தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 18: கால்நடைகளின் இலவச சேவை

By பாமயன்

வயல்களில் களைகளை அகற்றுவதற்காக நச்சுத்தன்மை வாய்ந்த களைக்கொல்லிகளைப் பலரும் பயன்படுத்துகின்றனர், வேறு சிலரோ ஏகப்பட்ட செலவு செய்து ஆட்களைக்கொண்டு களையெடுப்பதையே ஒரு தனி வேலையாகச் செய்கின்றனர். புல் வெட்டும் எந்திரங்களைக் கொண்டு புல்லை வெட்டி தள்ளுகின்றனர்.

இதனால் பொருள் இழப்பும், மண்வள இழப்பும் ஏற்படுகிறது. ஆனால் கோழிகளுக்கும் ஆடுகளுக்கும் உணவாகும் ஒரு மூலப்பொருள் களைகள். ஏற்கெனவே அவை அந்த வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

கவாத்து பணி

செம்மறி ஆடுகள் மேயும் தன்மை கொண்டவை, முயல்களும் அதேபோல மேயும் தன்மை கொண்டவையே. இவற்றைக்கொண்டு புல்வெட்டும் வேலையை (mowing) செய்ய முடியும். செம்மறிகள் மேய்ந்து தின்பவை என்றால், வெள்ளாடுகள் ஆய்ந்து (browsing) தின்பவை. எனவே வெள்ளாடுகளைக்கொண்டு தழை வெட்டும் வேலையை, அதாவது கவாத்து (pruning) செய்ய முடியும்.

நம் முன்னோர் வரகு தானியத்தை விதைத்துவிட்டு அவை சற்று வளர்ந்த பின்னர் ஒரே சீராக விளைச்சல் தருவதற்காக வெள்ளாடுகளை விட்டு மேய்த்த தகவல்களை மூத்த உழவர் பெருமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நுட்பம் சில வகை நெற்பயிர்களுக்கும் பின்பற்றப்பட்டது உண்டு. ஏன் கொய்யாத் தோப்புகளில்கூட ஆடுகளை வைத்துக் கவாத்து செய்துகொள்ள முடியும்.

மண்ணைக் கொத்தலாம்

தோண்டும் வேலையில் மிகத் தேர்ச்சி கொண்டவை கோழிகள். இவை மண்ணைக் கிளறித் தமக்கு வேண்டிய புழுக்களை, பூச்சிகளை உணவாக்கும். நமது உழவரும் கொளுத்தும் வெயிலில் மண்ணைக் கிளறிக் காய்கறி தோட்டம் போட அரும்பாடுபடுகிறார். கோழிகளைக் கொண்டு மண் கொத்தும் வேலையை (digging) செய்துகொள்ள முடியும். செச்லாட்டன் போன்றவர்கள் இந்த நுட்பத்தைக் கடைப்பிடிக்கின்றனர். எங்களுடைய அடிசில் சோலை பண்ணையில்கோழி வண்டிகள் மூலம் மண் கிளறும் வேலை நடக்கிறது. இப்படியாக, கோழிகளும் நமக்கு வேலை செய்கின்றன.

அவற்றிடமிருந்து நாம் வேலை வாங்குவது ஒரு புறம் இருக்க, அவற்றுக்குச் செய்ய வேண்டிய சில உதவிகளையும் நாம் செய்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக, கோழிகள் பறவை இனத்தைச் சேர்ந்தவை. கிளைகளிலும் கொப்புகளிலும் வாழும் இயல்பு கொண்டவை. உயரமான இடத்தில் வாழ முனைபவை. அவற்றுக்குக் கீரிகள், எலிகள் போன்ற விலங்குகளால் ஆபத்து நேரலாம் என்பதே காரணம். எனவே, அவற்றிடமிருந்து தப்ப மரங்களில் வாழும் தன்மையை அவை வளர்த்துக்கொண்டுள்ளன.

குஞ்சுகள் தாயைவிட்டுப் பிரிந்த பின்னர் அவை தங்குவதற்கு மரக்கிளைகளைப் போன்று உயரமான அமைப்புகளை உருவாக்கிக் கொடுத்துவிட்டால், அச்சமின்றி அவை தங்கும். கோழிக்கூட்டுக்கு அருகில் ஒரு போலி மரக்கிளை அமைப்பை வைத்துப் பாருங்கள், கோழிகள் அவற்றில் ஏறித் தங்குவதைக் காணலாம்.

மாடுகள் சுற்ற வேண்டும்

மாடுகளும் ஆடுகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரிய விரும்புபவை. அவற்றை நாம் கட்டிப்போட்டுப் பழக்கப்படுத்தியுள்ளோம். இதனால் அவற்றின் மகிழ்ச்சி குறைவதோடு, உற்பத்தித் திறனும் சேர்ந்தே குறையும். ஆகவே மாட்டுக் கொட்டகை அமைக்கும்போது அவை தடையின்றிச் சுற்றிவரும் வகையில் சற்றுப் பெரிய வளாகமாக வேலி அமைத்து, அவற்றுக்கு வேண்டியபோது நீர் அருந்தும்படியான ஏற்பாட்டைச் செய்தால் மாடுகள் மகிழ்ச்சியாக இருப்பதோடு உற்பத்தித் திறனும் அதிகரிக்கும்.

(அடுத்த வாரம்: கையிலிருக்கும் வெண்ணெய்…)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்