பட்டாசு ஒலிக்கு இங்கு வேலையில்லை: சூழலியலைப் பாதுகாக்கும் வேடந்தாங்கல் மக்கள்
நவம்பர் முதல் மார்ச் மாதங்களில் மட்டுமே இப்படிப் பறவைகள் வலசை வருகின்றன. இப்பகுதியில் கடந்த 1972-ம் ஆண்டு பட்டாசு வெடிக்க வனத்துறை தடை விதித்ததனால் இங்கே மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை.
சட்டத்திற்காக மட்டுமில்லாமல், பறவைகள் மீது கொண்ட அன்பின் காரணமாகவே பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடுகிறோம் என்கிறார் வேடந்தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவர் பிரசன்னா அரவிந்தன்.
அவர் மேலும் கூறியதாவது: எங்கள் கிராமத்தை நம்பி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் வருகின்றன. அவைகளின் எச்சத்தால், ஏரி நீரில் நைட்ரஜன் வாயு அதிகரிக்கிறது. வேளாண் நிலங்களுக்கு இயற்கை உரம் கிடைக்கிறது. எல்லோருக்கும் எங்கள் ஊரைத் தெரிந்திருப்பதற்குக் காரணம், இந்தப் பறவைகள்தான்.
இந்தப் பறவைகளை நாங்கள் வெடிவைத்து விரட்ட விரும்பவில்லை. வாழ வைக்கவே விரும்புகிறோம். தீபாவளியின்போது இரவில், கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சாட்டை உள்ளிட்டவற்றை மட்டுமே கொளுத்தி, வண்ண ஒளியைக் கண்டு மகிழ்ந்து, எங்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறோம் என்றார் அவர்.