்றன. குமாரதாரா ஆற்றில் 56 வகையான மீன் இனங்கள் வாழ்கின்றன. அவற்றில் 23 எப்போதும் இருப்பவை. 11 வகைகளைப் பத்திரமாகப் பாதுகாத்தால்தான் உண்டு. எட்டு வகைகள் பிற பகுதிகளில் அழிந்துவிட்டவை. பூமீன் (டெக்கான் மஹ்சீர்) என்று அழைக்கப்படும் மீன் இனம் பிற பகுதிகளில் அருகிவிட்டது. இந்த இடத்தில்தான் அவை அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. நீர்மின் திட்டம் நிறைவேறினால் இங்கும் அவை அழிந்துவிடும். குமாரதாரா ஆற்றில் நீர்மின் திட்டம் அமைய வேண்டாம், ஆற்றை வெறும் மீனளக் காப்பகமாகப் பராமரித்தாலே போதும் என்று நிபுணர்கள் கோரிவருகின்றனர். மீன்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்லப் பாதை அமைக்கவோ, அரிய மீன் ரகங்கள் ஆற்றின் கீழ்ப்பகுதியில் வாழவைக்கவோ உத்தேச நீர்மின் திட்டத்தில் வழியேதும் இல்லை.
அணைகள், ஆறுகள், மக்களுக்கான தெற்காசிய வலையம் (சாண்ட்ரப்) என்ற அமைப்பும் உள்ளூர் மக்களும், தூய்மையான வளர்ச்சிக்கான நடைமுறைத் திட்டம் என்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்தக் கேள்விகளை எழுப்பினர். “எவருக்கும் பாதிப்புத் தராத மின்னுற்பத்தித் திட்டம் என்கிறீர்களே, அரிய வகை மீன் இனங்களும் இதர உயிரிகளும் முதல் கட்டத்திலேயே அழியும் என்று தெரிகிறதே, இந்தத் திட்டம் அவசியம்தானா?” என்று கேட்டனர்.
குமாரதார ஆற்றிலோ நேத்ராவதி ஆற்றிலோ அதன் கிளை ஆறுகளிலோ அரிய வகை மீன்களோ, அழியும் நிலையில் உள்ள மீன்களோ, ஆபத்துக்குள்ளாகிவிட்ட மீன் இனங்களோ இல்லை என்று ‘கிரீன்கோ’நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது அப்பட்டமான பொய்.
இந்த நீர்மின் திட்டத்தால் ஆற்றில் உள்ள மீன்களுக்கு மட்டுமல்ல, அரிய வகை மரங்களுக்கும் ஆபத்து நேரிட்டிருக்கிறது. அரிய வகை ‘மதுகா இன்சிக்னிஸ்’மரங்கள் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்பகுதியில், குமாரதாரா ஆற்றின் கரையில், நீர் மின்னுற்பத்தித் திட்டத்துக்கான உத்தேச இடத்திலேயே அடையாளம் காணப்பட்டிருக்கிறது. ‘சிசுஜியம் டிரான்வர்கோரியம்’ உள்ளிட்ட அரிய வகை மரங்களும் உள்ளன. ஆனால், தூய வளர்ச்சிக்கான அமைப்பு என்ற அமைப்போ இப்பகுதியில் அரிய மரங்களும் இல்லை என்று கூறிவிட்டது.
இந்த நீர் மின்னுற்பத்தி உத்தேசத் திட்டங்களால் பனாஜா- குந்தூர் எல்லை வரையிலான வனப் பகுதியே அழியும் ஆபத்து நேரிட்டிருக்கிறது. மலநாடு கடகு வனவிலங்குகள் வலசைபோகும் வனப் பாதையும் இந்த இடம்தான். இந்த ஆற்றை ஒட்டியே அரிய சுரபுன்னைக் காடுகளும் சதுப்பு நிலங்களும் அமைந்துள்ளன. ஆனால், நீர்மின் திட்டம் வேண்டும் என்று சொல்பவர்களோ இப்பகுதியில் உலர்ந்த, பயன்படாத மரங்களும் புதர்களும் காட்டுக்கோரைகளும்தான் வளர்ந்துள்ளன என்கிறார்கள். இவற்றை அழித்தாலும் இவை மீண்டும் திரும்பத் திரும்ப வளர்ந்துகொண்டே இருக்கும் என்று வேறு கூறுகிறார்கள்.
இந்த ஆற்றுப் பகுதியில் நீர்மின் திட்டம் கொண்டுவருவது குறித்து இப்பகுதி மக்களுடன் நேரடியாகக் கலந்தாலோசித்து வெளிப்படையாகச் செயல்படவில்லை. இந்தத் திட்டம் குறித்தும் திட்டத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் முழு உண்மைகளைப் பத்திரிகைகள் வாயிலாக மக்களுக்குச் சொல்லாமல், உண்மைகளை மறைக்கிறது ‘கிரீன்கோ’. இந்தத் திட்டத்தால் மூழ்கிவிடும் என்று அஞ்சப்படும் தோல்பாடி கிராமம் உள்பட மூன்று பஞ்சாயத்துகளுக்குத் தெரிவிக்காமல், நாலாவதாக உள்ள பஞ்சாயத்தில் மட்டும் சுவரில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது இதற்கான அமைப்பு. 25 மெகாவாட் அல்லது அதற்கும் மேற்பட்ட உற்பத்தித் திறன் உள்ள திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கட்டாயம் ஒப்புதல் பெற வேண்டும் என்று சட்டம் இருப்பதால், அந்தத் துறையின் பரிசீலனைக்கே செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், உற்பத்தித் திறனை 24 மெகா வாட்டாக வைத்திருக்கின்றனர். இது அத்தோடு முடிவதில்லை. இந்தத் திட்டத்தின் நீர்ப்பிடிப்புப் பரப்பளவு முடியும் இடத்தில் அடுத்த திட்டம். அதன் நீர்ப்பரப்பு முடியும் இடத்தில் அடுத்த திட்டம் என்று சுமார் 44 சிறிய நீர் மின்னுற்பத்தித் திட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்போது புரிகிறதா, எத்தகைய நயவஞ்சகமான முயற்சிகள் இவை என்று. சட்டத்தையும் அரசு முகமைகளையும் ஒருங்கே ஏய்த்துச் சுற்றுச்சூழலை நாசமாக்குவதுதான் இந்தத் திட்டம்.
குதிரை குப்புறத் தள்ளியதுடன் நிற்காமல் குழியும் பறித்ததாம் என்கிற கதையாக, சூழலைக் கெடுக்காத தூய நீர்மின் திட்டம் என்று தங்களுடைய திட்டத்துக்குச் சான்று தர வேண்டும் என்றும் ‘கிரீன்கோ’கோரியிருக்கிறதாம். அரிய வகை மீன் இனங்களும் மரங்களும் பிற தாவரங்களும் பூச்சியினங்களும் பிற உயிரினங்களும் அழிக்கப்படக் காரணமாக இருக்கும் திட்டத்துக்குச் சூழலைக் கெடுக்காத தூய திட்டம் என்று பட்டம் வாங்கவும் முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்தச் சான்று தரும்போது, சூழலைக் கெடுக்காமல் திட்டமிட்டதற்காக கோடிக் கணக்கான ரூபாயும் மானியமாக மத்திய அரசால் தரப்படும்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிரிப் பல்வகைமையின் உயிர்ச் சங்கிலிகளை அறுத்துவிட்டு, விவசாயிகள், மீனவர்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை நாசப்படுத்திவிட்டு, இந்த மின் திட்டம் வரவிருக்கிறது. அத்துடன் காடுகளும் மலைகளும் ஆறுகளும்கூட அழியப்போகிறது. சிறிய மின் திட்டம், பசுமைத் திட்டம் என்ற அடைமொழிகளைப் பார்த்து மக்கள் மயங்கிவிடக் கூடாது; இயற்கையின் எதிர்கள் எந்த ரூபத்திலும் வரலாம்!
தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago