பறவைகள், சிற்றுயிர்களின் பெயர் தெரியாமல் நண்பர்களோடு சேர்ந்து படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில், வார இறுதிகளில் ஒளிப்படக் கருவியைத் தூக்கிக்கொண்டு திறந்த வெளிகளைத் தேடிப்போவது வழக்கம். சென்னையின் புறநகர்ப் பகுதியான மீஞ்சூருக்கு ஒரு முறை சென்றிருந்தோம். அப்போது மீஞ்சூரும் அதைச் சுற்றியிருந்த கிராமங்களும் விளைநிலங்கள், பனை மரங்கள், தோட்டங்கள், புதர்ச் செடிகள் என அழகிய நிலப்பரப்பாக இருந்தன.
தேன்சிட்டு, தையல்சிட்டு, கதிர்க்குருவிகள், பனங்காடைகள், நெட்டைக்காலிகள் என பறவைகளையும் கூடவே பூச்சிகளையும் அங்கே தேடுவது எங்களுடைய வழக்கம். அதில் பாதிக்கும் மேற்பட்டவற்றுக்குப் பெயரே தெரியாமல் படங்களை மட்டும் பதிவு செய்து கொண்டிருப்போம்.
ஒரு முறை நீண்ட மெல்லிய உடல், ஒளி ஊடுருவும் கண்ணாடி போன்ற இறகுகளுடன் வேகமாகப் பறந்து சென்று சிறு கிளைகள், கொடிகளில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பூச்சி, எங்கள் கவனத்தை ஈர்த்தது. அது இணை சேர்ந்த காட்சியையும், சிறு வண்டுகள், பூச்சிகளைப் பிடித்தபடி இருந்த காட்சிகளையும் நண்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு சிரமப்பட்டுப் படம் எடுத்தோம். அப்போது பூச்சிகளை உருப்பெருக்கிக் காட்டும் Macro Lens போன்ற சிறப்பு ஆடிகள் ஏதும் எங்களிடம் இல்லாத காலம். ஒளிப்படச் சுருளைக் கழுவிப் பார்த்தால் மட்டுமே, படங்கள் தேறுமா, தேறாதா என்பது தெரியும் என்பதால் ஒருவிதப் பதற்றத்துடனே படங்களை எடுத்துக்கொண்டிருப்போம்.
வண்டு, சிறு பட்டாம்பூச்சிகளைப் பிடிப்பதற்கு வசதியான நீண்ட குழல் போன்ற அமைப்பு, அந்தப் பூச்சியின் வாய்ப் பகுதியில் இருந்தது. மெல்லிய முள்முடிகள் கொண்ட உறுதியான கால்கள், உடலின் மேற்பகுதி அடர் பழுப்பு நிறத்திலும், உடலின் கீழ்ப்பகுதி இளம் பழுப்பு நிறத்தில், கறுப்பு நிறப் பட்டைகளுடனும் காணப் பட்டது. தலையில் மென்மயிர்களுடன் சிறு உணர் கொம்புகளும் இருந்தன. ஒளி ஊடுருவும் இறகுகளைக் கொண்ட இப்பூச்சியைப் பல முறை படம் எடுத்தும்கூட, அதற்கான பெயர் மட்டும் சட்டென்று பிடிபடாமல் இருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூச்சிகளுக்கான வழிகாட்டி நூலில் இதன் ஆங்கிலப் பெயரையும், 'காட்டுயிர்' இதழ் வழியாக தமிழ்ப் பெயரையும் அறிய முடிந்தது. அதன் முக அமைப்பு காரணமாக சில பகுதிகளில் இது ‘கழுகு ஈ' எனப்படுகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் இயற்கை செழிக்கும் நன்மங்கலம் காப்புக் காட்டில், பத்தாண்டுகளுக்கு முன்பு ‘மஞ்சள் ஊசித்தட்டானை' (Coromandel Marsh Dart) காட்டு ஈ இரையாகப் பிடித்திருந்த காட்சியைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.
- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago