கிழக்கில் விரியும் கிளைகள் 42: நீலமணிக் கொத்தும் வெல்வெட் உண்ணியும்

By கு.வி.கிருஷ்ணமூர்த்தி

கோடை மழைக்காலத்தில் மரத்திலிருந்து கீழே உதிர்ந்த, நீலமணியை ஒத்த காயாம்பூக்களின் கொத்துகளுக்கிடையே இருந்து சிவப்பு வெல்வெட் போன்ற மூதாய் பூச்சி (Red velvet mite) வெளிவருகிறது என்று சங்க இலக்கியப் பாடல் ஒன்று கூறுகிறது. இதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய உண்ணி. (“மணிமிடை பவளம் போல அணி மிக காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயல்மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப” அகநானூறு 374: 13-15).

வெல்வெட் உண்ணி

காயா மரத்தின் பூக்கள் கருநீல நிறத்தவை என்பதால் இந்த தாவரம் அஞ்சனம், அஞ்சனி தமிழில் மட்டுமின்றி, வேறு சில இந்திய மொழிகளிலும் அழைக்கப்பட்டது. (“செறியிலைக்காயா அஞ்சனம் மலர்” முல்லைப்பாட்டு 93). காயா முல்லை நிறப்பூ; செம்மண் அதற்கு உகந்த மண் (“அரக்கத்தன்ன செந்நில மருங்கிற காயாஞ் செம்மல்” அகநானூறு 14:1), கோடை மழையில் பூக்கும் (“கார் மலர்ப் பூவை” பரிபாடல் 13:42); கிளை முழுவதும் பூத்து கொத்தாகக் காணப்படும் (“புல்லென் காயா பூக்கெழு பெருஞ்சினை” குறுந்தொகை 183:5; “மணியெனப் பன்மலர் காயாங் குறுஞ்சினை” நற்றிணை 242: 3-4); மணமுடையது, சங்க கால மக்கள் அணிந்தது (“மணிமருள் பூவை அணிமலர்” அகநானூறு 134:3; “மணி புரை உருவின காயா” கலித்தொகை 101: 5), எனினும் பரவலாக இந்த மலர் அணியப்படவில்லை.

காயா, காயாம்பூ, காகா, காசாம்பூ, அஞ்சனம், அல்லி, புன்காலிவச்சி என்ற பல தமிழ்ப் பெயர்களால் அழைக்கப்படுவது காயா. இதன் தாவரப் பெயர்: மிமிசைலான் அம்பெல்லேட்டம் Memecylon umbellatum, தாவரக் குடும்பம்: Melastomaceal. மணிமலர் என்றும் காயா என்றும் (21 பாடல்களில்), பூவை என்றும் (6 பாடல்களில்) சங்க இலக்கியத்தில் இந்த மலர் பரவலாகச் சுட்டப்பட்டுள்ளது.

காயாவின் அழுத்தமான கருநீல நிறத்தை தமிழ்ப் புலவர்கள் திருமாலுக்கு உவமையாக்கினர். “பூவை விரிமலர் புரையும் மேனியை” (பரிபாடல் 1:6,7), “பூவைப் புதுமலர் ஒக்கும் நிறம்” (நான்மணிக்கடிகை 1), “பூவைப் பூவண்ணன் அடி” (திரிகடுகம் 2:4), “காயாம் பூ வண்ணன்” (கூர்ம புராணம்: 4), “காயா மலர் நிறவா” (பெரிய புராணம் : 1:5:6) போன்ற பாடல் வரிகள் இதைச் சுட்டுகின்றன.

(அடுத்த வாரம்: பூவையர்க்குப் பெயர் தந்த மலர்)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் | தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்