கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா?

By பாமயன்

தேயிலையில் டி.டி.ட்டி (D.D.T.) பூச்சிக்கொல்லி இருப்பது பற்றி கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட ஆய்வுக்கு எதிராக, இந்தியத் தேயிலை வாரியம் அளித்த பதில் அறிக்கையில் இந்தியாவில் டி.டி.ட்டி. பூச்சிக்கொல்லியின் விவசாயப் பயன்பாடு 1989-லேயே தடை செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்து இருந்தது.

மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதால்தான் டி.டி.ட்டி. பூச்சிக்கொல்லியின் விவசாயப் பயன்பாடு உலகெங்கும் செய்யப்பட்டது. ஆனால், அது நம்மிடையே முற்றிலுமாக இல்லாமல் இருக்கிறதா? நம்மைச் சுற்றிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

கொசு மருந்து

அலகாபாத் அருகில் உள்ள திரிவேணி சங்கமம் எனப்படும் முக்கூடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் கும்பமேளா உட்பட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும், மழைக் காலங்களில் நம் வீடு, சுற்றுப்புறத்தில் கொசுவைக் கொல்வதற்காகப் பீய்ச்சி அடிக்கப்படும் புகையைத்தான் படத்தில் பார்க்கிறோம். இது டி.டி.ட்டி எனப்படும் டைகுளோரோ டைஃபினைல் டிரைகுளோரோ ஈதேன் எனப்படும் கொல்லி ஆகும். இது உலகின் பல நாடுகளில் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஏன், நமது நாட்டிலும் அறைகளுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் விற்கப்படுவது. ஆனால், நமது அரசே மக்கள் மீது இதை ஏன் தெளிக்கிறது?

தமிழ் மொழிபெயர்ப்புக் கோளாறுகளில் தலையாயவற்றில் இந்தப் ‘பூச்சிக்கொல்லிமருந்து' என்ற சொல்லும் ஒன்று. கொல்லியும் மருந்தும் ஒன்றான அவலம் தமிழில்தான் நடந்தேறியுள்ளது. பூச்சிகளை மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களையும் கொல்லும் இந்தப் பொருளுக்குத் தமிழக வேளாண்மைத் துறையும், அறிவியலாளர்களும் வைத்த பெயர் பூச்சி கொல்லி மருந்து..?

ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

டி.டி.ட்டி. 1880-களில் கண்டறியப்பட்டாலும், 1940-களில்தான் சந்தைக்கு வந்தது. அதன் கடும் விளைவுகளை 1960-களிலேயே வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ரேச்சல் கார்சன் (அவருடைய மவுன வசந்தம் புத்தகம் அதற்கான ஆவணம்). அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றம், உலகம் முழுவதும் அதற்கு எழுந்த எதிர்ப்பு ஆகியவற்றால் பல நாடுகளில் இது தடை செய்யப்பட்டது. ரேச்சல் கார்சன் வாழ்ந்த அமெரிக்க நாட்டிலும் முற்றிலும் தடை செய்யப்பட்டது. நார்வே, சுவீடன், ஹங்கேரி என்று பல ஐரோப்பிய நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டது.

பூச்சிகளைக் கொல்வதற்கு, அதாவது கொசுக்களை முதன்மையாகக் கொல்வதற்கு இன்றைக்கு இது பயன்படுத்தப்பட்டாலும், இது ஒரு வகை ஊடுருவிப் பாயும் நஞ்சு. இந்த நஞ்சு நமது சூழலில் தொடர்ச்சியாகத் தங்கி இருக்கும், கிட்டத்தட்ட 20 நாட்கள்வரை இருக்கும். நீர் வழியாக, காற்று வழியாக பல இடங்களுக்கும் இது பரவிக்கொண்டே இருக்கும். இதைப் பயன்படுத்தும்போது கையுறைகள், முகமூடிகள் அணிந்துகொள்ள வேண்டும் என்று ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், நடைமுறையில் இவை எதுவுமே பின்பற்றப்படுவதில்லை என்பதுதான் சோகம்.

என்ன நடக்கிறது?

எடுத்துக்காட்டாக, இந்த வேதிப்பொருள் கொசுவை ஒழிப்பதற்காகப் புல்வெளிகளில் தெளிக்கப்படுவதாகக் கொள்வோம். இது உடனடியாகத் தனது வீரியத்தை இழப்பதில்லை என்பதால், மெல்லக் கரைந்து அருகில் உள்ள நீர்நிலைகளுக்குச் செல்லும். அங்குள்ள தாவர மிதவை உயிர்களான பாசிகளில் சேரும்போது, அவற்றில் பத்து மடங்கு கூடுதலாகச் சேரும். மீண்டும் அவை மீன்களால் உண்ணப்படும்போது, மேலும் பத்து மடங்கு உயரும். அதன் பின்னர் அவை பறவைகளால் உண்ணப்படும்போதும், பிற பாலூட்டிகளால் உண்ணப்படும்போதும் பத்து பத்து மடங்காக உயர்ந்துகொண்டே போகும். இதற்கு உயிரிய ஊத்தம் (Biomagnification) என்று பெயர்.

அதாவது, புல்லில் 0.04 பி.பி.எம். (10 லட்சத்தில் ஒரு பங்கு - part per million - ppm) இருக்கும் டி.டி.ட்டி பாசிகள், மீன்கள், பறவைகள், பாலூட்டிகள் என்று பயணித்து 13.8 பி.பி.எம். அளவுக்கு உயர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக மிகக் கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

என்ன பாதிப்பு?

சரி, இந்த டி.டி.ட்டி. என்ன மாதிரியான தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது?

மார்பகப் புற்றுநோய், அவற்றுடன் கூடிய புற்றுக் கட்டிகளை உருவாக்குவதில் இது முதன்மைப் பங்கு வகிக்கிறது. ஆண் மலட்டுத் தன்மைக்குக் காரணமாக அமைகிறது. குறைவான எடையுடன் கூடிய குழந்தைப் பேறு, ஈரல் சிதைவு என்று மிக நுட்பமான, சீர்செய்யக் கடினமாக நோய்களை உருவாக்குவதில் முதன்மை பெறுகிறது.

விளையாட்டுப் போட்டிகளில் முதலிடத்தைத் தொடுகிறோமோ, இல்லையோ டி.டி.ட்டி. பூச்சிக் கொல்லி தயாரிப்பில் உலகிலேயே முதலிடம் இந்தியாவுக்குத்தான். இந்துஸ்தான் இன்செக்டிசைடு லிமிடெட் என்ற நிறுவனம் ஆண்டுக்கு ஏறத்தாழ 3,000 டன்களுக்கு (டன் = ஆயிரம் கிலோ) மேல் உற்பத்தி செய்கிறது. இவை மலேரியா ஒழிப்பு என்ற பெயரில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் தலையில் கொட்டப்படுகின்றன. இதன் விளைவாகப் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாத கொடூர நோய்கள் பெருகுகின்றன.

தடைக்கு இந்தியா எதிர்ப்பு

டி.டி.ட்டியை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட 2013-ம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற ஸ்டாக்ஹோம் மாநாட்டு தீர்மானப்படி எடுக்கப்பட்ட முயற்சியால், 2020 ஆண்டுக்குள் அனைத்து நாடுகளிலும் இதைத் தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது இதை, இந்தியா எதிர்த்தது. முற்றிலும் தடை முடியாது என்று கூறிவிட்டது.

கொசு ஒழிப்பு என்ற பெயரில் பூமிப் பந்தை அழிக்கும் முயற்சியைத் தொடர்வது என்று நமது ஆட்சியாளர்கள் முடிவு செய்துவிட்டார்கள். மலேரியாவுக்கான காரணம் கொசு, கொசுவுக்கான காரணம் சாக்கடை, அதை நீக்காமல் குறிப்பாகச் சாக்கடைகளில் தேங்கும் ஞெகிழிப் பைகளைத் தடை செய்யாமல் தூய்மை இயக்கம் பற்றி பேசி என்ன பயன்? அறுவை சிகிச்சைக்குப் பதிலாகப் புண்ணுக்குப் புனுகு போடும் வேலை தீர்வாகாது, நமது ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?

கட்டுரையாசிரியர், சுற்றுச்சூழல் எழுத்தாளர் மற்றும் இயற்கை விவசாயி, தொடர்புக்கு: adisilmail@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்